Header Ads



விஜயகலாவின் வேதனை

வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதாக ஜனாதிபதி கூறியிருந்தாலும், அதற்கான சாத்தியக் கூறுகள் இதுவரையில் நல்லாட்சி அரசாங்கத்திலும் காணப்படவில்லை என சிறுவர் மகளிர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டினார்.

வடமாகாணத்தில் நீதியமைச்சின் கீழ் மத்தியஸ்த சபைகள் (காணி) ஸ்தாபித்தல் மற்றும் நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் காணிப்பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. இந்த காணிப் பிரச்சினையினால் எமது மக்கள் நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள்.

வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் உள்ள மக்களை 6 மாத காலத்திற்குள் மீள்குடியேற்றம் செய்வதாக எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

எதிர்வரும் யூன் மாதம் நிறைவடைவதற்கு முன்னர் இந்த மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும். ஆனால், அவ்வாறான சாத்தியக்கூறுகள் நல்லாட்சி அரசாங்கத்தில் காணப்படுவதாக இல்லை. அந்த நடவடிக்கைகளை வெகு விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமது சொந்த காணிக்காக உரிமை கோரிய பலர் உயிரிழந்து விட்டார்கள். யார் உரிமை கோருவது என்ற பிரச்சினையும் அங்கு நிலவுகின்றது. முன்னர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் வலி.வடக்கில் உள்ள ஆலயங்களுக்கு பூசை வழிபாட்டிற்காக சென்று வந்திருக்கின்றறோம்.

ஆனால் பின்னர் அந்த இடத்திற்கு செல்ல முடியாதவாறு பாதைகள் மூடப்பட்டிருந்தன. வடமாகாணத்தில் உள்ள மிகப்பெரிய காசநோய் வைத்தியசாலை இதுவரையில் திறந்து வைக்கப்படவில்லை. அந்த வைத்தியசாலை இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

தமிழ் மக்கள் பாதிக்கக்கூடாது என்ற வகையில், கட்டாயம் எமது காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காணி அமைச்சும், நீதியமைச்சும் முன்வர வேண்டும். இவ்வாறான ஒரு அமைப்பு இங்கு உருவாக்கப்பட்டமைக்கு எமது நல்லாட்சி அரசாங்கம் காரணமாக இருக்கின்றது.

அந்த நல்லாட்சி அரசைக் கொண்டு வந்தவர்கள் எமது தமிழ் மக்கள். அத்துடன், இங்கு கலாசார சீரழிவுகளும் இடம்பெற்று வருகின்றன. எமது அப்பாவி மக்களுக்காக இந்த மத்தியஸ்த சபை உருவாக்கப்பட்டுள்ளமைக்கு நன்றிகளையும் தெரிவிப்பதாக கூறினார்.

No comments

Powered by Blogger.