Header Ads



ரணில் - கரு சந்திப்பு, காரணமானவர்களைக் கண்டறிய லக்ஷ்மனுக்கு பணிப்பு

பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு வாக்குகள் குறைவதற்குக் காரணமானவர்களைக் கண்டறியுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்படி வாக்களிப்பில் வாக்குகள் குறைய காரணமானவர்கள் மற்றும் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறும் அதேவேளை மேற்படி வாக்களிப்பின் போது ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் நடந்துகொண்ட விதம் தொடர்பில் தமக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை 55 மில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது ஆளும் கட்சியில் பெரும்பாலானோர் சபையில் பிரசன்னமாகியிருக்காததால் பெரும் பிரயத்தனத்துக்குப் பின்பே வாக்களிப்பு மூலம் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டிய ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பின்றிச் செயற்பட்டமை தொடர்பில் கண்டறியுமாறே பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபை முதல்வரைப் பணித்துள்ளார். சிங்கப்பூருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் உடனடியாகவே சபாநாயகர் கரு ஜயசூரியவைச் சந்தித்து சம்பந்தப்பட்ட வாக்களிப்பு தொடர்பில் விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.

பாராளுமன்றத்தில் குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்களிப்பு செயற்பாடுகள் முறையாக நடைபெறவில்லை என எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதனைக் கவனத்திற்கொண்ட சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் நான்கு பேரடங்கிய குழுவொன்றை நியமித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.