பிறந்த சிசுவின் வயிற்றில் "கருக்குழந்தை' சீனாவில் விந்தை
சீனாவில் பிறந்த சிசுவின் வயிற்றுப் பகுதியில் ஒரு கருக்குழந்தை இருப்பது தெரிய வந்தது.
மருத்துவ உலகில் மிக அரிய சம்பவமான இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சீன அரசு இணையதள செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சீனாவின் ஷான்ஸி மாகாணத் தலைநகர் ஜியானில் ஒரு பெண் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தார்.
அந்த ஆண் இரட்டையர்கள் குறைமாதமாகப் பிறந்தாலும், அவை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், அந்த இரட்டையரில் ஒரு சிசுவின் வயிற்றுப் பகுதியில் வளர்ச்சி கண்டறியப்பட்டது.
அதனை ஆய்வு செய்ததில் அது ஒரு கருக்குழந்தை என்று தெரிய வந்தது.
அந்தக் கருக்குழந்தைக்கு எலும்புகள், நகங்கள் அமைந்திருந்தன. சிசுவுக்குள் கருக்குழந்தை எனப்படுகிற அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஐந்து லட்சத்தில் ஒரு பிரசவம் மட்டுமே இது போல நிகழ்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
குழந்தை பிறந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு, வயிற்றுக்குள் இருந்த கருக்குழந்தை வெற்றிகரமாக நீக்கப்பட்டது.
தற்போது இரட்டையர்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனர் என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், சிசு வயிற்றினுள் இருந்த கருக்குழந்தையின் நிலை பற்றி எதுவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்படவில்லை.

Post a Comment