Header Ads



ஜனவரி 8 வெற்றி, துஷ்பிரயோகம் செய்யப்படுகிறதா..?

-சரத் விஜேசூரிய
தமிழில் - அபூபத்ஹான், ஹேனேகெதர-  

இனவாதம் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றை ஒழிப்பதற்கான, ஊழல் மற்றும் குற்றங்களை இல்லாமல் செய்வதற்கான, நீதிமன்றத்தின் நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கான, மரண பீதியற்ற மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நாடொன்றைக் கட்டியெழுப்புவதற்கான பாதை திறக்கப்பட்டது என்பதே நாட்டின் சட்டத்தை மதிக்கும் பிரஜைகளின் பதிலாகும். 

அரச அதிகாரம்
தமக்கு கிடைத்த ஆணைக்கு ஏற்ப சிறந்த ஆட்சியை நடாத்துவதே மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரினதும் அடிப்படையான பொறுப்பாக காணப்பட வேண்டும். அதிகாரத்திற்கு வந்தவுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றுக்காக முக்கிய பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். எனினும், அதற்கான முன் தயார்நிலை இந்த இரு தலைவர்களிடமும் காணப்படவில்லை என்பதாகவே தெரிகிறது. இது வரையும் தெளிவான நிகழ்ச்சி நிரலொன்றைத் தயாரித்துக் கொள்வதற்கு கூட இருவரும் நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரியவில்லை. இரு தலைவர்களும் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை ஒருபுறம் வைத்து விட்டு, அரச அதிகாரத்தைக் கோரும்போது நாட்டுக்கு முன்வைத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களாயின், அதற்கான மக்களின் மறுமொழி கௌரவமானதாக காணப்படும். அவர்களுக்கு அதற்கான காலம் இன்னும் எஞ்சியே உள்ளது.
யானைப் புத்தகமும் புத்த மதமும்
ராஜபக்ஷவினர் இலங்கையின் புத்த மதத்துக்குப் பாரிய பாதிப்பை ஏற்படுத்தினர் எனலாம். அவர்கள் ஒழுக்கநெறி மிக்க மதப்பிரியர்களாகத் தோன்றி, விகாரைகளுக்கும், பிக்குமார்களுக்கும் அரச நிதியைக் கொண்டு பலவாறான உதவிகளை வழங்கி புத்த மதத்துக்குப் பாரிய சேவையாற்றியதாகக் கூறுகின்றனர். எனினும், உண்மை யாதெனில் அவர்கள் செய்தது புத்த மதத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமையாகும். இந்த விடயம் இலங்கையின் யானைப் புத்தகம் தொடர்பாக நோக்கும்போது வெளிப்படுகிறது.
பெரஹரா நடாத்துதல், பெரஹராவில் யானைகளைக் கொண்டு செல்வது என்பன புத்த மதம் அல்ல. துறவு வாழ்வுக்குச் சென்ற ஒருவர் யானைகளைப் பராமரித்துக் காக்க வேண்டும் என்று பௌத்த மதம் போதிக்கவில்லை. அதிகாரத்தோடு தொடர்புடைய ஒரு மனோநிலையே யானைகளை ஒருவர் தம்மிடம் வைத்திருப்பதன் மூலம் வெளிப்படுகிறது. அது எவ்வாறாயினும், பிக்கு ஒருவர் சட்டத்துக்கு முரணான வகையில் யானைகளைத் தன்னிடம் வைத்திருப்பாராயின், சாதாரண பொதுமக்களுக்கு தினமும் பேணுமாறு நினைவுபடுத்தும் சீலங்கள் ஐந்து குறித்த மரியாதை கூட அவருக்கு இல்லை என்பதாகவே உறுதியாகிறது. தாயைக் கொலை செய்து அதன் வயிற்றைக் கிழித்தே சில யானைக் குட்டிகளைக் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தலைநகரில் வசிக்கும் செல்வமும் பலமும் கொண்ட, பெரஹரா நடாத்தும் பிக்கு ஒருவர் தன்னிடமிருக்கும் யானைக் குட்டி விகாரையிலுள்ள எழுபது வயதுடைய முதிய யானை ஈன்ற குட்டி என்று கூறியுள்ளார். திலின கமகே எனும் நீதிபதிக்கு மேலதிகமாக, பெயர் பெற்ற மூன்று பிக்குமார் சட்ட விரோதமாக யானைக் குட்டிகளைத் தம்வசம் வைத்துள்ளனர். இந்த மூன்று பிக்குமார் தொடர்பாகவும் சட்டத்தை அமுல்படுத்தினால் அதன் மூலம் புத்த மதத்துக்கு இழிவு ஏற்படும் என்று ஜனாதிபதியும், பிரதமரும் சிந்திப்பார்களாயின், அதனால் ஆட்சி கடினமாக நிலைக்கு மாறலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இருப்பின், நல்லாட்சி தொடர்பாக அவர்களிருவரும் மென்மேலும் பொய் புரட்டுக்களை உளறாமல் இருப்பது நல்லது. இந்தக் குற்றத்தைச் செய்யும் பிக்குமார்களை நாட்டுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.
