Header Ads



தாஜூதீனின் படுகொலை, கோத்தவின் வீட்டில் சிறப்புக் கலந்துரையாடல் - மைத்திரி மௌனம்

தாஜூதீனின் படுகொலை தொடர்பாக உதவிக் காவற்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் ராஜபக்சாக்களின் சட்டவாளர்களுடன் கோத்தபாயவின் வீட்டில் சிறப்புக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கோத்தபாயவிற்கு நெருக்கமான அதிகாரியான அனுர சேனநாயக்க, கோத்தபாயவின் கட்டளைகளுக்கு இணங்கச் செயற்பட்டார் என்பதில் எவ்வித இரகசியமுமில்லை. அனுராவின் கைதானது கோத்தபாயவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோத்தபாயவைக் கைதுசெய்வதற்கான சரியான நேரத்திற்காக ஊழல் மற்றும் மோசடிக்கான இயக்குனர் டில்ருக்சி காத்திருப்பதை வெளிக்காட்டும் சுவரொட்டிகள் கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. கடந்த 4ஆம் நாள், இவ்வாறான சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட வேளையில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவராக கோத்தபாயவை நியமிக்க முடியும் என அமைச்சர் ஜோன் செனிவிரத்ன பரிந்துரை செய்திருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான தயார்ப்படுத்தலை மேற்கொள்வதாக கோத்தபாய தெரிவித்திருந்தார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவியொன்றை கோத்தபாயவிற்கு வழங்கவேண்டும் என்கின்ற கருத்தை வலியுறுத்தியவர் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன ஆவார்.

ஒரு வாரத்தின் முன்னர், எஸ்.பி.திசநாயக்க மற்றும் டிலான் பெரேரா உட்பட முக்கிய அமைச்சர்கள் சிலருடன் அமைச்சர் ஜோன் செனிவிரத்ன கலந்துரையாடலை மேற்கொண்டிருந்த போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதித் தலைவராக கோத்தபாய நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதற்கப்பால், சிறிலங்கா இராணுவப் படைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் ஜோன் செனிவிரத்ன தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு குழப்பகரமான அறிவித்தலை ஜோன் செனிவிரத்ன வெளியிட்ட போதிலும் மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் அமைதி காத்து வருகிறார். மைத்திரிக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஜோன் செனிவிரத்னவின் குழப்பகரமான அறிவித்தல் தொடர்பாக மைத்திரியிடம் தெரியப்படுத்திய போது, எவரும் தன்னிடம் இவ்வாறானதொரு பரிந்துரையை முன்வைக்கவில்லை என அவர் பதிலளித்தார்.

அனுர சேனநாயக்க கைதுசெய்யப்பட்ட பின்னர், கோத்தபாய வார இறுதி ஊடகத்தைத் தனது நலனுக்காகப் பயன்படுத்தியுள்ளதைக் காண முடியும். ஜோன் செனிவிரத்னவினால் வெளியிடப்பட்ட அறிக்கையைப் பயன்படுத்தி கோத்தபாயவிற்கு எதிராக விசாரணை ஒன்றைச் செய்வதானது காவற்துறைக்கு மிகவும் சாதாரணமான விடயமாகும். இதன்மூலம் கோத்தபாயவை அச்சுறுத்த முடியும்.  சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படக் கூடிய அதிகாரத்திலுள்ள கோத்தபாயவிற்கு எதிரான விசாரணை அல்லது கைதை துரிதப்படுத்த முயற்சிக்கும் போது இதற்கான எதிர்ப்புப் பலமாக இருக்கும் என்பதை காவற்துறையினர் நன்கறிவர்.

