Header Ads



"பஸீர் சேகுதாவூத் பற்றி நல்லதாகவோ, கெட்டதாகவோ எழுத எனக்கு முழு உரிமை உண்டு"

-Rimsan Abdhul Salam-

இன்று என் cover photo வாக எனக்கு முகநூலில் நண்பராக இல்லாத என்னால் ஒரு காலத்தில் ஆதர்ஷிக்கப்பட்ட ஒருவரை இடுகிறேன்.

தோழர்கள் இவனுக்கு என்னாச்சுன்னு கேட்பது புரிகிறது. இது ஒருவகை கழிவிரக்கம் தவிர ஒன்றுமில்லை.

ஒரு விதி மாற்றி எழுதப்படும் போதும். ஓர் உயிராபத்து ஏற்பட்டு உயிர் போகாத போதும் இது ஏற்படும்.

பஸீர் சேகுதாவூத் பற்றி நல்லதாகவோ கெட்டதாகவோ எழுதப் பேச எனக்குத்தான் முழு உரிமையும் உண்டு. அவரால் இழந்தவன் நான் அதனாலேதான் வளர்ந்தவனும் கூட.

முஸ்லிம் தேசத்தை சரியாக அனுமானிப்பீர் என்று அத்தேசம் பற்றிய வேட்கையோடு தளபதி உங்களிடம் நான் வந்த போது,

ராணி ராத்தா "நீங்க சேரை விட நல்லாப் பேசுறீங்களாமே" என்று சொன்ன போது,

அது என் கனவு என்று கூற "இப்பவே நீங்கள் என்னை விட நன்றாகப் பேசுகிறீர்கள்" என்று என்னை உசுப்பி விட்ட போது வந்தது அந்த ஆகர்ஷிப்பு,

நமது இலக்கியம் பற்றிய கலந்துரையாடல்கள் என்னை செழுமைப்படுத்தியிருக்கிறது. 

நான் கொள்ளைக்காரனாக மாற நினைத்தது உங்கள் லைப்ரேரியை கண்ட போதுதான். புத்தகங்கள் உங்களுக்கு பேசக் கற்றுக் கொடுத்தது,வாழக் கற்றுக் கொடுக்கவில்லை.

நான் உங்களுக்கு போஸ்டர் ஒட்டியதற்கு, உங்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்ததற்கு, எனதும் எனது தாய் தந்தையதும் மானங்கள் மௌலானா என்கிற மஹா ஏமாத்துக்காரனின் கூலிகளால் களையப்பட்ட தருணத்தில், நீங்கள் அதுவரை காணாத தேர்தல் வெற்றியை கண்டீர்கள். அந்தக் காயங்களுக்கு நீங்கள் கடைசி வரை களிம்பு தடவவில்லை.

உங்கள் ராஜாங்கத்தில் எனக்கோர் இடம் கிடைக்கும் என்று நான் ஆசைப்பட்டேன். உங்கள் அந்தப்புரங்கள் என்னை என் போன்ற பல நூறு இளைஞர்களது வயிறுகளை காயவைத்தது.

மனித நேயக் கோட்பாடுகள் உங்களிடம் இல்லையென்று நானே முடிவு கொண்டேன்.உங்கள் லாவோட்சுவும் கன்பூசியஸும் உம் வீட்டு புத்தக ராக்கையில் மட்டுமே இருந்தனர்.

என் காத்திருப்பு என்னை காத்திருந்த பெண்ணை நேற்று வந்த ஒருவனுக்கு தாரை வார்த்தது. காதலிலும் தோற்றுப் போனேன்.

என் தனிப்பட்ட வாழ்க்கை சிதறி போதை தலைக்கேறிய ரஷ்புடினாய் உங்களைப் போல் ஆகிவிட்டேன்.

நான் மேடையில் பேசும் போது "சின்ன பஷீர் மாஸ்டர்" என்று அழைத்தவர்களை எட்டி உதைக்க என் பசி விடவில்லை. அவ்வளவு வெறுப்பு உங்கள் மீது.

உங்களது சில நடவடிக்கைகள் நீங்கள் ஒரு இலுமினாட்டி என்ற மனப்பதிவை எனக்குள் தந்ததுண்டு. இலுமினாட்டிகள் தோற்பதில்லை.

நீங்கள் இப்போது தலைமைத்துவப் பிச்சை கொடுத்த ஹக்கீமிடம் தோற்றுப் போன போது , நீங்கள் இலுமினாட்டி இல்லை என்பது புரிகிறது.

உங்களை நேரில் கண்டு நன்றி சொல்ல நினைத்ததுண்டு. அன்று நீங்கள் என்னை தூக்கியெறிந்திராவிட்டால் இன்று நான் கண்டெடுக்கப் பட்டிருக்க மாட்டேன். உங்களை நேரில் சந்திக்க என் சுயகௌரவம் இடம் கொடுக்கவில்லை. 

அன்று என்னை நீங்கள் கைவிட்டதால்தான் இன்று சட்டத்தரணியாகிருக்கிறேன்.

உங்கள் அறிக்கை படித்தேன். சந்தோசம் எனக்கு. இது உங்கள் பழைய ஆசை. அரசியலைவிட்டு ஒதுங்கி பொது வாழ்வில் ஈடுபடல் என்பது. இதையாவது சொன்னது போல் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நான் உங்களது சிறந்த மாணவன். உங்களை விட சிறப்பாக இருப்பேன்.இன்ஷா அல்லாஹ்.

No comments

Powered by Blogger.