Header Ads



ரணிலின் பிடிவாதத்தில் தளர்வு..?

மத்திய வங்கியின் ஆளுனருக்கு கட்டாய விடுமுறை வழங்கி விசாரணைகளை நடாத்த இணக்கம் காணப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை மீளவும் நியமிப்பது தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

பதவிக் காலத்தை நீடிக்கக் கூடாது என சிவில் அமைப்புக்களும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஓர் பின்னணியில் மத்திய வங்கி ஆளுனரை கட்டாய விடுமுறையில் அனுப்பி, அவருக்கு எதிரான விசாரணைகளை உரிய முறையில் நடாத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளார்.சிவில் அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் பிரதமர் நடத்திய சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுனர் பதவிக்கு வேறு எவரையும் உடனடியாக நியமிக்காது, அர்ஜூன் மகேந்திரனுக்கு விடுமுறை வழங்கி விசாரணை நடத்தி அது வரையிலும் பதில் ஆளுனர் ஒருவரை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.புரவெசி பலய, சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புக்கள் பிரதமரை சந்தித்து இது குறித்து பேசியுள்ளன.

பாராளுமன்றின் அனுமதியுடன் நடைபெறும் விசாரணைகளில் அர்ஜூன் மகேந்திரன் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டால் அவரது பதவியை நீடிப்பதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மத்திய வங்கி ஆளுனரின் பதவிக் காலத்தை நீடித்தல் தொடர்பிலான சர்ச்சை இணக்கப்பாட்டை எட்டியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

No comments

Powered by Blogger.