Header Ads



பேருவளை முஸ்லிம், மீனவர்களுக்கு சல்யூட் அடிப்போம்..!


-ரூமி ஹாரிஸ்-

கொழும்பு மற்றும் மத்திய மலைநாட்டின் பல பகுதிகள் மண்சரிவினாலும், வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டு கோடிக்கனக்கான சொத்துக்களும், நூற்றுக்கனக்கான உயிர்களும் காவுகொள்ளப்பட்டமை யாவரும் அறிந்ததே.

மண்ணில் புதைந்துபோன வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட இம்மக்களது இயல்புவாழ்க்கையினை மீட்கும் நோக்கில் ஏராளமான அமைப்புக்களும், இயக்கங்களும், தொண்டு நிறுவனங்களும், தனி மனிதர்களும் தம்மால் இயன்ற பங்களிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் பல்வேறு சவால்களுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் முன்னெடுத்துவருகின்றமை பாராட்டுக்குரிய விடயமே. ஏனைய நாடுகளைப்போலல்லாது இலங்கையர்கள் ஜாதி, இனம், மதம் என்ற பேதங்களின்றி அனர்த்தமொன்று நிகழ்ந்தவுடன் துரிதகதியில் களத்தில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனுக்குடன் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் சர்வதேச ரீதியில் நாமே முதலிடத்திலிருக்கின்றோம் என்று பெருமையடைவதில் பிழையில்லை என்றே நினைக்கின்றேன். 

தற்பொழுது மும்முரமாக நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள இயக்கங்களும், அமைப்புக்களும், தொண்டு நிறுவனங்களும் நிறுவன ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமையினால் ஒவ்வொரு குழுவினதும் பங்களிப்புக்களும், சேவைகளும் சமூக வலைத்தளங்களினதும், ஊடகங்களினதும் உதவியினால் சர்வதேசம் வரை சங்கமித்திருக்கின்றதெனலாம். மேலும் அவர்களது குறியீடை பிரதிபலிக்கின்ற பதாதைகளும், ஆடைகளும் இக்குழுவினரை மக்கள் மத்தியில் பிரபல்யப்படுத்திவிடுகின்றன. என்றாலும் தனிநபர்களாலும் சிறிய குழுக்களாலும் மேற்கொள்ளப்படுகின்ற மனிதாபிமான உதவிகள் அச்சிறிய குழுவினருடனேயே முடக்கப்படுகின்றது. தங்களது செயற்பாடுகள் விளம்பரப்படுத்தப்பட வேண்டுமென்ற நோக்கமோ, தாம் பிரபல்யமாக வேண்டுமென்ற ஆசையோ இச்சிறிய குழுக்களிடம் இருப்பதில்லை. மீட்பு நடவடிக்கைகளின் போது புகைப்படங்களை எடுப்பதற்கோ அல்லது அவற்றை பதிவேற்றுவதற்கோ அவர்களுக்கு நேரமும் வாய்ப்பும் இருந்திருக்காது. மாறாக தாங்களது சக்திக்கேற்ற மனிதநேய பணிகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீரைத் துடைக்க வேண்டுமென்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாகும். அவ்வாறானதொரு ஆர்ப்பாட்டமில்லாத, துணிசசலான ஓரு இளைஞர் குழுவை பற்றியே இந்த ஆக்கம் தொடரவிருக்கின்றது.

