யாருக்கெல்லாம் மின் சிகிச்சை தேவை..?
கரன்ட் ஷாக்’ என்கிற பெயரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பாதிக்கப்படாதவர்களுக்கும் கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியத்தை பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். சம்பந்தப்பட்ட நபரைத் துடிக்கத் துடிக்க வைத்துக் கொடுக்கப்படுகிற அந்த சிகிச்சை பார்க்கிற நமக்கு பீதியைக் கிளப்பும்.
மனநல மருத்துவ சிகிச்சைகளில் பல புதிய முறைகள் வந்துள்ளபோதும், பலரும் எடுக்க தயங்கும் மின் சிகிச்சை இன்றும் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. மனநலத்துக்காக எடுத்துக் கொள்ளும் மருந்து, மாத்திரைகளின் அளவை குறைக்கவும், விரைந்து குணப்படுத்தவும் சில வேளைகளில் மின் சிகிச்சை இன்றியமையாதது’’ என்கிற மனநல மருத்துவர் வெங்கடேஷ் ராமச்சந்திரன், யாருக்கெல்லாம் மின் சிகிச்சை தேவை, எப்போது கொடுக்க வேண்டும், விதிமுறைகள் போன்றவற்றை விளக்குகிறார்.
‘‘இன்றைய சூழ்நிலையில் மின் சிகிச்சை ECT (Electro Conventional Therpy) முக்கியமான தேவையாக இருந்தாலும் எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒருவருடைய உடலின் நிலையைப் பொறுத்து அவருக்கு இந்த சிகிச்சையைத் தரலாமா என்பதை முடிவு செய்வோம். குறிப்பாக, ஒருவர் இயல்புக்கு மாறாக நடந்து கொள்ளும் நேரத்தில் அவருக்கு மின்சிகிச்சை அவசியமாகிறது.
குழந்தைகளுக்கு எந்தக் காரணத்துக்காகவும் மின்சிகிச்சை கொடுப்பதில்லை. 15 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மின்சிகிச்சை தரவேண்டிய நிலை ஏற்பட்டால் முடிந்த வரை தவிர்த்துவிடுவோம். பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட இதய நோயாளிகளுக்கும் ECT கொடுப்பது கிடையாது. கொடுத்தால் இயல்பான நிலையில் இருந்து பேஸ்மேக்கர் மாற வாய்ப்புள்ளது. இவர்களுக்கு மனநலப் பாதிப்பு இருந்தால் சிகிச்சை முடிந்து ஒரு மாதத்துக்குப் பிறகு கொடுக்கலாம்’’ என்கிற மருத்துவர் சிகிச்சையின்போது நோயாளிகள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளையும் கூறுகிறார்.
ECT சிகிச்சை பெற வரும் நோயாளிகள் 6 மணி நேரத்துக்கு முன்பே திட உணவு, திரவ உணவு எதுவும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றுடன் இருக்கும் போதுதான் மயக்க மருந்தை பாதுகாப்பாகச் செலுத்த முடியும். இந்த சிகிச்சையை ஆரம்பிப்பதற்கு முன், ரத்த சர்க்கரை அளவு, இ.சி.ஜி., மார்பு எக்ஸ்-ரே, ரத்த அணுக்களின் எண்ணிக்கை (CBC), சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடுகளுக்கான சோதனை (Renal And Liver Function Test), எலக்ட்ரோலைட்ஸ், சிடி பிரெயின் ஆகிய பரிசோதனைகள் செய்யப்படும்.
மின் சிகிச்சை அளிக்க மொத்தம் 15 நிமிடங்கள்தான் தேவைப்படும். இந்த சிகிச்சை முறையில் முதலில் நோயாளியை மயக்கம் அடைய செய்வோம். 3 முதல் 6 விநாடிகள் வரை அவர் மயக்க நிலையில் இருப்பார். அதற்குள் அவருக்கு சிகிச்சையை முடித்து விடுவோம். ஒரு விநாடிக்குள் 10 மின்காந்த அலைகள் (Pulses) நோயாளியின் உடலில் செல்லும். தேவைப்பட்டால் உடலில் செலுத்தும் Pulse Levelஐ அதிகரிக்கவும் செய்யலாம்.
60 வயது கடந்த முதியவர்கள், மனஅழுத்தத்தினால் அதிகம் பாதிப்புக்கு உள்ளானவர்கள், தற்கொலை எண்ணம் உடையவர்கள், ஆக்ரோஷமாக பேசுபவர்கள், வன்முறையாக நடந்து கொள்ளும் நோயாளிகள், பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டவர்கள் மற்றும் காதில் யாரோ பேசுவது போலவும் அருகில் யாரோ நிற்பது போலவும் நினைக்கும் மனச்சிதைவு நோயாளிகளுக்கும் தாராளமாக ECT அளிக்கலாம். கர்ப்பம் தரித்த பெண்களுக்கும் கொடுக்கலாம். இதனால் கருக்கலைப்பு உண்டாக வாய்ப்பு இல்லை. இந்த சிகிச்சை முறையை வாரத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் எடுத்துக் கொள்ளலாம்.
பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என்பதோடு, மாத்திரைகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். எலக்ட்ரோ கன்வென்ஷனல் தெரபி போன்றே மனநலம் மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்படைந்த நோயாளிகளுக்கு Repetitive Transcranial Magnetic Stimulation என்கிற சிகிச்சை முறை மேற்கொள்ளப்படுகிறது.
நோயாளிகளின் நிலையைப் பொறுத்து தேவைப்படும் போது இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரைமணி நேரத்தில் செய்யப்படும் இந்த சிகிச்சை முறையில் 300லிருந்து 400 வரை மின்காந்த அலைகளை (Pulse) முன்நெற்றியில் செலுத்துவோம். மயக்க மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர் நோயாளியுடன் பேசிக்கொண்டே சிகிச்சையைத் தொடரலாம்’’ என்கிறார் டாக்டர் வெங்கடேஷ்

Post a Comment