Header Ads



சர்வதேச ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டி – நம்பிக்கை தரும் முயற்சி

 -Dr. Aqil Ahmad S.-


(குறிப்பு - கட்டுரையாளரினால் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பப்பட்ட இந்த கட்டுரை மிக நீண்டது. அதனால் இங்கு சுருக்கித் தருகிறோம்)

துருக்கியின் சமயவிவகாரங்களுக்கான தலைவரின் காரியாலயத்தினால் கடந்த மே மாதம் 28, 29, 30ம் திகதிகளில் The International United Hijri Calendar Congress என அழைக்கப்படும் ஒரு மாநாடு இஸ்தன்பூலில் நடைபெற்றிருக்கின்றது. இம்மூன்று நாள் மாநாட்டில் 50 நாடுகளைச் சேர்ந்த மார்க்க அறிஞர்கள், வானியல் அறிஞர்கள் மற்றும் தீர்மனம் மேற்கொள்ளும் அதிகாரம் பெற்றவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஹிஜ்ரி நாட்காட்டி தொடர்பாக தற்போது உலகில் உள்ள நிலவரங்கள் வழிமுறைகள் கருத்தியல்கள், ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டியை நோக்கி நகர்வதில் உள்ள சவால்கள் மற்றும் அவற்றை தாண்டுவதற்கான சாத்தியவழங்கள் ஆகியவை விரிவாக ஆராயப்பட்ட இம்மாநாட்டின் இறுதியில் எவ்வகையான ஒரு நாட்காட்டி முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்ற வாக்கெடுப்பின்போது “ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டி – United Hijri Calendar” அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்பது பெரும்பான்மையினரது வாக்காக காணப்பட்டது. இது அல்லாஹ் செய்த மிப்பெரும் அருளாகும். பல்துறை சார்ந்தோர் இணைந்து கலந்தாலோசனை செய்து ஒரு தீர்வை நோக்கி நகர்ந்தபோது அல்லாஹ் தீர்வு எட்டப்படும் ஒரு முடிவின்பால் வழிநடாத்தியிருக்கின்றான். மண்ணவர்களின் இஜ்திஹாதை விண்ணவன் அங்கீகரித்திருக்கின்றான். அல்ஹம்துலில்லாஹ்.

விதிமுறைகள்
1. வெற்றுக் கண்களால் அல்லது வானியல் உபகரணங்கள் கொண்டு தலைப்பிறை காணப்படுவதனை இந்த ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டி அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
2. தலைப்பிறை விடயத்தில் பின்பற்றப்படும் இஹ்திலாபுல் மதாலி – எல்லைகளில் வேறுபாடு எனும் கருத்தியல் பின்பற்றப்படாது.
3. இஸ்லாமிய மூலாதாரங்களும் விதிகளும், திருத்தமான வானியல் விதிகளும் ஒன்றுடன் ஒன்று முரண்படாது என்பதனால் வானியல் மற்றும் இஸ்லாமிய விதிகள் இரண்டும் இதில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளன.

இம்மாநாடானது துருக்கியின் சமய விவகாரங்களுக்கான தலைவரின் காரியாலயத்திற்கு பின்வரும் பரிந்துரைகளைச் செய்துள்ளது.
1. எதிர்வரும் 10 வருடங்களுக்கான ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டியைத் தயாரிப்பதற்கும், அதனை அச்சுவாகனமேற்றி உலகெங்கும் விநியோகிப்பதற்குமான ஒரு அறிவியல் அதிகாரசபையை உருவாக்குதல்.
2. வானியல் ஆய்வு மையப் பணிகளை மேற்கொள்வதற்கும், தொடர்ந்தும் சந்திரனின் நடமாட்டத்தை ஆராய்ந்து தேவையான தகவல்களை வழங்குவதற்குமான ஒரு குழுவை அமைத்தல்.
3. அங்கீகரிக்கப்பட்ட ஹிஜ்ரி நாட்காட்டிக் கலாச்சாரத்தை பரப்புவதற்கும், அது சம்பந்தமான பயிற்சிகள் மற்றும் மக்கள் உறவாடலை ஏற்படுத்துவதற்குமான ஒரு அதிகார சபையை ஏற்படுத்துதல்.

அத்தோடு இம்மாநாடானது பின்வரும் முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளது.
1. இஸ்லாமிய நாடுகளின் அதிகாரிகளையும், சமய விவகாரங்களுக்கான நிறுவகங்களையும் ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டியை உள்வாங்குமாறும் அதன் மூலம் இஸ்லாமிய உம்மத்தின் ஒருமைப்பாட்டுக்காக பணியாற்றுமாறும் ஆலோசனை வழங்குகின்றது.
2. முஸ்லிம் உலகில் உள்ள நாட்காட்டி தயாரிப்பாளர்ளை ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டியை உள்வாங்குவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை ஒருமைப்படுத்த முன்வருமாறு அழைக்கின்றது.
3. முஸ்லிம் அல்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம் சமூகங்களை ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டியை உள்வாங்குவதன் மூலம் முஸ்லிம் உம்மத்துடன் ஒன்றிணைந்து செல்லுமாறு ஆலோசனை வழங்குகின்றது.
4. முஸ்லிம் உலகிற்கான ஒரே நாட்காட்டியாக ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டியை அங்கீகரிக்கச் செய்வதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு ஒன்றியத்தின் நாடுகளின் தலைமைத்துவத்திற்கு இந்த நாட்காட்டியை முன்வைக்குமாறு இந்த மாநாடு ஆலோசனை வழங்குகின்றது.

