Header Ads



நல்லாட்சிக்கு ஓர் எச்சரிக்கை - பேராசிரியர் சரத் விஜேசூரிய

தமிழில் - அபூபத்ஹான், ஹேனேகெதர-
 
புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான தேவை அரசாங்கத்திடம் காணப்படுகிறதா? அது தொடர்பாகப் பலமான சந்தேகங்களே எழுகின்றன. நாட்டின் சட்டத்தை மதிக்கும் பிரஜைகள் வெறுத்த ஆட்சி முறை மீண்டும் நிலைபெறுவது போன்றே நாளுக்கு நாள் தெளிவாகிறது. ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் மக்களாணை ஏன் கிடைக்கப் பெற்றது என்பதை அவர்கள் இருவரும் மறந்து விட்டனர் என்பது ஆட்சியின் அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் வெளிப்படுகிறது. ஒரு புறம் பொதுமக்கள் அழுத்தங்களுக்கு உட்படுகையில், மறுபுறம் ஊழல் முற்றிக் கொண்டு செல்லும் நிலை காணப்படுகிறது. கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள், குற்றங்களைத் குழி தோண்டிப் புதைக்கும் அடிவருடிகளின் கூட்டு தலைதூக்கிய வண்ணம் உள்ளமை அதனை விடவும் மிகவும் கடுமையான விடயமாக காணப்படுவது. இச்சந்தர்ப்பத்தில் நீதிமன்றமும், அரச சேவையும் அழிவுமிக்க பயணமொன்றை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளன. நாடு அராஜகத்தை நோக்கிப் பயணிக்கிறதா?
அரச ஆட்சி