இலங்கையின் தென்மேற்கு கரையில் கொழும்பிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் அமையப்பெற்றுள்ள கரையோர நகரமே பேருவளை. இலங்கை முஸ்லிம்களின் முதல்குடியேற்றமாக வரலாற்று ஏடுகளில் பதியப்பட்டுள்ள பேருவளை நகரமானது இலங்கையின் முதலாவது முஸ்லிம் பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அப்றாறினையும், முதலாவது முஸ்லிம் பெண்கள் பாடசாலையான அல்பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் பெண்கள் பாடசாலையினையும், இலங்கை முஸ்லிம்களுக்கு அறிவொளி வீசிக்கொண்டிருக்கும் ஜாமிஆ நளீமிஆவினையும், இக்ரா தொழிநுட்ப கல்லூரியினையும், கெச்சிமலை தர்காவினையும், காதிரியதுன் நபவியா தரீக்காவின் கோட்டையான புகாரி தக்கியாவினையும் பெருமையோடு சுமந்துநிற்கின்றது. பேருவளையில் அமையப்பெற்றுள்ள அழகிய மீன்பிடி கிராமமே மருதானை. இக்கிராமத்தின் சனத்தொகையில் நூறு சதவீதமும் முஸ்லிம்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கிராமத்தின் அழகிற்கு அணி சேர்க்கும் வகையில் மருதானை கரையில் கம்பீரமாக பர்பரீன் தீவு காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பெரும் அபிமானத்தைபெற்ற இத்தீவு சர்வதேச ரீதியில் பிரபல்யம் பெற்றதாகும். மருதானை மக்களின் பிரதான ஜீவனோபாயமாக மீன்பிடி, வியாபாரம், இரத்தினக்கல் வியாபாரம், என்பன காணப்படுகின்றன. இம்மருதானை கிராமத்தின் மீனவர்களே எமது இந்த ஆக்கத்தின் கதாநாயகர்கள்.

அன்றாடம் பல சிரமங்களுக்கு மத்தயில் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து அதன்மூலம் பெறும் சிறிய வருவாய்மூலமே இம்மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தினை மேற்கொள்கின்றனர். புயல்காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு நாட்களில் இம்மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை. அன்றயை நாட்களில் எதுவித வருமானமும் இல்லாமல் திண்டாடுவார்கள். பேருவளையிலோ அல்லது அதன் அயல் பிரதேசங்களிலோ இயற்கை அனர்த்தங்கள் நிகழ்கின்ற சந்தர்ப்பங்களில் இம்மருதானை மீனவர்கள்தான் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக முதலில் களமிறங்குகின்றனர். தமது உயிரினையும் பொருட்படுத்தாமல், எந்தவிதமான எதிர்பார்ப்புக்களுமின்றி மக்களை மீட்கின்ற மனிதாபிமான உதவிகளை துணிச்சலோடு மேற்கொண்டுவருகின்றனர். இறை திருப்தியினையும், இறை அருளினையும் முதலாய்கொண்டு எந்தவிதமான ஆர்ப்பாட்டங்களுமின்றி, விளம்பரங்களுமின்றி தமது மீட்பு பணியினை மேற்கொள்ளும் இந்த ஏழை மீனவர்கள் உண்மையில் பாராட்டப்படவேண்டியவர்களே.

இவர்கள் கடந்த காலங்களில் பல்வேறு இன்னல்களுக்கும், அசௌகரியஙகளுக்கும் மத்தியில் பல உயிர்களை இறைவனின் உதவியோடு காப்பாற்றியுள்ளனர். கடந்த காலங்களில் களுத்துறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் நீரிழ் மூழ்கிய வியங்கல்லை, வெலிப்பன்னை மற்றும் ஏனைய பிரதேச மக்களை மீட்பதில் இம்மீனவர்களின் பங்களிப்பு அலாதியானது. இரவுபகல் பராது உண்ண உணவின்றி இம்மீனவர்கள் தங்களது வள்ளங்களில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் தென்மேற்கு கடலில் ஏற்பட்ட புயல்காற்று காரணமாக கடலில் தத்தளித்த சிங்கள மீனவர்களை மீட்பதில் கடற்படையினரே வியக்கும் அளவிற்கு இவர்களது செயற்பாடுகள் துணிச்சலாக அமைந்திருந்தன. கொந்தளித்துக்கொண்டிருந்த கடலின் ராட்சத அலைகளையும், புயல்காற்றினையும் எதிர்த்து இம்மீனவர்கள் சிங்கள மீனவர்களை கரைசேர்த்தனர்.

