Header Ads



சிப்லி பாறுக் சொல்லும், முக்கியமான விசயங்கள்..!

மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய உதவி அரசாங்க அதிபர் என்கின்ற கதிரை முஸ்லிம்களுக்குரிய கதிரை ஆனால் இன்னும் அது மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 1992 ஆம் ஆண்டு விடுதலை புலிகளால் கொலை செய்யப்பட்ட இப்பிரதேசத்தைச் சேர்ந்த வை. அஹமட் அவர்களுக்குப் பிறகு இன்னும் அந்த கதிரை நிரப்பப்படாமல் இருப்பதென்பது உண்மையில் இந்த சமூகம் இன்னும் விழிப்படயவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்தின் கோறளைப்பற்று மேற்கு கோட்டத்தில் அமைந்துள்ள பாடசாலையான மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் மாகாண சபையின் 35 இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்படவுள்ள இரண்டு மாடிக்கட்டடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் அவர்கள் கலந்து கொண்டதோடு, வலயக்கல்விப்பணிப்பாளர் சேகு அலி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் றியால், பாடசாலையின் அதிபர் அபுல்ஹசன், பாடசாலை அபிவிருத்தி குழு மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பாடசாலை நிகழ்வுகளுக்கு செல்லுகின்ற போது அரசியலுக்கு அப்பால் சென்று சமூகத்திலே கல்வியினால் மாணவர்கள் எதை சாதிக்க இருக்கின்றார்கள் என்ற விடயங்களை நாங்கள் சொல்ல வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

அதை நாங்கள் நூறு வீதம் பயன்படுத்துகின்றோமா? என்றால் அது இல்லையென்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் கல்வியில் பின்தங்கி நிற்கின்றது என்றால் அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அரசியல் அதிகாரம் பாராளுமன்றத்திலே எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது. மாகாணத்தில் எங்களுக்கு அதிகாரம் இருக்கின்றது என்று பேசுகின்ற நாங்கள் நிருவாகத்தில் எந்த அளவிற்கு அதிகாரத்தை பெற்றிருக்கின்றோம் என்ற கேள்விக்குறிக்கு இந்த சமூகம் விடை கொடுக்க முடியாமல்த்தான் இருக்கின்றது.

எவ்வாறு நாங்கள் அரசியல் அதிகாரங்களை விட்டுக்கொடுக்க முடியாது என்று பேசுகின்றேமோ அதே போன்று நிருவாக அதிகாரங்களையும் விட்டுக்கொடுக்க முடியாது என்கின்ற விடயத்திலும் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும்.

அவ்வாறு இருந்தால் நிருவாகத்தினை நாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது வெறுமெனே சாதாரண தரம் படித்து விட்டு பெற்றுக்கொள்ளலாமா? உயர்தரம் படித்து விட்டு பெற்றுக்கொள்ளலாமா? பல்கலைக்கழகம் சென்று விட்டு பெற்றுக்கொள்ளலாமா? என்கின்ற கேள்விகளுக்கு பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பொன்றினை படிப்பது மாத்திரமல்ல அதனூடாக என்னென்ன போட்டிப்பரீட்சைகளில் தோற்ற முடியுமோ அதில் நாங்கள் தோற்ற வேண்டும்.

உதாரணமாக நிருவாக சேவையாக இருக்கலாம் அல்லது கல்விச்சேவையாக இருக்கலாம் அல்லது திட்டமிடல் சேவையாக இருக்கலாம் அல்லது கணக்கியல் சேவையாக இருக்கலாம் அல்லது பொறியியல் சேவையாக இருக்கலாமென்று எத்தனையோ வகையான இலங்கை சேவைகள் (Srilanka Services) முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப இப்பதவிகளை நிரப்புவதற்கு தகுதியானவர்கள் இல்லை என்பது மிகப்பெரும் கவலையான விடயம்.

