இயற்கை அனர்த்தம் தொடர்பில், பாராளுமன்றத்தில் சொல்லப்பட்டவை
வெள்ளத்தில் மூழ்கியுள்ள வீடுகளில் தங்கி யுள்ளோர் அவற்றை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் எதிர்வரும் நாட்களில் நீரின் மட்டம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு போதுமான அளவு நிதியை வழங்க நிதியமைச்சு உறுதியளித்துள்ளது என்றும் அரசு குறிப்பிட்டது.
பாராளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது கேள்வி, பதில் நேரத்தின் பின்னர் இடர் முகாமைத்துவ அமைச்சின் விசேட அறிக்கைகள் விடுத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா இதனைத் தெரிவித்தார். அமைச்சர் சபையில் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மழைவெள்ளம், மண்சரிவுகளால் பாரிய பாதிப்புக்களுக்கு மக்கள் உள்ளாகியுள்ளனர்.
இதனால் 219 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. 4,14, 677 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 98, 0750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 43 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. 28 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 286 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளன. 3057 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. 594 பாதுகாப்பான இடங்களில் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 61, 382 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இத்தரவுகள் இன்றுவரையானதாகும்(நேற்று) எதிர்வரும நாட்களில் இதில் மாற்றங்கள் ஏற்படலாம். அரநாயக்க மண்சரிவினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன .
களனி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எதிர்வரும் 3 நாட்களுக்கு மழை தொடர்ந்து பெய்யும். எனவே மழைவெள்ளத்தில் சிக்கிக்கொண்டு இன்னமும் வீடுகளில் தங்கியிருப்போர் தத்தமது வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
எதிர்வரும் நாட்களில் நீரின் மட்டம் மேலும் உயரும் ஆபத்து உள்ளது. இவ்வாறு மக்கள் வெளியேறும் வீடுகளுக்கு படையினர் பாதுகாப்பை வழங்குவார்கள். அது தொடர்பில் அச்சப்பட வேண்டியதில்லை.
முப்படையினரும் மீட்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றார்கள். தற்போது கடற்படையினரின் 150 படகுகள் மீட்புப் பணியில் பயன்படுத்தப்பட்ட போதும் போதுமானதாகவில்லை. எனவே எதிர்வரும் நாட்களில் படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நிதியை பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதியும்இ பிரதமரும் பணிப்புரை விடுத்துள்ளனர்.
அத்தோடு நிதியமைச்சும் இதனை வழங்க அனுமதித்துள்ளது. நேற்று நானும் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்தவும் கொழும்பு நகரில் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டோம்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு குறுகிய காலஇ நீண்ட காலத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. மரணமானவர்கள் தொடர்பில் 1 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் வீடுகளை திருத்திக் கொள்வதற்கு ரூபா 1 இலட்சம் தொடக்கம் ரூபா 25 இலட்சம் வரை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு காப்புறுதி பொறுப்பு நிதியமொன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

Post a Comment