"மினாராவை எட்டிவிட்ட இனவாதம்"
-விடிவெள்ளி ARA.Fareel-
கடந்த ஞாயிற்றுக்கிழமை மலைநாட்டின் தலைநகரில் சில இனவாத பௌத்த அமைப்புகள் ‘மினாரா’ நிர்மாணத்துக்கு எதிராக மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முஸ்லிம்களை அச்சமடையச் செய்துள்ளது. கண்டி நகரில் அமைந்துள்ள லைன் ஜும்ஆ பள்ளிவாசல் ‘மினாரா’ நிர்மாணத்துக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை ‘சிங்ஹலே’ அமைப்பு ஏற்பாடு செய்ததாகக் கூறப்பட்டாலும் இதன் பின்னணியில் மேலும் பல சிங்கள இனவாத அமைப்புகள் பங்குகொண்டுள்ளன.
கண்டி லைன் பள்ளிவாசலுக்கான காணி அன்றைய ஆட்சியாளர்களினால் 1905 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பிரித்தானிய ஆட்சியாளர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘மலே’ ஊழியர்களுக்கு தமது சமயக் கடமைகளை முன்னெடுப்பதற்காக இவ்விடத்தில் சிறிய பள்ளிவாசலொன்று நிர்மாணிக்கப்பட்டது. இப்பள்ளிவாசலை 1980 ஆம் ஆண்டில் புதிதாக நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான சட்ட ரீதியான அனுமதி கண்டி மாநகர சபையிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டது. 1980 இல் ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் 2000 ஆண்டிலே பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. நிதி வசூலிப்புக்கேற்ப கட்டம் கட்டமாகவே இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதனாலேயே பள்ளிவாசலைப் பூர்த்தி செய்ய 20 வருடங்கள் தேவைப்பட்டன.
1980 ஆம் ஆண்டு நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது தற்போது சர்ச்சைக்குரியதாகியுள்ள ‘மினாரா’ கட்டிட நிர்மாண வரை படத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. மினாராவுக்காக தனியான கட்டிட வரை படமே மாநகர சபையிடம் அனுமதிக்காக வழங்கப்பட்டிருந்தது.
கண்டி லைன் பள்ளிவாசல் நிர்வாகம் நீண்டகாலமாக ஆரம்பிக்கப்படாதிருந்த ‘மினாரா’ நிர்மாண வேலைகளை அண்மையில் ஆரம்பித்ததையடுத்தே இதற்கு எதிரான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கண்டி ஸ்ரீதலதா மாளிகையை விடவும் லைன் பள்ளிவாசலின் மினாரா (கோபுரம்) உயரமாக அமையப்போகிறது. இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது என்று எதிர்ப்புத் தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டத்தை அரம்பெபொல ரத்னசார தேரர் முன்னெடுத்தார். ஆர்ப்பாட்டக்காரர்கள் பள்ளிவாசலுக்கு முன்னால் உள்ள வீதியில் அமர்ந்திருந்து பள்ளிவாசலுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
இதனால் கண்டி நகரில் பதற்ற நிலையொன்று உருவாகியது. போக்குவரத்தையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடை செய்தனர். ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் முயற்சித்தபோதும் அது கைகூடவில்லை. மினாரா நிர்மாணப் பணிகளை நிறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் உத்தரவாதமளித்தாலே அமைதியாக முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். ஸ்தலத்துக்கு வருகை தந்த கண்டி மாநகர சபை அதிகாரிகள் பள்ளிவாசல் நிர்வாகத்துடனும் ஆர்ப்பாட்டக்காரர்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி சுமுகமாகத் தீர்த்து வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.