ரணவிருவோ மற்றும் அரச ஆட்சி
நாட்டில் காணப்பட்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த பணியோடு பாவனைக்கு வந்த நாமமே ரணவிருவோ என்பதாகும். ரணவிருவோ என்ற  நாமத்தின் பயன்பாடு இராணுவ வீரர்களுக்கு முக்கிய மானசீக அழுத்தத்தை வழங்கியது என்று இராணுவத்தின் உயர் அதிகாரியொருவர் என்னோடு ஒரு முறை குறிப்பிட்டார். எனினும் உண்மையில் ரணவிரு என்ற நாமம் இராணுவத்தினருக்கு மாத்திரமே உரியது என்பதை அவர் வலியுறுத்தினார். இன்று அந்த நாமத்தை அரசியல்வாதிகள் அரசியல் அதிகாரத்திற்கான இலஞ்சமாக ஆக்கியுள்ளனர் என்று அவர் கூறினார். அதன் அர்த்தம் என்னவென்று நான் அவரிடம் வினவினேன். அவர் அதற்கு வழங்கிய பதில் இதுவே.
'.... கொலை செய்தல், பெண்களை துஷ்பிரயோகம் செய்தல், கொள்ளையடித்தல், பாதாள உலக நடவடிக்கைகள் போன்ற செயற்பாடுகளோடு தொடர்புடைய பல அதிகாரிகள் சட்டத்தினால் குற்றவாளிகளாக ஆக்கப்;பட்டுள்ளனர். அதிகாரிகளின் உத்தரவைப் பின்பற்றி நிராயுத சிவில் பிரஜைகளைக் கொலை செய்த இராணுவத்தினரும் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்களை ஒருபோதும் ரணவிருவோ என்று அழைக்க வேண்டியதில்லை. டென்சில் கொப்பேகடுவ போன்ற வீரமிக்க தளபதிகளுக்குப் பொருந்தக் கூடிய ஒரு நாமத்தை: கொலை, வல்லுறவு, கொள்ளை, பாதாள உலக நடவடிக்கைகள் போன்றவற்றோடு தொடர்புடைய அதிகாரிகளுக்கும் உரியதாகப் பயன்படுத்தப்படுவது நாகரீகமானதல்ல. ரணவிருவா என்பவர் நாட்டின் பொதுவான சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. இராணுவத்தின் புகழையும், கௌரவத்தையும் பாதுகாக்க வேண்டுமாயின், அனைத்து மட்டத்தில் உள்ளோருக்கும் சமமான முறையில் சட்டம் ஒன்று போல அமுல்படுத்தப்பட வேண்டும்....'
ராஜபக்ஷ மயமான ஊழல் மிக்க பல இராணுவ அதிகாரிகள் இருப்பதாகவும், அவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெழும்பு இல்லாவிடின், நல்லாட்சி என்பது வெறும் வேடிக்iயானதே என்று முழு வாழ்வையும் யுத்தத்துக்கு அர்ப்பணித்த முக்கிய இராணுவ அதிகாரிகள் தெளிவாகக் கூறுகின்றனர்.
அறுபத்தியிரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதிக்கு இன்று அறுபத்தியிரண்டு இலட்சத்தை விட ஐம்பத்தியெட்டு இலட்சம் பாரியது என விளங்கவும், உணரவும் ஆரம்பித்திருப்பது எவ்வாறு? இது குறித்து கவனஞ் செலுத்தும்போது ஜனாதிபதி மறந்து போயுள்ள இரண்டு பாத்திரங்கள் உள்ளன. அவர்கள் யார்?
சோபித்த தேரர்
ஜனாதிபதி இன்று சோபித்த தேரர் அவர்கள் பேசிய எந்தவொரு விடயம் தொடர்பாகவும் பொறுப்புக் கூறக் கூடிய நிலைமையில் இல்லை. அது மிகவும் கவலையும், வேதனையும் தரக் கூடியதாகும்.
சோபித்த தேரருக்கு நஞ்சுக் குப்பியொன்றை அருந்தச் செய்ய முயற்சித்த டிலான் பெரேரா இன்று ஜனாதிபதியின் அருகில் இருந்து கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையைத் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். தன்னைத் தோற்கடிப்பதற்கு முழுமூச்சாக நின்று செயற்பட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஜனாதிபதி தனதருகில் வைத்துக் கொண்டு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடர்பான முடிவை மேற்கொள்ளும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்துள்ளார். அவர்கள் நிறைவேற்;று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சந்திரிக்கா அம்மையார்
