Header Ads



இறைவன் விட்ட சோதனை, அவனே நல்ல தீர்வையும் தருவான் - உறுதியாக நம்பும் மக்கள்


-Mohamed Naushad-

இன்று -24- நண்பகல் நான் வசிக்கும் மெகொட கொலன்னாவைக்கு சென்றேன். வீதியில் தண்ணீர் வற்றி உள்ளே பிரவேசிக்கும் நிலை காணப்பட்டது. ஆனால் துர்நாற்றம் கடுமையாக வீசிக்ககொண்டு இருந்தது. அதனை பொருத்துக் கொண்டு உள்ளே சென்றேன். வீதியின் இரு மருங்கிலும் குப்பைகள் குவிந்து காணப்பட்டன. 

மக்கள் தத்தமது வீடுகளுக்குள் வைத்து ஆசையோடும் அடம்பரத்தோடும் பாவித்த தளபாடங்கள் மற்றும் சமையலறை பொருள்கள் பலவும் இன்று குப்பைகளாக மாறி வீதி ஓரங்களில் வீசப்பட்டு காணப்பட்டன. பல நாட்களாக அசுத்த நீர் வீடுகளை ஆக்கிரமித்து இருந்ததால் பொருள்கள் யாவும் அதில் ஊறிப்போய் காணப்பட்டன. இதனால் ஒரு கரண்டியை கூட பாவிக்க முடியாத நிலை. கேஸ் சிலிண்டர்களின் கதியும் அதோகதி.  பல கேஸ் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளமையும் தெரிய வந்தது. 

எல்லோருமே புதியதோர் வாழ்வை தொடங்க வேண்டிய நிலை. ஆனால் அந்த தொடக்கத்துக்கான நம்பிக்கையை  ஊட்ட எவரையும் அங்கு காணவில்லை. 

எல்லோரும் இறைவன் விட்ட சோதனை. அவனே நல்ல தீர்வையும் தருவான் என்ற நம்பிக்கையில் மிக உறுதியாக உள்ளதையும் அவதானிக்க முடிந்தது. சுத்திகரிப்பு பணிக்கு இராணுவம் உதவும் என்ற அறிவிப்பு வெறும் அறிவிப்பாகவே உள்ளது. அதற்கான எந்த அறிகுறியும் இன்று தென்படவில்லை. ஒருவேளை நாளை எதுவும் நடக்குமோ தெரியவில்லை.

எனது வீட்டுக்குள் தண்ணீர் புகவில்லை. கொத்மலையிலும் காசல்ரீயிலும் இருந்து விழுந்தடித்து வேகமாக நீண்ட தூரம் ஓடிவந்த தண்ணீருக்கு எனது வீட்டு மாடிப்படிகளை ஏறும் போது களைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். முக்கால் வாசி தூரத்தில் அப்படியே நின்றுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

No comments

Powered by Blogger.