வாரஇறுதி ஊடகத்தை கோத்தபாய தனது பரப்புரைக்காகப் பயன்படுத்தியதானது காவற்துறையை அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்டதாகும். இராணுவ வீரர்களைக் காப்பாற்றுவதற்கான எந்தவொரு தேசிய பரப்புரையையும் தன்னால் ஆரம்பிக்க முடியும் என்பதையே கோத்தபாயவின் ஊடகப் பரப்புரையானது சுட்டிநிற்கிறது. கோத்தபாயவின் தலைமையின் கீழ் இராணுவ வீரர்களைப் பாதுகாப்பது தொடர்பான தேசியப் பரப்புரையானது கொழும்பிலுள்ள சிறி சம்புடத்வ ஜயந்தி மத்திய அரங்கில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பிற்கு முதல்நாள் கொஸ்கம இராணுவ முகாமில் பாரிய ஆயுதக்கிடங்கு வெடிப்பிற்கு உள்ளாகியது. இந்த வெடிவிபத்தானது தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது என இராணுவ வீரர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய பரப்புரையைப் பிரபலப்படுத்தும் ராஜபக்சவிற்கு ஆதரவான இணையத்தளம் செய்தி வெளியிட்ட அதேவேளையில், இதற்கான பொறுப்பை இராணுவக் கட்டளைத் தளபதி பொறுப்பேற்க வேண்டும் என கோத்தபாய தெரிவித்தார். இந்த வெடிவிபத்தால் பாரிய அழிவு ஏற்பட்டது.

இத்தகைய ஆபத்தான சூழலை முன்னுணர்ந்த போதிலும் கோத்தபாய ராஜபக்சவால் அரசாங்க நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்களைத் தருமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இழைக்கப்பட்ட ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக அரச அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த வேளையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கோத்தபாயவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களைத் தருமாறு கோரியிருந்தார்.

இராணுவ அதிகாரிகளும் இந்த அச்சுறுத்தலுக்குக் காரணமாக இருந்தார்களா என ரணில் சந்தேகம் கொண்டுள்ளார். ஊழல் மோசடி ஆணைக்குழுவானது இராணுவ அதிகாரிகளால் இழைக்கப்பட்ட ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்ய முற்பட்ட அதேவேளையில் இவ்வாறானதொரு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் அதனை வெறுமனே விபத்து எனக் கணிக்க முடியாது.

அவான்ற் கார்ட் ஆயுத விவகாரம் தொடர்பாக கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்ட போது, நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான கட்டளைகளை வழங்கிய பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலர் தயமந்தி ஜெயரட்ன  இவ்வாறான அச்சுறுத்தல்களை வழங்கக் கூடிய மிக முக்கிய நபராகக் கருதப்படுகிறார். ஊழல் மோசடி விசாரணைக் குழுவானது இவருக்கு எதிராக விசாரணை மேற்கொண்ட போது இவர் பதிலளிக்கவில்லை. இதன் பின்னர் இவர் பாதுகாப்பு அமைச்சிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவர் தனது பதவியையும் இழக்க வேண்டியேற்பட்டது.

இவர் பின்னர் வஜிரா அபயவர்த்தனவின் அமைச்சில் மேலதிக செயலராகப் பதவி வகித்தார். வஜிரா மீதும் அவான்ற் கார்ட் ஆயுத விவகாரம் தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டது. வஜிராவின் அமைச்சில் பணியாற்றிய தமயந்தி ஜெயரட்ன பின்னர் வெளிநாட்டிற்குச் செல்வதற்கான அனுமதியைப் பெற்றார். இவருக்கு இத்தகைய அனுமதி கொடுப்பதற்கு முன்னர் இவர் மீது ஊழல் மோசடி ஆணைக்குழுவால் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.

இவருக்கு எதிராக ஊழல் மோசடி விசாரணை மேற்கொள்ளப்பட்ட அதேவேளையில், ஊழல் மோசடி ஆணைக்குழுவின் முன்னால் கோத்தபாயவால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. இதன்பின்னர், கோத்தா மீதான விசாரணை மற்றும் கைதிற்கு நீதிமன்றால் தடைவிதிக்கப்பட்டது. ஒரு ஆண்டின் முன்னர் வழங்கப்பட்ட நீதிமன்றின் இக்கட்டளையை பிரதமர் ரணில் விமர்சித்தார்.

கோத்தபாயவின் ஒளித்துப் பிடித்து விளையாட்டின் ஆபத்துத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில்  – உபுல் ஜோசப் பெர்னான்டோ
வழிமூலம்       – சிலோன் ருடே
மொழியாக்கம் – நித்தியபாரதி

1 comment:

  1. Yahapalanaya has one set of liars and and MARA has another
    set of liars . This govt will have to prove what they said
    in public meetings . People are the judges . People had
    been told that there are more to this murder investigation,
    not just Anura Senanayake ! Is Anura a political victim or
    a real culprit ? If culprit , definitely he's not alone !
    Let us wait for the truth .

    ReplyDelete

Powered by Blogger.