மறந்துபோன நல்லாட்சி, அமைச்சரவைக்குள் கிளர்ச்சி, பசிலுக்கு அதிர்ச்சிகொடுத்த மைத்திரி
-நஜீப் பின் கபூர்-
நாட்டில் சில மாதங்களாக நீடித்து வந்த அரசியல் உஷ்ணத்தை வெள்ளம் தணித்துப்போட்டிருக்கின்றது என்றுதான் சொல்;ல வேண்டும். வெள்ளச் சேதங்கள் மண்சரிவு போன்ற நிகழ்வுகளுக்கு அரசாங்கம் உரிய விதத்தில் தீர்வுகளைக் கொடுக்க வில்லை என்று விமல், கம்மல்பில போன்றவர்கள் காழ்ப்;பூணர்வு எண்ணத்தில் குறை பிடித்தாலும் உண்மையில் அரசு இது விடயத்தில் தனது முழுப் பலத்தையும் காட்டி நடவடிக்கைகளை மேற் கொண்டது என்பதனை நடுநிலையாகப் பேசுகின்ற எவரும் ஏற்றுக் கொள்கின்றார்கள்.
விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றி மற்றும் முக்கியமான வெசக் சமய நிகழ்வுகள் அனைத்தும் போல் இந்த முறை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கின்ற நிகழ்வுகளாக மாறிப்போய் இருந்ததை அவதானிக்க முடிந்தது. தொண்டர் நிறுவனங்களும் தனி மனிதர்களும் சிறப்பாகத் தமது பங்களிப்பை வழங்கி ஒத்துழைத்திருக்கின்றார்கள். சில அரசியல்வாதிகள் வெள்ள அழிவை தமது பிரச்சார நலனுக்கு பயன்படுத்த மேற் கொண்ட முயற்சிகள் மக்கள் மத்தியில் மிகுந்த வெறுப்பைத் தோற்றுவித்திருந்ததும் சில நாட்களாக சம்பந்தப்பட்ட இடங்களில் பார்க்க முடிந்தது.
இந்த இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும் அரசியல் அரங்கில் நடந்த சில முக்கிய தகவல்களைப் பற்றிச் சற்றுப்பேசலாம் என்று தோன்றுகின்றது.
பாராளுமன்ற இணைப்புச் செயலாளர் மியுரு பாசனகே என்பவரின் புதல்வியின் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு ஜனாதிபதி ஹெலியில் ஏறும் போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடத்தில் தனக்கு அரனாயக்க பேரழிவு நடந்த இடத்தைப் பார்க்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்ட போது அதற்கு இணங்க ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
உங்களுக்கு அந்த இடத்தை காட்டுவதற்கான எந்த வசதிகளும் தற்போது எங்களிடத்தில் இல்லை. அப்படி ஒரு ஏற்பாட்டை சடுதியாகச் செய்யவும் முடியாது நிலமை இப்படி இருக்கும் போது எப்படி நாங்கள் அங்கு உங்களை அழைத்துச் செல்வது என்று அவர்கள் திருப்பி ஜனாதிபதியிடத்தில் கேள்வி எழுப்பி இருக்கின்றார்கள்.
எனக்காக விஷேட பாதுகாப்பு மாறும் வாகனங்கள் எவற்றையும் நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டியதில்லை அதிலுள்ள சிரமங்களும் எனக்குப்புரிகின்றது, ஏதாவது கிடைக்கின்ற ஒரு வாகனத்தில் எப்படியாவது என்னை அந்த இடத்திற்கு அழைத்துச் சொல்லுங்கள் என்று ஜனாதிபதி கண்டிப்பாக அவர்களிடத்தில் கேட்டிருக்கின்றார்.
இந்த நிலையில் எப்படியோ இரு டிபேண்றர் வாகனங்களை தேடிப் பிடித்த ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு ஹெலி போய்ச் சேரும் போது அதனை அங்கு தயார் நிலையில் வைத்திருந்தனர். விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் இன்றி குறிப்பிட்ட இடத்திற்குப் போன ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதல்களைக் கூறியதுடன் நிவாரனப் பணிகள் தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளை அங்கு வழங்கி இருக்கின்றார்.
