கொழும்பு பாத்திமா முஸ்லிம் கல்லூரி, சமூகத்தின் உயர்ந்த சேவை
-Mohamed Naushad-
இன்று -21- வெல்லம்பிட்டிக்கு சென்று பார்வையிட்ட பின் சீக்கிரம் வீடு திரும்பலாம் என்ற நம்பிக்கை இழந்த நிலையில் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தை பாத்திமா முஸ்லிம் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையத்தை பார்வையிடச் சென்றேன்.
எந்த விதமான இயக்கப் பெயரோ இலச்சினையோ, சுலோகமோ, வர்ணமோ இன்றி மிகவும் அமைதியான முறையில் ஆரவாரம் எதுவும் இன்றி அந்த தற்காலிக தங்கு நிலையம் மிக நேர்த்தியாக எற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களை சேர்ந்த சுமார் 44 குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என 150பேர் இங்கு தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் பெரும்பான்மை இன குடும்பம் ஒன்றும் அடங்கும். இன்னும் சிலர் அபயம் தேடி வருவதையும் அவதானிக்க முடிந்தது.
பாத்திமா கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கம் பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பிரதேச மக்கள் இந்த நிலையத்துக்கான சகல பொறுப்புக்களையும் ஏற்றுள்ளனர்.
எத்தனை நாற்கள் ஆனாலும் சரி இன்னும் எத்தனை பேர் வந்தாலும் சரி மூவேளை உணவுக்குமான முழு பொறுப்பையும் புதுக்கடை வாழ் மக்கள் பெறு மனதோடு ஏற்றுள்ளனர்.
ஆண்கள் பெண்களுக்காக தனித்தனி தங்கு வசதிகள் சுத்தமான மலசல கூட வசதிகள் என்பன செய்யப்பட்டுள்ளன. படுக்கை விரிப்புகள் தலையணை வசதிகள் என்பனவும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளன. பல்வேறு விதமான ஆடைகள் கிடைத்துள்ளன. தேவைக்கு ஏற்ப அவை தரம் பிரிக்கப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிந்தது.
மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் உளவியல் ஆலோசனைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மனிதாபிமான அடிப்படையில் பணிபுரிய இயக்கம் கட்சி கொள்கை கோற்பாடு வர்ணம் எதுவுமே தேவை இல்லை என்பது இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது.
உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணமும் அதற்கான அர்ப்பணமும் இருந்தால் போதும். இந்த நல்ல உள்ளம் கொண்டவர் களின் அர்ப்பணத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக. இவர்களுக்கு நேசக்கரம் நீட்ட விரும்புகின்றவர்கள் கொழும்பு -12 பண்டாரநாயக்க மாவத்தை பாத்திமா முஸ்லிம் கல்லூரிக்கு நேரடியாக விஜயம் செய்து அங்குள்ள தொண்டர்களோடு பேசவும். முடியுமானவரை இதை பகிர்ந்து அவர்களை ஆதரிக்கவும்

Post a Comment