முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர்க்கு ஆயுள் தண்டனை
எகிப்து நாட்டில் தடை செய்யப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் தலைவர் முகமது பேடீ உள்ளிட்ட 35 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
மேற்காசிய நாடுகளில் "அரபு வசந்தம்' என்ற அரசுக்கு எதிரான போராட்ட அலை கடந்த 2010-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கியது.
அதன் ஒரு பகுதியாக, எகிப்து நாட்டை 30 ஆண்டுகளாக ஆண்டு வந்த அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு எதிரான மக்கள் போராட்டம் 2011-ஆம் ஆண்டு வெடித்தது. அதையடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் முகமது மோர்ஸி பதவியேற்றார். எனினும், முஸ்லிம் சகோதரத்துவ அரசுக்கு எதிராக 2013-ஆம் ஆண்டு மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்தது. அதையடுத்து ராணுவம் மோர்ஸி ஆட்சியைக் கலைத்தது.
ஆட்சிக் கலைப்புக்கு எதிரான போராட்டங்களின்போது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினரின் வன்முறை பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்தச் சூழலில், இஸ்மாயிலியா என்ற நகரில் பாதுகாப்புப் படையினருக்கும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினருக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நிகழ்ந்த மோதல் தொடர்பாக நடைபெற்று வந்த வழக்கில், முகமது பேடீ உள்ளிட்ட 35 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Post a Comment