குறிப்பிட்ட நிர்மாணம் தொடர்பாக ஆராய்ந்து இறுதித் தீர்மாணம் மேற்கொள்ளும் வரை நிர்மாணப் பணிகளை மறு அறிவித்தல் வரை நிறுத்திக் கொள்வதாக அதிகாரிகள் பள்ளிவாசல் நிர்வாகத்திடம் கடிதமொன்றினைப் பெற்றுக் கொண்டனர். அந்தக் கடிதம் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காண்பிக்கப்பட்டதனையடுத்தே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதனையடுத்து முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்க தேரர்களை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடினர். அமைச்சருடன் கண்டி மாநகர சபை உறுப்பினர் இலாஹி ஆப்தீன், பள்ளிவாசல் தலைவர் அப்சால் மரிக்கார் ஆகியோரும் சென்றிருந்தனர்.
அமைச்சர் ஹலீம் மகாநாயக்க தேரர்களிடம் பள்ளிவாசல் கட்டிட நிர்மாண வரைபடத்தையும் காண்பித்தார். பள்ளிவாசலில் பாரிய கோபுரம் ஒன்று நிர்மாணிக்கப்படவில்லை. சிறியவோர் மினாராவே கட்டப்படுகிறது. பள்ளிவாசல் தலதா மாளிகையிலிருந்தும் மிகவும் தாழ்நிலப் பிரதேசத்திலே அமைந்துள்ளது என்பதை எடுத்து விளக்கினார். பள்ளிவாசலை அடையாளப்படுத்துவதற்கு மினாரா அவசியம் அமைக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தவர்கள் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். கண்டியில் லைன் பள்ளிவாசலுக் அருகில் அமைந்துள்ள சிட்டி சென்டரை விடவும் 15 அடிகள் குறைவாகவே மினாரா அமையும் என்பதையும் உறுதி செய்தார்.
மகாநாயக்க தேரர்களுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்த தேரர்கள் முஸ்லிம்கள் பௌத்தவர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் சிலவற்றை அமைச்சரிடம் எடுத்து விளக்கினார்கள். முஸ்லிம்களின் செயற்பாடுகள் பெரும்பான்மைச் சமூகத்தைப் பெரிதும் பாதிப்படையச் செய்துள்ளதாகக் கூறினார்கள். சில வாரங்களுக்கு முன்பு மஹியங்கனையில் பங்கரகம்மன முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எட்டுப் பேர் வெசாக் தினத்தன்று பௌத்த கொடியை எரித்து பௌத்தர்களைப் புண்படுத்தியிருக்கிறார்கள். மடவளை பாடசாலையில் எமது இனத்தவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். இவை இன நல்லிணக்கத்துக்குப் பாதகமானவை என்று தெரிவித்தார்கள்.
ஒரு இனத்தின் கொடியை தீயிட்டு எரிப்பது அதுவும் அவர்களது வெசாக் தினத்தன்று கண்டிக்கத்தக்கதாகும். முஸ்லிம்களின் இவ்வாறான செயற்பாடு நிச்சயம் பெரும்பான்மை சமூகத்துக்கும் எமக்கும் இடையில் முறுகல் நிலையினை உருவாக்கும். நாம் பெரும்பான்மைச் சமூகத்துக்கு எதிராக விரல் நீட்டுவதற்கு முன்பு எமது தவறான செயற்பாடுகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். அப்போது எமக்கு இடையே நல்லுறவுகளை வளர்க்க முடியும்.
அமைச்சர் ஹலீம் புனித ரமழானில் பெரும்பான்மை சமூகத்துடன் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ள விரும்பவில்லை. அதனால் பள்ளிவாசல் நிர்வாக சபை மினாரா நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ள உடன்பட்டுள்ளது.
மினாரா நிர்மாணம் தொடர்பில் கண்டி நகர பள்ளிவாசல்கள் சம்மேளனமும் கருத்து தெரிவித்துள்ளது. மினாரா நிர்மாணத்திற்கான சட்ட ரீதியான அனுமதியைப் பெற்றுக்கொண்டே வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன என நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், பள்ளிவாசல்கள் சம்மேளனம் உண்மையைத் தெளிவுபடுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.