ஆனால் எதிர்காலத்திலே வர இருக்கின்ற சமூகம் இவ்வாறு ஒருபோதும் இருக்க முடியாது அதுவும் குறிப்பாக ஆண் பிள்ளைகளுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. கல்வி கற்கின்ற விடயத்தில் ஆண் பிள்ளைகளின் பங்களிப்பு வெகுவாக குறைந்து கொண்டு வருகின்றது.

பெண் மாணவிகள் கல்வியில் மிக ஆர்வமாக இருக்கின்றார்கள் இதே மாணவிகள் உயர்தரம் கற்று பல்கலைக்கழகம் சென்று பட்டப்படிப்புகளை முடித்து இலங்கை சேவைகளுக்குள் உள்வாங்கப்பட்டு தமது கடமை நிமிர்த்தம் இரவு வேளைகளில், தனிமையில் அல்லது தூர இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்ளும்போது தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றி இந்த சமூகத்தின் பொறுப்புக்களை சுமக்காத ஆண் பிள்ளைகள் இவ்வாறான பெண் அதிகாரிகளை விமர்சிக்கின்றவர்களாக இருப்பார்கள்.

ஆகவே நான் சொல்லவில்லை பெண்கள் படிக்கக்கூடாதென்று ஆண்பிள்ளைகளும் இதற்கு சமமாக படிக்க வேண்டும் இப்பொழுது வருகின்ற எல்லா பெறுபேறுகளையும் எடுத்து பார்க்கின்ற பொழுது 60 அல்லது 65 வீதத்திற்கு மேற்பட்ட நல்ல பெறுபேறுகளை பெறுகின்றவர்கள் பெண் மாணவிகள் அதை ஆண் மாணவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.

இம்மாணவர்களுக்கு தனியார் கல்வி வியாபாரிகளால் சாதாரண தர மாணவர்கட்கான கல்வி வழிகாட்டல் என்ற போர்வையில் பாடசாலைகளுக்குள்ளும் வெளிஇடங்களிலும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து ஒட்டு மொத்த ஆண்பிள்ளைகளின் முறையான கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற ஓர் நிலைமை உருவாகி இருக்கின்றது. சாதாரண தரம் படிக்கின்ற போதே மாணவர்களின் சிந்தனையில் பதிக்கப்படுகின்ற விடயம் நான் உயர்தரத்தில் இரண்டு வருடம் கல்வி கற்க வேண்டும் அதற்குப் பிறகு பல்கலைக்கழகம் சென்று அங்கு நான்கு வருடம் அதற்கு பிற்பாடு நான் ஒரு தொழிலை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு அல்லது ஒரு வருடம் என்று மொத்தமாக எட்டு வருட காலத்திற்குப் பிறகு ஒரு 10000 ரூபாய் அல்லது 15000 ரூபாய்கள் சம்பாதிப்பதா அல்லது சாதாரண தரத்தை முடித்து விட்டு வெறும் ஒரு ஆறு மாத அல்லது ஒரு வருட குறுகிய கால கற்றை நெறியினை முடித்துக் கொண்டு வெளிநாட்டிற்குச் சென்று நான் தொழில் செய்து சம்பாதிப்பதா என்கின்ற அந்த கேள்விக்கு மத்தியில் இன்று 50 அல்லது 100 ரூபாவை பாடசாலைக்கு கொண்டு செல்கின்ற மாணவன் நினைக்கின்றான்.