ராஜபக்ஷவின் காலத்தில் அவர்களுக்கு விரும்பிய வகையிலேயே ஆட்சி இடம்பெற்றது என்பதனை விளக்க வேண்டிய அவசியமில்லை. அக்காலத்தில் அரச அதிகாரிகளில் குறிப்பிடத்தக்களவானோர் கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் அள்ளி சுருட்டிக் கொள்வதற்காக சுயவிருப்பிலேயே ராஜபக்ஷவாதிகளாக மாறினர் என்பது தெளிவானது. இன்னுமொரு குழுவினர் காமினி செனரத்தின் அடிவருடிகளாக மாறியதோடு, அவர்கள் காமினி செனரத்தினைப் பின்பற்றிச் சென்று பல்வேறு வழிமுறைகளிலான பலவாறான இலாபங்களை அடைந்து கொண்டதோடு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ராஜபக்ஷ அரசாங்கத்தின் அனைத்துப் பிழையான செயற்பாடுகளுக்கும் அப்பட்டமான முறையில் பங்களிப்பு செய்தனர். இன்னுமொரு குழுவினர் ராஜபக்ஷவினர் தான் எப்போதும் ஆட்சியில் இருப்பர் என நினைத்து ராஜபக்ஷவினரின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தலையசைத்தவாறு உதவி புரிந்து கொண்டிருந்தனர். இன்னுமொரு குழுவினர் மரணப் பீதி காரணமாக கோழைத்தனமாக உத்தரவுக்கு கீழ்படியும் அடிமைகளாக காணப்பட்டனர். அரச நிதி மற்றும் அரச சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தப்படும் நிலை  அரசாங்கத்தினுள் காணப்படுகிறது என்பதை இவர்கள் நன்கு அறிந்திருந்தனர். யாராவது ஊழல் இடம்பெறுவதை அறியாமல் இருந்ததாக கூறுவாறாயின், அவர்கள் முறையான பயிற்சி மற்றும் அறிவு இன்றி திருட்டு வழிகள் ஊடாக அரச சேவையில் நுழைந்தவர்கள் என்றே கூற வேண்டும்.
இலவசக் கல்வி எனப்படும் பொதுமக்களின் பணத்தின் துணையுடன் உயர் நிலைக்கு வந்த, பொதுமக்களின் பணத்தின் ஊடாக சம்பளம் பெறுகின்ற, நாட்டின் முக்கிய தொழில்சார் உத்தியோகத்தர்களான சிவில் உத்தியோகத்தர் குழுவொன்று தமது பங்களிப்புடன் இடம்பெற்றுள்ள ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும், தாம் தொடர்பாக சட்டத்தை அமுல்படுத்த வேண்டாம் என்றும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. இந்நிலைமை மிகவும் பயங்கரமானது. தம்மை சட்டத்தின் முன் நிறுத்தினால், அரசாங்கத்தின் இருப்போடு தொடர்புடைய பொறுப்புக்களைக் கையேற்பதில்லை என்று அவர்கள் அச்சுறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளமை அப்பாவித்தனமான ஒரு விடயமல்ல. இது ஊழலுக்கு சட்டரீதியான அனுமதியை மென்மேலும் கோருவதாகும்.
சிவில் உத்தியோகத்தர்கள் சிறியதோர் குழுவினர் அரசாங்கத்திற்கு விடுக்கும் சவாலை வெறுத்து, நல்லாட்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்கு அதிகமானோர் தயாராக உள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அவர்கள் எழுப்பும் வினாவானது, அரச ஆட்சியை முழுமையாக அழிவுக்கு உட்படுத்திய நபர்களைத் தொடர்ந்தும் உயர் பதவிகளில் வைத்துக் கொண்டு, அவர்களிடம் குட்டு வாங்கும் கோழைத்தனமான நிலைக்கு அரசாங்கம் ஏன் ஆளாகியுள்ளது என்பதாகும். இந்த அசிங்கமான நிலையைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்போது வனவிலங்குகள் பணிப்பாளர் தனது பதவியிலிருந்து கேட்டு விலகியுள்ளார். அவ்வாறான நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் எந்தவிதமான கவனத்தையும் செலுத்துவதாகத் தென்படவில்லை.
ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளுக்கு இராணுவ அதிகாரிகளை நியமித்து, சிவில் சேவையை மிகவும் கேவலப்படுத்தியதைக் கண்ட போதும், அதற்கு எதிராகத் தமது தொழில்சார் அபிமனாத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றிணையக் கூடிய முதுகெழும்பு அன்று சிவில் உத்தியோகத்தர்களுக்கு காணப்படவில்லை. அரச நிதி தொடர்பாக காவல் நாய்களாக செயற்படுவதற்குப் பயிற்சியளிக்கப்பட்டுள்ள சிவில் உத்தியோகத்தர்களுக்கு, ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் மீறி ராஜபக்ஷவினர் அரச நிதியைப் பயன்படுத்துவதற்கு எதிராக எழுந்து நிற்பதற்கு அன்று முதுகெழும்பு காணப்படவில்லை. நாமல் ராஜபக்ஷ தொலைபேசி ஊடாக விடுக்கும் உத்தரவுகளைக் கோழைகளாக செயற்படுத்தியதை விடுத்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க சிவில் உத்தியோகத்தர்களுக்கு அன்று முதுகெழும்பு காணப்படவில்லை.