கண்டி நகர பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் உறுப்பினர் ஒருவர் அளித்துள்ள விளக்கம் குறிப்பிடத்தக்கதாகும். அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போதுள்ள பள்ளிவாசலின் புதிய கட்டடம் 2000 ஆண்டிலே திறந்துவைக்கப்பட்டது. கண்டி மாநகர சபையிடம் மினாரா நிர்மாணத்திற்காக தனியாக வரைபடத்துடன் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் அனுமதி காலதாமதமாகியது. என்றாலும் முன்னாள் கண்டிமேயரே கண்டி நகர் அபிவிருத்தித் திட்டத்தினை முன்னெடுத்து வந்தார்.
மாநகர சபையின் அனுமதி கிடைக்கப் பெற்றிராவிடினும் அவர் வாய் மொழி மூலம் எமக்கு அனுமதி வழங்கியிருந்தார். ஒரு தடவை பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த முன்னாள் மேயர் பள்ளிவாசலைப் பார்வையிட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மினாரா நிர்மாண வேலைகளை ஆரம்பித்து அதனைப் பூர்த்தி செய்து கொள்ளுமாறும் அப்போது பள்ளிவாசல் அழகாக இருக்குமெனவும் தெரிவித்தார். அதற்கிணங்கவே மினாரா வேலை ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். எனவே நிர்மாணப் பணிகள் சட்டரீதியான அனுமதி பெற்றுக் கொள்ளப்படாமலே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கதாகும்.
பள்ளிவாசல் நிர்வாகம் சட்ட ரீதியான அனுமதியைப் பெற்றுக் கொண்டே நிர்மாண வேலைகளை ஆரம்பித்திருக்க வேண்டும். அவ்வாறு ஆரம்பித்திருந்தால் எவராலும் மினாரா அமைப்பதை தடைசெய்திருக்க முடியாது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்க முடியும். கோபுரம் (மினாரா) அமைக்கும் திட்டத்தை முற்றாக கைவிட்டு விடவில்லை. தற்போது திட்டமிடப்பட்டுள்ள உயரத்திலும் குறைவாக மினாராவை அமைப்போம் என நகர பள்ளிவாசல்கள் சம்மேளனம் திடமாக உறுதியாக இருப்பது வரவேற்கத்தக்கதாகும். நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கண்டி மாநகர சபையின் ஒத்துழைப்பு இதற்கு பெற்றுக் கொள்ளப்படும் எனவும் சம்மேளனத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
இவ்வாறான இலக்கை நோக்கிப் பயணிக்கும் தமது பயணத்தில் உறுதியாக இருக்கும் நிர்வாகிகளே இக்காலகட்டத்தில் பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படுகிறார்கள். வக்பு சபை இதுவிடயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
முன்னாள் கண்டி மேயர் மகேந்திர ரத்வத்த
கண்டி நகரின் முன்னாள் மேயர் மகேந்திர ரத்வத்த பள்ளிவாசல் ‘மினாரா’ நிர்மாணத்துக்கு தனது காலத்திலும் தனது பதவிக்காலத்துக்குப் பின்னரும் அனுமதி வழங்கப்படவில்லை என்பதை உறுதிசெய்திருக்கிறார். கண்டி நகரிலுள்ள தலதா மாளிகை உலக மரபுரிமைச் சொத்தாகும். அதனால் அதன் உயரத்தையும் மீறி வேறு மத ஸ்தலங்களை நிர்மாணிக்க முடியாது. அதற்கான அனுமதியும் வழங்கமுடியாது என அவர் தெரிவித்துள்ளார். லைன் பள்ளிவாசலில் கோபுரமொன்று அமைப்பதற்கு சில வருடங்களுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தலதா மாளிகையின் தியவதனே நிலமேயும் பஸநாயக்க நிலமே பலரும் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தப்பட்டன. தற்போது அனுமதியின்றி மீண்டும் வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள் என்றார்.

Post a Comment