மைத்திரிபால சிறிசேன என்ற பாத்திரத்தை பொது வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முன்மொழிந்தவரும், அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டவரும் சந்திரிக்கா அம்மையாரே. அது மாத்திரமன்றி ஐ.தே.க., தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறமுடியுமா என்று சோபித்த தேரர் வினவியபோது அதனைத் தன்னால் செய்ய முடியும் என்று தெளிவான பதிலை வழங்கி அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டவர் சந்திரிக்கா அம்மையாரே. அது மாத்திரமன்றி தேர்தல் பிரச்சாரத்துக்குத் தேவையான பல செயற்பாடுகளில் அவர் பிரதான பொறுப்புக்களையேற்று செயற்பட்டார். இன்று ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் தொடர்பாக கொண்டுள்ள மனப்பாங்கு யாது? அவர் தன்னைப் பொது வேட்பாளராக ஏற்றுக் கொள்ளச் செய்வதில் பிரதான பங்காற்றியவர் என்பது ஜனாதிபதியின் நினைவில் இல்லாத நிலைமையே வெளிப்படுகிறது. அது கலலை தரும் விடயமன்றி, பாரிய தவறாகும்.
ஜனாதிபதி அறுபத்தியிரண்டு இலட்சத்தை விட ஐம்பத்தியெட்டு இலட்சம் பெரியது என சிந்திப்பாராயின், நாட்டின் சட்டத்தை மதிக்கும் பிரஜைகள் என்ன செய்ய வேண்டும்? அறுபத்தியிரண்டு இலட்சத்தை எழுபது இலட்சமாக அதிகரிக்க நாம் எந்த வகையிலும் அர்ப்பணம் செய்ய மாட்டோமா? அந்த எழுபது இலட்சம் மைத்திரிபால சிறிசேன என்ற பெயருக்கு கிடைக்க மாட்டாது. அந்த நிலைமையை நோக்கி சிவில் சமூகத்தைத் தள்ளும் வகையில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கிய அறிவாளிகள் உண்மையில் ஜனாதிபதியைத் தனிமைப்படுத்துவதனையே அதன் மூலம் செய்கின்றனர். அது மிகவும் தெளிவானது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு குழுவினர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் மத்தியில் இருந்தாலும், அவர்கள் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்குத் தம்மை அர்;ப்பணித்தனர். அவர்களது சுயரூபம் பொதுத் தேர்தலில் வேட்பு மனு வழங்கும்போது கட்சியின் தவிசாளரான ஜனாதிபதியை சிறிதளவு கூட கருத்திற் கொள்ளாமை ஊடாக வெளிப்பட்டது. பெர்து வேட்பாளராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தான் வெளியேறும்போது தன்னோடு ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேற விருப்பம் தெரிவித்தவர்கள் இறுதியில் என்ன செய்தனர் என்பதை ஜனாதிபதி நன்கறிவார். அது எப்படியிருப்பினும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஊழல்வாதிகளின் கோவைகளை மூடுவதன் மூலமும், மஹிந்த ராஜபக்ஷவின் அருகிலிருந்த அனைவரையும், அவர்களது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து காப்பாற்றி ஜனாதிபதி தனக்கு நெருக்கமானவர்களாக ஆக்கிக் கொள்வதன் மூலமும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் எண்ணிக்கை அதிகமாகத் தனக்கு கிடைக்கும் என அவர் சிந்திப்பின் அது ஏமாற்றமே. உண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடுவது ரணில் விக்ரமசிங்கவின் தந்திரத்தால் அல்ல. மாறாக ஜனாதிபதி அவர்களின் அசிங்கமான கனவு காரணமாகவாகும்.   

No comments

Powered by Blogger.