ஒரு இலட்சம் ரூபாய் நான் உடனடியாக சம்பளம் பெற வேண்டுமாக இருந்தால் ஏன் நான் இந்த கல்வியினை கற்றுக்கொண்டிருக்க வேண்டும். நான் வெளிநாட்டிற்குச் சென்றால் இலட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்கின்ற அந்த எண்ணம் அவன் மனதில் உருவாக்கப்படுகின்ற போது முதற்கட்டமாக சாதாரண தரத்திலே அவன் நம்பிக்கை இழக்கின்றான் இரண்டாவது உயர்தரத்திலே தோற்றுப்போவதற்கு முனைகின்றான். ஆக மொத்தத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொலைப்பதற்குரிய எல்லா முன்னெடுப்புக்களையும் செய்து விட்டு தன்னுடைய வீட்டிலே பெற்றோர்கள் இவ்வாறான குறுகிய கால பாடநெறிகளுக்கு பணங்களை கொடுப்பதற்கு கஸ்டமாக இருந்தாலும் கூட எத்தனையோ பெற்றோர்கள் தங்களது வீடுகளை வட்டிக்காக வங்கிகளில் வைத்து விட்டு அல்லது தமது சொத்துக்களை விற்றுவிட்டு தன்னுடைய பிள்ளைகளுக்கு குறுகிய கால கற்கைநெறியினை கற்பிப்பதற்காக இரண்டு இலட்சம் மூன்று இலட்சமென்று பணங்களை செலுத்திவிட்டு அந்த பிள்ளைகளுடைய வாழ்க்கையை எண்ணி இன்று மனவேதனைப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

2001ஆம் ஆண்டிலிருந்து பொறியியல் துறையிலே நான் வேலை செய்துகொண்டிருக்கின்றேன். 2007ஆம் ஆண்டு எனக்கென்று ஒரு தனியார் கம்பனி ஒன்றினை உருவாக்கிய காலந்தொட்டு கிட்டத்தட்ட இவ்வாறாக தனியார் கல்லூரியில் கல்வி கற்றுவிட்டு என்னிடம் வருவார்கள் எங்களுக்கு சிபாரிசு கடிதம் ஒன்று கொடுங்கள் வெளிநாட்டிற்குச் சென்று வேலை ஒன்றை தேடுவதற்காக என்று என்னிடம் பெற்றுச் செல்வார்கள். எத்தனை வயதென்று அவர்களிடம் கேட்டால் 19 அல்லது 20 வயதென்று சொல்வார்கள்.

இங்கிருந்து வெளிநாட்டிற்குச் சென்று இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் அங்கு வேலைபுரிவார் அவருக்கு அங்கு கிடைக்கின்ற ஒருமாத சம்பளம் இலங்கை நாணயப்படி ஒரு இலட்சம் ரூபாய் அளவில் இருக்கும் அவர் நினைக்கின்றார் இந்த பணம் மிகப்பெரியதொரு பணம் பெரிய தொகையான பணம் நான் உழைக்கின்றேன். ஏனென்றால் 100 ரூபாய்தான் அதிகமாக பாடசாலைக்கு கொண்டு போனது அந்த இடத்திலே ஒரு இலட்சம் ரூபாய் என்பது அவருடைய எண்ணத்தில் அது மிகப்பெரும் பணம். அவ்வாறு நினைத்துக் கொண்டு வெளிநாட்டில் இரண்டு வருடம் அல்லது மூன்று வருடம் வேலை செய்துவிட்டு பத்து அல்லது பதினைந்து இலட்சம் ரூபாவினை சேர்த்துக் கொண்டு நாட்டிற்கு வருகின்றான்.

என்னுடைய அனுபவத்தில் 25 இற்கும் மேற்பட்டவர்கள் என்னுடைய சிபாரிசுக்கடிதங்களை பெற்றுச் சென்று அங்கு இரண்டு அல்லது மூன்று வருடங்கள் தொழில் புரிந்து விட்டு நாட்டிற்கு வந்து திருமணம் முடித்து தந்தையாக மாறி அந்த தாயையும் பிள்ளையையும் விவாகரத்துச் செய்துவிட்டு வீதியில் திரிகின்றார்கள் நான் அறிந்த அளவில் மூன்று பேர் இருக்கின்றார்கள் இவ்வளவுக்கும் இவர்களுடைய வயது 24. எங்கிருக்கின்றது இந்த சமூகம்?

24 வயதிலே ஒரு பிள்ளைக்கு தகப்பானாகவும் ஒரு பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு இன்னுமொரு திருமணம் முடிக்கின்ற சமூகமாக இந்த குறுகிய கால கற்றை நெறி மாற்றியிருக்கின்றது.

