Header Ads



யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் - நிலைமை மோசம் என ஏற்றுக்கொண்ட அமைச்சர்

வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பவம் உட்பட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் அதிகரிப்பு ஆகியவற்றை உடனடியாக கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருமாறு சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகலரட்நாயக்கா மற்றும் பொலிஸ் அதிகாரியை இன்று -10- செவ்வாய்க்கிழமை காலை அலரிமாளிகையில் வடக்கு மற்றும் கொழும்பு புத்திஜீவிகள் குழுவொன்று சந்தித்து வலியுறுத்தியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒன்றுகூடிய வடமாகாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் வடக்கில் இடம்பெறும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ந்திருந்தனர். யாழ்.ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், டாக்டர்கள்,  சட்டத்தரணிகள், சமயத் தலைவர்கள், வங்கியாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள், அரசுசாரா நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டு வடக்கு மக்களின் நல்வாழ்வுக்கான பல தீர்மானங்களை எடுத்தனர். இதன்போது அவசர நடவடிக்கைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு  அந்தக் குழு சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் பேசி அழுத்தங்களைக் கொடுத்து வன்முறைகளைத் தடுக்க உடன் நடவடிக்கை எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அமைக்கப்பட்ட அவசர நடவடிக்கைக் குழுவே முதலில் சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகலா ரட்நாயக்காவைச் சந்தித்தது. இதன்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் பொலிஸ் உயர் அதிகாரியும் அமைச்சருடன் கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

இச்சந்திப்பின்போது புத்திஜீவிகள் சார்பில் கலந்துகொண்ட மதகுருமார், சட்டத்தரணிகள், டாக்டர்கள், விரிவுரையாளர்கள் பல புள்ளிவிபரங்களுடன் வடக்கின் வன்முறைச் சம்பவங்களை எடுத்துக்கூறியுள்ளனர். இதனைக் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் வடக்கின் நிலைமை மிகவும்  மோசமாக உள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார். எனவே உடனடியாக பொலிஸ் மா அதிபருடன் உரையாடி உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிய அமைச்சர் அடுத்தவாரம் அளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியதும் அவருடன் கலந்துரையாடி வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் அதற்காக தனது செயலாளர் ஜெகத் விஜயவீராவையும் குடாநாட்டிற்கு அனுப்பி போதைப்பொருள் அதிகரிப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் சமூகத்தோடு இணைந்து பொலிஸார் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

மேற்படி அவசர நடவடிக்கைக் குழுவினால் புள்ளிவிபரங்களுடன் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மேற்படி குழுவினர் அமைச்சருக்குத் தெரிவித்த விபரங்கள் வருமாறு -

யாழ் போதனா வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரி அலுவலக தரவுகளின்படி ஜனவரி தொடக்கம் வைகாசி முதல் வாரம் வரை இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் அதிகரிப்புகள் குறித்த சரியான புள்ளிவிபரங்களின் ஆவணம் ஒன்றும் பொலிஸ் திணைக்களத்தால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட செய்திகளின் புள்ளிவிபரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

ஜனவரி தொடக்கம் பெப்ரவரி 140 வன்முறைச் சம்பவங்கள்
மார்ச் 136 வன்முறைச் சம்பவங்கள்
ஏப்பிரல் 126 வன்முறைச் சம்பவங்கள்
மே மாதம் முதல் எட்டுத்தினங்களில் மாத்திரம் 55 வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மேற்படிக் குழுவினர் அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.