Header Ads



அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட, மக்களின் உடனடிக் கவனத்திற்கு...!

வெள்ளத்தினாலும் மண்சரிவினாலும் முற்றாகவோ பகுதியளவிலோ பாதிக்கப்பட்ட மக்கள் தமது கிராம சேவையாளர் மூலமாக முறையான பதிவு நடவடிக்கைகளையும் இழப்பு மதிப்பீட்டையும் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்த விரும்புகிறோம்.

அரசாங்கம் நேற்று முன்தினம் முதல் பிரதேச செயலகங்கள் ஊடாக, கிராம சேவையாளர்கள் மூலமாக பதிவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.எனினும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ள பகுதிகளில் இன்னமும் சுத்திகரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படாத காரணத்தினால் அங்கு மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சகல கிராம சேவையாளர்களும் தமது அதிகாரத்திற்குட்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளின் வீடுகளுக்கு நேரடியாக வருகை தந்து பதிவுகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

எனவேதான் பாதிக்கப்பட்ட மக்கள் தத்தமது கிராம சேவையாளர்களுடன் தொடர்பில் இருப்பதுடன் அவர்கள் மூலமாக தமது இழப்பு மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்
.
இதேவேளை தமது இழப்புகள், காணாமல்போன பொருட்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் அறிவுறுத்தப்பட்டு ள்ளனர்.

எனவேதான் தாமதியாமல் சகலரும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.
இதேவேளை சில தினங்களாக கொழும்பு மற்றும் மல்வானை ஆகிய பகுதிகளில் பள்ளிவாசல்கள் மூலமாகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் தரவுகள் திரட்டப்பட்டுள்ளன.

எனினும் இவை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பீடு செய்யவும் கிடைக்கப் பெறும் உதவிகளை பகிர்ந்தளிக்கவும் தனியார் தொண்டு நிறுவனங்களுக்கு நிவாரண உதவிகளை பள்ளிவாசல்கள் மூலமாக விநியோகிக்கவுமே உதவியாக அமையும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் கிராம சேவையாளரினால் மேற்கொள்ளப்படும் பதிவுதான் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படும் என்பதையும் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகிறோம்.

இது விடயத்தில் பாதிக்கப்பட்ட சகல மக்களையும் விழிப்புணர்வூட்டவும் அறிவூட்டவும் வேண்டியது சகலரதும் கடப்பாடு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

No comments

Powered by Blogger.