எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்ள, ஆயத்தமாகுமாறு ஜனாதிபதி பணிப்புரை
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் அவர்கள் தலைமையில் ஏற்புடைய அனைத்து பிரிவுகளும் உள்ளடங்கும் வகையில் இவ் ஜனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளது.
இச்செயலணியின் முதலாவது கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (23) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
சேதமடைந்த வீடுகளை மீளநிர்மாணித்தல், சேதமடைந்த கைத்தொழில்கள் மற்றும் வாழ்வாதார மார்க்கங்களை மீளக் கட்டியெழுப்புதல், அவதானமான இடங்களில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துதல் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடுமென எதிர்பார்க்கப்படும் சுகாதாரப் பிரச்சினைகளை முகாமை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல் ஆகியன இச்செயலணியினை தாபிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் வெளிநாடுகள் பலவும் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டு நாடு எதிர்நோக்கியுள்ள அனர்த்த நிலைமை தொடர்பில் வழங்க முடியுமான உதவிகள் பற்றி வினவியுள்ளதுடன், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க படகுகள் மற்றும் அத்தியவசிய உணவுப் பொருட்களைத் தாங்கிய இந்தியாவின் இரண்டு கப்பல்கள் தற்போது இலங்கை வந்தடைந்துள்ளது. இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அவசரத் தேவைகள் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அரச உத்தியோகத்தர்களை அறிவூட்டுவதற்கு மக்களுக்கு வசதியளிக்கப்பட்டுள்ளதுடன் அனர்த்தங்களுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு நன்கொடையாக கிடைக்கப்பெறும் நிவாரணப் பொருட்களைச் சேகரிப்பதற்காக மாவட்ட செயலகங்களில் நிவாரணப் பொருட்களை சேகரிக்கும் மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் குறைவின்றி வழங்குமாறும் எந்தவொரு அவசர நிலைமையினையும் எதிர்கொள்ளக் கூடியவாறு ஏற்புடைய பிரிவுகளை ஆயத்தமாக வைத்திருக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2016-05-21

Post a Comment