நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்ல சதித்திட்டம் - CID விசாரணை ஆரம்பம்
நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய சதித்திட்டம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
விடுதலைப் புலிகள் மீண்டும் தலைத்தூக்குவதாகவும் வடக்கில் மீண்டும் யுத்த சூழ்நிலை உருவாகி வருவதாகவும் கூறி நாட்டை ஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் திட்டமிட்டு செயற்படும் சிலருக்கு எதிராக திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த முயற்சியில் ஈடுபடும் நபர்களில் அரசியல்வாதிகள், பாதுகாப்பு தரப்பினர், பயங்கரவாத செயல்களுடன் சம்பந்தப்பட்ட பல நபர்கள் இருப்பதாக தற்போது தெரியவந்துள்ளது.
சாவகச்சேரி பிரதேசத்தில் வீடொன்றில் தற்கொலை அங்கிகள், வெடிப்பொருட்கள் உட்பட ஆயுதங்கள் கைப்பற்றிய சம்பவத்தின் பின்னணியிலும் இந்த திட்டமிட்ட நபர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர்கள் ராம், நகுலன் உட்பட 11 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேக நபர்களும், நாட்டைஸ்திரமற்ற நிலைமைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் நபர்களும் இணைந்து, சாவகச்சேரி சம்பவத்தை திட்டமிட்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது.
பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு, வடக்கில் மீண்டும் போர் சூழல் உருவாகி வருகிறது என்று பொதுமக்கள் இடையில் தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் உயர்மட்ட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
Post a Comment