அரசாங்கத்திற்கு ஒவ்வொரு குழுவினரும் சட்டத்தை அமுல்படுத்தக் கூடாது என்று அழுத்தம் கொடுக்கும்போது அரசாங்கம் இரண்டாங் கெட்ட நிலைக்கு மாறுமாயின், இந்த அரசாங்கம் நல்லாட்சிக்குப் பின்புறத்தைக் காட்டும் கேவலமான நிலைமைக்கு மாறியுள்ளதாகவே குறிப்பிடலாம். 
ஜனாதிபதி என்ன செய்கிறார்?
ஜனாதிபதியினால் கட்சியில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. இன்று ஜனாதிபதி காரணமாக அமைச்சுப் பதவிகளை வகிக்கும் தகுதியைப் பெற்றவர்கள் அசிங்கமான முறையில் ஜனாதிபதியை அவமதிக்கும் நிலைமையே வெளிப்படுகிறது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரான ஜோன் செனவிரத்ன துணிச்சலான முறையில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கட்சியின் தலைமைப் பதவியொன்று கிடைக்க வேண்டும் என்று தொடர்ச்சியாகவே குறிப்பிடுகிறார். தான் இரண்டாந்தர தலைமைதத்துவத்தை விட முதற் தர தலைமைத்துவத்துக்குத் தகுதியானவன் என்று கோட்டாபய ராபக்ஷ கூறுகிறார். இணக்கப்பாட்டு அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக டிலான் பெரேரா கூறுகிறார். இவையனைத்தும் பதவிக்கான கயிறிழுப்பைத் தெளிவாகக் காட்டுகின்றன. இவற்றினால் நாட்டுக்கு எப்பயனும் ஏற்படப் போவதில்லை. இந்த துரதிஷ்டவசமான நிலைமை குறித்து ஜனாதிபதியின் நிலைப்பாடு யாது?
ஜனாதிபதிக்கு ஏன் மக்கள் ஆணை கிடைத்தது என்பதை நினைவுபடுத்துவதோடு, என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக முறையான நிகழ்ச்சி நிரலொன்றைத் தயாரிப்பதற்கு கூட முடியாத சிறிய மூளையை உடையவர்கள் பொருத்தமற்ற இரு விடயங்களுக்குள் ஜனாதிபதியை சிக்க வைத்துள்ளனர் என்பது மிகவும் தெளிவாகிறது. முதலாவது விடயம் நாட்டை ஒருபுறம் வைத்து விட்டு கட்சியை முன்னிலைப்படுத்துங்கள் என்பதாகும். இரண்டாவது விடயம் அரசியல் அந்தஸ்துக்கென அலங்கார வேலைத்திட்டங்களைத் தயாரித்து சட்டத்தை மதிக்கும் பிரஜைகள் மத்தியில் ஜனாதிபதியின் நிலைமையை ஏளனத்துக்கு உட்படுத்துவதாகும்.
பிரதமர் என்ன செய்கிறார்?
ஜனாதிபதி கட்சியின் அதிகாரத்தைத் தன் கைக்கு கொண்டு வர முயற்சிக்கும்போது, பிரதமர் கட்சியில் தனக்குள்ள அதிகாரத்தை இல்லாமலாக்கிக் கொள்ளும் வகையில் செயற்படுவது சோகத்தை ஏற்படுத்தக் கூடியதாக காணப்படுகிறது. பிரதமர் செய்யும் பல விடயங்கள் அவருக்கு ஏற்புடையதல்ல. நான் பல சந்தர்ப்பங்களில் எழுதியுள்ள, பல சந்தர்ப்பங்களில் பிரதமரின் முன்னிலையிலேயே கூறிய ஒரு விடயம் உள்ளது. அது கீழ்வருமாறு.
பிரதமர் தற்போது இந்த நாட்டில் உள்ள முதிர்ச்சி பெற்ற ஒரு தலைவர் ஆவார். சர்வதேச சமூகத்தோடு சிறப்பான தொடர்புகளைக் கட்டியெழுப்பி, நாட்டின் அபிவிருத்திக்கும், நல்லாட்சிக்கும் தேவையான பாரம்பரியங்களைக் கட்டியெழுப்ப முடியுமான ஒரு தலைவர் ஆவார். துரதிஷ்டம் எதுவெனில், யானைக்கு யானையின் பலம் தெரியாது என்பது போல பிரதமர் அவருடைய பலத்தை அறியாமல் உள்ளார். இன்னும் சிறியதோர் காலத்துக்கே பிரதமரினால் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும். அதனால் 'அதிகாரம் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்கும்?' என்ற வினா குறித்து பிரதமர் சிறிதளவு கூட கவனஞ் செலுத்த வேண்டியதில்லை. வேறு வகையில் கூறுவதாயின், பிரதமரின் பணி பொம்மலாட்டம் அல்ல. வீழ்ச்சியுற்றுள்ள, அசிங்கமான நிலைக்கு உட்பட்டுள்ள அரசியல் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான பாரம்பரியங்களை மீள உருவாக்குவது பிரதமரின் முக்கிய பணியாக காணப்பட வேண்டும். எனினும் பிரதமர் அதற்குத் தேவையான கவனத்தையோ,  அர்ப்பணிப்பையோ மேற்கொள்ளவில்லை.

