சவூதி அரேபியாவின் வீரம் - ஷிஆ கிளர்ச்சியாளர்கள் வீசிய ஏவுகணை, இடைமறித்து அழிப்பு
யேமன் கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியாவை நோக்கி திங்கள்கிழமை வீசிய ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவூதி கூட்டுப் படை தெரிவித்தது.
இதுகுறித்து ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி கூட்டுப் படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
யேமன் பகுதியிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி ஏவுகணை வீசப்பட்டது.
அந்த ஏவுகணை, சவூதி அரேபியாவின் வான்பாதுகாப்பு ஏவுகணை மூலம் இடைமறித்து அழிக்கப்பட்டது.
யேமனில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளைக் குலைக்கும் வகையில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
இதுபோன்ற தாக்குதல் தொடர்ந்தால், சவூதி கூட்டுப் படை எதிர்த் தாக்குதல் தொடுக்கும் என்று அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் யேமனிலிருந்து சவூதி அரேபியாவை நோக்கி வீசப்படும் இரண்டாவது ஏவுகணை இது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சவூதி அரேபியா மீது தனது நீண்ட தொலைவு ஏவுகணை மூலம் தாக்குதல் நிகழ்த்தியதாக கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான அல்-மஸீரா தொலைக்காட்சி செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து சவூதி அரேபிய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், யேமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் ஜிஸான் எல்லைப் பகுதியில் விழுந்ததாகவும், இதனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தனர். யேமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கு எதிராகப் போராடி வரும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்த நாட்டின் தலைநகர் சனா உள்ளிட்ட கணிசமான பகுதிகளைக் கைப்பற்றினர்.
ஷியா பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானும், முன்னாள் யேமன் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு ஆதரவான ராணுவப் பிரிவும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக, சன்னி பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியா மற்றும் அதன் தலைமையிலான வளைகுடா நாடுகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வந்தன.
இந்தச் சூழலில், சர்வதேச நாடுகளின் முயற்சியின் பலனாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
எனினும், அந்த ஒப்பந்தத்தை இரு தரப்பினருமே நாளுக்கு நாள் அதிக அளவில் மீறி வருவதாகக் கூறப்படுகிறது.

Post a Comment