நீங்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும் குறுகிய கால கற்கை நெறியினை கற்பதென்பது உங்களுடைய அறிவு மட்டம் சாதாரண தரத்திலிருந்து அந்த கல்வியை நீங்கள் கற்கின்றீர்களென்றால் இதே விடயத்தை நீங்கள் ஒரு பட்டப்படடிப்பை படித்துவிட்டு கல்வி கற்கின்றபொழுது சாதாரணதர அறிவு மட்டத்துடன் ஒரு வருடம் கற்கின்ற விடயத்தை ஓர்பட்டப்படிப்பை முடித்த அறிவு நிலையில் கற்பீர்கள் என்றால் அதற்கு ஒரு வாரம் போதுமாக இருக்கும் அந்தளவுக்கு உங்கள் அறிவு வளர்ந்திருக்கும். ஆகவே நீங்கள் உங்களுடைய வாழ்க்ககையை தொலைத்து விடக்கூடாது

நீங்கள் படிக்கின்றபோதே ஒரு இலட்சியம் இருக்க வேண்டும். இந்த சமூகத்தினுடைய தலைவர்களாக வர வேண்டுமென்கின்ற இலட்சியம் இருக்க வேண்டும். அது எப்படியான தலைவனாக இருக்க வேண்டும் வெறுமனே அரசியல்த்தலைவனாக மாத்திரமல்ல இந்த சமூகத்தினை அரசியலுக்கப்பால் நின்று கொண்டு அறிவு ரீதியாக வளப்படுத்தி அதனை நீங்கள் சரியாக வழி நடாத்துகின்ற சமூகமாக நீங்கள் மாற வேண்டும்.

உயர்தரம் பெற்று தனக்கு பட்டப்படிப்பு கிடைக்கவில்லையென்றால் மாத்திரம் தான் இன்னுமொரு துறையை நாடிச்செல்லுகின்ற சமூகமாக நீங்கள் மாற வேண்டும்.

அந்த வகையில் நானும் அரசியலுக்கு வருகின்ற பொழுது நான் செல்கின்ற வீதியால் ஒரு அரசியல்வாதி வந்தால் அவரை சந்திக்காமல் வேறு வழியால் சென்றுவிடுவேன். அந்த அளவுக்கு அரசியலை எதிர்த்த ஒருவன். ஆனால் இப்பொழுது உணர்கின்றேன் நான் அரசியலுக்கு மிகவும் தாமதமாகி வந்துள்ளேன். நாங்கள் நினைத்துக்கொள்ள வேண்டும் அரசியல் என்பது எந்தவிதமான வேறுபாடுகளுமில்லாமல் சமூக உணர்வோடு செய்யப்பட வேண்டிய ஒரு சேவை காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா என்று பிரதேசவாதத்தால் பிரித்துக்கொண்டு செய்கின்ற ஒரு சமூகமாக நாம் இருக்கக்கூடாது. இந்த ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகம் எவ்வாறு அரசியல் அதிகாரங்களை பெற்றுக்கொள்ளக்கூடிய விடயத்தில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கின்றோம்.

எதிர்வரும் காலத்தில் இருக்கின்ற நீங்களும் அவ்வாறானதொரு தெளிவான சிந்தனை உங்களுக்கு இருக்க வேண்டும். அவ்வாறான நேர்மையான அரசியல்வாதிகளை உருவாக்க வேண்டும் எந்த விதமான பாகுபாடுமில்லாமல் பிரதேசவாதமில்லாமல் நாங்கள் எங்களுடைய எல்லா செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டும் உங்களுடைய கல்வியிலே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் பின்தங்கி விடாது ஒரு மார்க்கத்துடன் கூடிய சமூகத்தலைவர்களாக அறிவு ஜீவிகளாக நீங்கள் வரவேண்டும் என்றார்.

1 comment:

  1. Sir Hats off to you and caring on society mind blowing speech and cannot expecting especially from politician. #Love_you_so_much

    ReplyDelete

Powered by Blogger.