"வக்பு சபையினால் பதிவு செய்யப்படும் பள்ளிவாசல்களை, எவராலும் சவாலுக்குட்படுத்த முடியாது"
-ARA.Fareel-
பள்ளிவாசலொன்று அமைக்கப்பட்டு 6 மாதங்களில் அது பதிவு செய்யப்படாவிட்டால் அப்பள்ளிவாசல் நிர்வாக சபையில் தலையிட்டு அதனைப் பதிவு செய்யும் அதிகாரம் வக்பு சபைக்கு உண்டு என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரிவித்தார்.
அதனால் பள்ளிவாசல் பதிவுகளை எவராலும் சவாலுக்குட்படுத்தவோ தடுப்பதற்கோ சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் கூறினார்.
பள்ளிவாசல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் 'பெரும்பான்மை இன அரசியல்வாதிகள் சிலர் தமது அரசியலுக்காக இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பயன்படுத்துகிறார்கள்.
பௌத்தர்களில் 99.9 வீதமானவர்கள் முஸ்லிம்களை வெறுக்கவில்லை. நல்லுறவுடனே இருக்கிறார்கள். 0 .1 வீதமானோரே இனவாதத்தைப் பரப்புகின்றனர்.
முஸ்லிம்கள் நாம் அரசியல் செய்வதற்கு பெளத்த மதத்தையோ பௌத்த மக்களையோ பயன்படுத்தவில்லை.
எமது நாட்டின் அரசியல் யாப்பின்படி இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் சம அந்தஸ்து உடையவர்கள். அரசியல் யாப்பில் எமக்குத்தரப்பட்டுள்ள சமய கலாசார உரிமைகளை எவராலும் சவாலுக்குட்படுத்த முடியாது ஏனென்றால் முஸ்லிம்கள் இந்நாட்டுக்கு வந்தேறு குடிகள் இல்லை.
பள்ளிவாசல்கள், தரீக்காக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துக்கள் என்பவற்றை வக்பு சபையே நிர்வகித்து வருகிறது. இதேபோன்று பௌத்த பன்சலைகள் மற்றும் சொத்துக்களை நிர்வகிக்க தனியான அமைப்பு சட்டரீதியாக உள்ளது.
பள்ளிவாசல்கள் பதிவுகள் உட்பட வக்பு சபையின் அதிகாரங்கள் சட்டமூலம் வழங்கப்பட்டவையாகும். இவற்றில் மாற்றங்களைச் செய்வதென்றால் அது பாராளுமன்றத்தினாலே முடியும். சட்டத்தை இயற்றுவதும் மாற்றங்களைச் செய்வதும் பாராளுமன்றமே என்பதை பள்ளிவாசல்களை எதிர்ப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒவ்வோர் இனமும் சமயமும் தத்தமது தனித்துவங்களைப் பேணிக் கொள்வதற்கு உரிமையுண்டு. முஸ்லிம்களையும் பள்ளிவாசல்களையும் எதிர்க்கும் பெரும்பான்மையினரில் மிகச்சிறிய அளவானோர் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

This message to be published in sinhala media as well.
ReplyDelete