சவால்கள்

இந்த முயற்சியானது துருக்கியின் ஏற்பாட்டில் நடைபெற்றிருப்பது மிகப்பெரும் சவாலா விளங்கப் போகின்றது.
இற்றைக் காலம் வரை முஸ்லிம் உம்மத்தின் தலைமை நாடாக தன்னைச் சித்தரித்துக் கொண்டிருந்த சஊதி அரேபியாவினால் செய்யப்படாத முஸ்லிம் உம்மத்தை ஒன்றிணைக்கும் இம்முயற்சியானது அண்மைக்காலத்தில் முஸ்லிம் உலகத்தில் விமர்சனங்களுக்கு மத்தியிலும் நம்பிக்கை தரும் சக்தியாக மீண்டெழுந்துகொண்டிருக்கும் துருக்கியினால் மேற்கொள்ளப் பட்டிருப்பது சஊதி நல அரபுலகில் ஆபத்தான ஒரு விடயமாக பார்க்கப்படும் வாய்ப்பிருக்கின்றது.
ஐரோப்பாவின் நோயாளி என வர்ணிக்கப்பட்ட துருக்கி அண்மைய வரலாற்றில் தன்னை ஆரோக்கியமாக கட்டமைத்துக்கொண்டு தலைநிமிர்ந்து நின்று ஐரோப்பிய யூனியயையே தன்னை அண்ணார்ந்து பார்க்கவைக்கும் அளவுக்கு நிலைமைகளை மாற்றியிருக்கின்றது. இந்நிலையில் முஸ்லிம் உலகில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்த துருக்கி தலைமைத்துவம் வழங்கியிருப்பது எதிர் கால ஐரோப்பாவுக்கு ஆபத்தானதாக பார்க்கப்படலாம்.
துருக்கியின் வளர்ச்சியும் இறையாண்மை மிக்க செயற்பாடுகளும் அண்மைக்காலங்களில் ஈரான் மற்றும் அதன் நேசநாடுகளுக்கு சவாலாக அமைந்திருக்கின்றன. முஸ்லிம் உம்மத்தில் துருக்கி முக்கியத்துவம் பெறுவதென்பது இந்நாடுகளின் நலன்களுக்கு ஆபத்தான ஒரு விடயமாக பார்க்கப்படலாம்.

இக்காரணங்களினால் இந்த ஒருமித்த ஹிஜ்ரி நாட்காட்டியானது அதனது அமுலாக்கத்தில் அரபுலகிலிருந்தும், பாரசீகம், தூரகிழக்கு மற்றும் மேற்குலகிலருந்தும் பாரிய சவால்களுக்கும், குழிபறிப்புக்கள் மற்றும் துரோகத் தனங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி ஏற்படலாம்.

மேலும் தமது முகாம்களை விஸ்த்தீரணப்படுத்துவதற்காகவும், பலப்படுத்துவதற்காகவும் பிறை தொடர்பான வியத்தைக் கையாண்டவர்களும், மன்னராட்சி முறையை சுன்னாவுக்கு மாற்றமானது என்பதனையும், அது இஸ்லாமிய உம்மத்தில் ஏற்படுத்தப்பட்ட நூதனம் என்றும் கண்டிக்கத் தவறியவர்ளும் உஸ்மானிய கிலாபத்தின் ஓட்டைகளைத் துருவித் தேடி சேறடிக்கவும் செய்வார்கள்.
கிலாபத்தினாலும் கலீபாவினாலுமே முஸ்லிம் உம்மத்தைக் கட்டுப்படுத்த முடியும். இன்று கிலாபத் இல்லை கலீபாவும் இல்லை. நாட்காட்டிக்காக மட்டும் ஒரு தலைமைத்துவம் என்பது நபிவழிக்கு மாற்றமானது போன்ற இன்னும் பலவாறான பித்தலாட்டங்களும் கட்டவிழ்த்தப்படலாம்.

இவற்றின் மூலம் இன்று ஏற்பட்டிருக்கும் ஒருமுகப்படுத்தலை சிதைப்பதற்கான முயற்சிகள் உம்மத்துக்குள்ளிருந்தே மேற்கொள்ளப்படுவதற்கு தாராளமாகவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

எது எவ்வாறிருப்பினும் அல்லாஹ் அவனது மார்க்கத்தைப் பூரணப்படுத்தி பொருந்திக் கொண்டிருக்கின்றான். அதனை அவனே பாதுகாப்பான். அல்லாஹ் முஸ்லிம் உம்மத்தை ஒருமுகப்படுத்தும் இம்முயற்சியை அங்கீகரித்து பாதுகாத்துத் தருவானாக என்று நாம் இந்த றமழானில் இறைஞ்சுவோம். 

1 comment:

  1. இலங்கையில் உள்ள முக்கிய அமைப்புக்களான ACJU,SLTJ, ACTJ, SLJI,............ போன்றவை இம்மாநாட்டிற்கு ஏன் போகவில்லை? அழைப்பிதழ் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.