ஒரு கட்சிக்கு அரசாட்சிக்கான ஆணை கிடைக்கப் பெற்ற பின்பு அது மேற்கொண்ட செயற்பாடுகள் ஊடாகவே அக்கட்சியின் கட்சியின் இருப்பு தீர்மானிக்கப்பட வேண்டும். கட்சியின் எதிர்காலத்தைத் தந்திரங்கள்; ஊடாக காத்துக் கொள்ள முடியாது. அதன் மூலம் கட்சிக்கு அழிவே ஏற்படும்.
வரலாறு நெடுகிலும் இவ்வாறான தொலைநோக்கற்ற முறையில் செயற்பட்டமை காரணமாகவே எமது தலைவர்கள் உண்மையில் சிறிய தலைவர்களாக மாறியுள்ளனர்.
பிரதமர் தனது வாழ்க்கையின் பிற்காலப்பகுதியை கடத்திக் கொண்டிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அவர் முக்கியத்துவம் வழங்க வேண்டியது கட்சியின் எதிர்கால இருப்புக்கு அல்ல. அதற்காக அர்ப்பணிப்பு செய்தால் அதன் மூலம் இயற்கையாகவே கட்சியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என்பது உறுதி.

பிரதமரின் அரசியல் விளையாட்டின் அசிங்கமான சில செயற்பாடுகள் காரணமாகவே இன்று நாட்டில் அரசியல் அதிகாரப் போட்டி உருவாகியுள்ளது என்பதை மனவேதனையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. உண்;மையில் அது தற்போது ஓர் இரகசியமல்ல. அதனாலேயே இன்று மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் இறுதி முடிவுகள் கிடைக்கப் பெறுதில்லை என்பது தெளிவானது. நெறிமுறைசாராத இந்த அரசியல் விளையாட்டிலிருந்து பிரதமர் நீங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதபோது சிவில் சமூகம் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியேற்படும். அதன் இறுதி விளைவு பிரதமர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிபோன நிலையில், அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டிய நிலை ஏற்படுவதாகும்.
பிரதமரின் அமைச்சரவையின் முக்கிய அமைச்சுப் பதவிகள் சில தொடர்பாக தாமதிக்காமல் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். அவர்கள் முழு நாட்டுக்கும் தமது நிர்வாணத்தை அம்பலப்படுத்தி விட்டனர். அது குறித்து பிரதமர் அறிந்திராமல் இருக்க முடியாது. அதனை ஏன் தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ள வேண்டும்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களின் மிகுந்த அதிருப்தி;நிலை பிரதமர் புரிந்து கொள்ளாத மற்றைய விடயமாகும். தமக்கு அரசியல் எதிர்காலமொன்று இல்லை என்ற மனோநிலையில் அவர்கள் காணப்படுகின்றனர் என்பது தெளிவானது. ஏதாவது ஓர் வெடிப்பு ஏற்படுமாயின் அதனால் மிகுந்த பாதிப்பு ஏற்படுவது பிரதமருக்கே என்பதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும். 

தலைவர் என்ற வகையில் ஒருவருக்குப் பதவியதிகாரம் ஊடாக கிடைக்கும் அதிகாரத்தின் மீது மாத்திரம் தலைவர் ஒருவருக்கு நிலைபெற முடியாது. தலைவரின் இருப்பு காணப்படுவது பதவியதிகாரத்தின் மீது அல்ல. தலைவர் ஒருவரின் அதிகாரம் காணப்படுவது ஒரு கட்சி மீதாயின், அக்கட்சியினுள் ஜனநாயகத்துக்கு ஏற்ற வகையில் அனைத்தும் இடம்பெற வேண்டும்.
பிரஜைகளின் அறிவித்தல்  

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் ஒரே மேசையில் அமர்ந்து செயற்படுமாறு சிவில் சமூகத்தினரால் தொடர்ச்சியாக பல்வேறு வகையில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகுதிகாண் காலத்தினுள் நாட்டின் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் அனைத்துப் பிரஜைகளினதும் உரிமைகள், பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் எந்த மட்டத்தில் காணப்படுகிறது என்பதைப் பொறுத்;தே இருவரினதும் விதி தீர்மானிக்கப்படும். அதனால் மீண்டும் இந்த நாட்டின் சட்டத்தை மதிக்கும் பிரஜைகள் நாட்டின் தலைவர்கள் இருவருக்கும் வலியுறுத்துவது, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களில் முறையற்ற வகையில் தலையீடு செய்ய வேண்டாம் என்பதாகும். நீதிமன்றத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என்பதாகும். மறுபுறத்தில் வேண்டுவது, சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களை சுயாதீன நிறுவனங்களாக மாற்றி, அவர்கள் கௌரவமான முறையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள அவசியமான சுதந்திரம் மற்றும் தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என்பதாகும். அதே போன்று, இந்த இரு தலைவர்களுக்கும் தெரிவிப்பது, ராஜபக்ஷ காலத்தில் ராஜபக்ஷமயமாகி வீழ்ச்சியடைந்த நீதிமன்றக் கட்டமைப்பைக் காலங் கடத்தாமல் மறுசீரமைப்பு செய்யுங்கள் என்றாகும். ராஜபக்ஷவினரின் விருப்புக்கு ஏற்றவாறு நீதிமன்றம் நடந்து கொள்ளும் நிலைமையில் சிறந்ததோர் ஆட்சிக்கு எந்த இடமுமில்லை.
 
ஊழல்மிக்க பிக்குமார் குழுவினரின் உளறல்களுக்குத் தலைவர்கள் அஞ்ச வேண்டியதில்லை. அநியாயமாக சிவில் பிரஜைகளைக் கொலை செய்தவர்களை இராணுவ வீரர்கள் எனக் கருதி தலைவர்கள் அவர்கள் சார்பாகத் நிற்கக் கூடாது. பாரிய ஊழல், மோசடிகளை மேற்கொண்டவர்களை இராணுவ வீரர்கள் எனக் கருதி, அவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்டாமல் இருக்கும் நிலைக்குத் தலைவர்கள் செல்லக் கூடாது. அதே போன்று புதிதாக அரசாங்கத்துக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கு அணிதிரளும் அரச உத்தியோகத்தர்களின் தீவிரவாதத்தை தலைவர்கள் சுயஉணர்வுடன் இருந்து தோற்கடிக்க வேண்டும்.
நாட்டின் சிவில் சமூகத்தை பலவீனப்படுத்தி, தான்தோன்றித்தனமாகத் தலைவர்கள் செயற்படுவதன் விளைவு என்ன என்பதை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி முறை ஊடாக இத்தலைவர்கள் புரிந்து கொள்வது முக்கியம்.
நன்றி – ராவய (2016.06.12)

2 comments:

Powered by Blogger.