அந்தவகையில் வழமையைப்போன்றே மருதானை மீனவர்கள் இன்று கொழும்பிலும், அதன் புறநகரிலும் தங்களது வள்ளங்ககுடன் மீட்பு நடவடிக்கைகளில் களத்தில் இறங்கியுள்ளனர். தமது உயிரினையும் பொருட்படுத்தாது வெள்ளத்தில் தமது வீடுகளிலும், கல்வி நிலையங்களிலும் முடங்கியிருந்த ஏராளமான உயிர்களை மீட்டிருக்கின்றனர். இன்னும் மீட்டுக்கொண்டிருக்கின்றனர். சில அபாயகரமான வெள்ளம் சூழ்ந்த இடங்களில் படையினரே பின்வாங்கிய நிலையில் துணிச்சலோடு தமது வள்ளங்களில் சென்று காப்பாற்றியிருக்கின்றனர். வெல்லம்பிட்டியிலுள்ள ருகைய்யா பெண்கள் அரபுக்காலாசாலை மாணவிகள் ஐம்பது பேih மீட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்திலேயே செத்துக்கொண்டிருந்த ஏராளமானவர்கள் புன்னகையோடு கரைசோந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

பல கல்விமான்களும், தனவந்தர்களும் தாமும் தம்பாடும் என்று ஒதுங்கியிருக்கின்ற வேளையில் கல்வித்துறையிலும், சமூக அந்தஸ்திலும் ஏதோ இம்மீனவ சமூகம் பின்னடைந்திருந்தாலும் அளப்பறிய மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு விலைமதிப்பற்ற மனித உயிர்களை மீட்டுக்கொண்ருக்கின்றமை வரவேற்கத்தக்கதே. இம்மீனவ சகோதரர்கள் எம் மண்ணின் மைந்தர்கள் என்ற அடிப்படையில் எமது பேருவளை மக்கள் அனைவரும் எந்த பேதங்களுமின்றி இவர்களுக்கு ஒரு சல்யூட் அடிப்போமா? எத்தனையோ பேரின் கண்ணீரை புன்னகையாக மாற்றிய இவ்வேழை மீனவர்களின் வாழ்க்கையிலும் வசந்தம் வீச பிரார்த்திப்போம்!

10 comments:

  1. மெய்சிலிர்க்க வைக்கும் மனிதநேயம்!
    இல்லவே இல்லை,
    அதையும் தாண்டிய ஒன்றின்மீதான வலிமை மிக்க மன உறுதி, நம்பிக்கையின் அதிஉன்னத பிரதிபலிப்பு அல்லவா இது.
    யாஅல்லாஹ் இவர்களை நீ பொருந்திக்கொள்வாயாக.
    ஆமீன்..
    யாரப்பல் ஆலமீன்.

    ReplyDelete
  2. பேருவல சகொதரர்கலே நன்றி

    ReplyDelete
  3. மருதானையின் மாண்பை மனித அபிமானத்தின் ஊடான அர்ப்பணத்தால் மாநிலம் அறியச் செய்த கடல் சிங்கங்கள் அவர்கள்!

    ReplyDelete
  4. அல்லாஹ்வின் அருளும் ரஹ்மத்தும் அவர்களுக்கு கிடைப்பதாக.

    ReplyDelete
  5. அல்லாஹ்வின் அருளும் ரஹ்மத்தும் அவர்களுக்கு கிடைப்பதாக.

    ReplyDelete
  6. Mashallah, nice article brother. Put the salute away- not going to do any good to them. Pray for them- may Allah bless them with health and strength so that they could do more and more; may Allah make their life prosperous; may Allah forgive their sins and grant them Jannah. (if possible- edit the headline and say 'Let's pray/make dua for Beruwala so and so...')

    ReplyDelete
  7. Thank you brother's jazakallah hu khair.

    ReplyDelete
  8. بارك الله فيكم تقبل الله أعمالكم وجعلها الله فى موازين حسناتكم

    ReplyDelete

Powered by Blogger.