Header Ads



SLMC லிருந்து பிரிந்தவர்கள் முஸ்லிம் கூட்டமைப்பை, உருவாக்க வேண்டுமென்பது வேடிக்கையானது

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கபினட் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்காகவே சிலர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து பிரிந்து சென்று புதுக் கட்சிகளை ஆரம்பித்தனர். அத்தகையோரை மீண்டும் ஒன்றிணைத்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுவது வேடிக்கையானதாகும்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

"முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என  சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது விடயமாக முன்னாள் கல்முனைப் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் கபூர் விடுத்திருந்த அறிக்கை ஊடகங்களில் வெளிவந்திருந்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் போன்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள் தம்மை தனிக் கட்சிகளாக மகுடம் சூட்டிக் கொண்டனவே தவிர முஸ்லிம் சமூகத்திற்காக அவை பெற்றுக் கொடுத்த உரிமைகள் எவை என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எமது முஸ்லிம் காங்கிரஸ், முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கட்சியாகும். 1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது 12 வீதமாக இருந்த வெட்டுப் புள்ளியை 5 வீதமாக குறைத்தது தொடக்கம் தென்கிழக்கு பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டமை வரை முஸ்லிம் காங்கிரஸ் பல விதமான சாதனைகளைப் புரிந்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசு கள்ளத்தனமாக பறித்தெடுக்க முற்பட்டபோது அமைச்சரவையில் இருந்த முஸ்லிம் அமைச்சர்களுள் எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மாத்திரமே அதனை எதிர்த்து வாதாடி தடுத்து நிறுத்தினார்.

இவ்வாறு முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் போராடி வருவதை அப்துல் கபூர் போன்றவர்கள் அறியாமல் இருப்பது கண்டு ஆச்சரியமடைகின்றேன்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்காக 1984ஆம் ஆண்டு அன்றைய ஐ.தே.க. அரசாங்கம் சர்வ கட்சி மாநாட்டைக் கூட்டியபோது அதில் கலந்து கொண்டு முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு ஒரு முஸ்லிம் அரசியல் கட்சி இல்லாமல் இருந்த துரதிஷ்டமான நிலையை எவரும் மறந்து விட முடியாது. அப்போதைய அரசாங்கத்தில் இருந்த முஸ்லிம் பிரதிநிதிகள் சமூகத்தைக் கைவிட்டு, கொழும்பில் தஞ்சமடைந்திருந்த காலகட்டத்தில்தான் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்டு, அது சமூகத்திற்காக குரல் எழுப்பி வருகின்றது. அதில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வாங்கிச் செல்லாது.

இந்நிலையில் முஸ்லிம் அரசியல் கூட்டு முன்னணியை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும் அது எந்த கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் அமையப்பெற வேண்டும் என்று அறைகூவல் விடுப்போர் சொல்ல முன்வரவில்லை.

1976 ஆம் ஆண்டு மூன்று தமிழ் கட்சிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்றும் 2004ஆம் ஆண்டு ஐந்து தமிழ் கட்சிகள் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டன. அவை தமிழ் ஈழம், சமஷ்டித் தீர்வு என்கின்ற கொள்கை உடன்பாட்டின் கீழ் உருவாக்கப்பட்டவையாகும். அப்படி இனப்பிரச்சினைத் தீர்வு, தேர்தல் முறை மாற்றம், அரசியலமைப்பு சீர்திருத்தம் போன்றவற்றில் முஸ்லிம் கட்சிகள் எந்தக் கொள்கை உடன்பாட்டின் கீழ் ஒன்றிணைந்து கூட்டமைப்பை ஏற்படுத்தலாம் என்று யோசனைகளை முன்வைக்காமல் வெறுமனே விமர்சனனங்களை மட்டும் முன்வைத்து அறிக்கைகளை வெளியிட்டு சிலர் காலம் கடத்தி வருகின்றனர்.

ஆனால் இவ்விடயங்களில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது மிகவும் கரிசனையுடன் காரசாரமாகவே செயற்பட்டு வருகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவரின் மறைவைத் தொடர்ந்து கட்சிக்குள் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகளைக் குறி வைத்து சிலர்  கட்சியை விட்டுப் பிரிந்து சென்று, புதுப் புதுத் தனிக் கட்சிகளை ஆரம்பித்தனர் என்பதே வரலாறாகும். இத்தகையவர்களை மீண்டும் ஒன்றிணைத்து முஸ்லிம் கூட்டு முன்னணியை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பது வேடிக்கையாகும்" என்று அப்துல் மஜீத் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. அப்ப 18ம் திருத்ததுக்கு கன்னை மூடிக்கொன்டு வாக்களித்ததை மறந்து விட்டீர்களா?????
    அதுவும் முஸ்லிம் காங்கிரஸ் தான் செய்தது

    ReplyDelete

Powered by Blogger.