இதற்கிடையில் அகால மரணமான மேல் மாகாணசபை உறுப்பினர் சரத் சுமனசேகர அவர்களின் பெலவத்த இல்லத்திற்கு ஜனாதிபதி மைத்திரி போய் இருக்கின்றார். இவர் அங்கு செல்லும் போது கூட்டு எதிரணி முக்கிஸ்தரான தினேஷ் குனவர்தனவும் அங்கு இருந்தார். ஜனாதிபதியைக் கண்டதும் தினேஷ் அவர் அருகில் போய் நெருக்மாக உறவாடி இருக்கின்றார்.
இந்த நேரம் அங்கு வந்த பசில் ராஜபக்ஷ தினேஷ் குனவர்தனவை சற்றுத் தள்ளி இருக்குமாறு கேட்டு, ஜனாதிபதி மைத்திரியுடன் சில வினாடிகள் பேசிக் கொண்டிருந்த போது தனக்கு இன்னும் ஒரு வைபவத்திற்குச் செல்ல வேண்டி இருக்கின்றது என்று கூறி பசிலிடமிருந்து ஜனாதிபதி கழண்டு போகும் போது தினேசைப் பார்த்து நான் போகின்றேன் தினேஷ்! உங்களுக்கு இரண்டொரு தினங்களுக்குள் ஒரு நேரத்தை அறிவிக்கின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரி கூற, அந்தக் கதையைக் கேட்டு பசில் ராஜபக்ஷ அதிர்ந்து போனதுடன் மட்டுமல்லாது என்ன? எதற்காக தினேஷ் நேரம் கேட்கின்றார் என்று ஜனாதிபதியிடம் நேரடியாகவே கேட்டிருக்கின்றார்.
அதற்கு ஜனாதிபதி மைத்திரி இல்லை.. இல்லை.. என்னை சந்திக்க தினேஷ் நேரம் கேட்டார் அதனால் தான் அவருக்கு நேரம் ஒதுக்க இருக்கின்றேன் என்று ஜனாதிபதி கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்கின்றார்.
கடந்த ஆட்சியில் நடந்த ஊழல்; மோசடிகள் பணக் கொள்ளைகள் படுகொலைகள் ஆகியவற்றை மேடைகளில் பேசியே மைத்திரி -ரணில் தரப்பினர் ஆட்சியைக் கைப்பற்றினார்கள். இன்று இதுபற்றி நடவடிக்கைகளை மேற் கொள்வதற்காக அமைக்கப்பட்ட எப்சிஐடி -குஊஐனு மற்றும் சிஐடி-ஊஐனு பரிசோதனைகள் ஆமை வேகத்தில் செயலாற்றுவதால் இந்த அரசாங்கத்தைப் பதவிக்கு அமைர்த்துவதில் முக்கிய பங்காளிகளாக இருந்த சிவில் அமைப்புக்கள் மற்றும் அமைச்சர்களான ராஜித, சரத் பொன்சேக்க, சம்பிக்க, அர்ஜூன, போன்றவர்கள் கடும் அதிர்ப்தியில் இருந்தனர்.
அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை முன்வைக்க இருப்பது பற்றி ஜனாதிபதிக்குத் தெரிய வந்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவர் ரணிலுடன் இது பற்றி பேசி இந்த விடயத்தை துரித கெதியில் முன்னெடுக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார் என்று தெரிகின்றது.
குறிப்பிட்டதைப்போன்று மேற் சொன்ன அமைச்சர்கள் ஜனாதிபதி தலைமையில் நடந்த அமைச்சர் அவைக் கூட்டத்தில் இது பற்றி கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கின்றார்கள். இவர்களது இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கின்றது. அப்போது இந்த விவகாரங்களை இங்கே பேசி அதற்கு அரசியல் சாயம் பூச முனையாதீர்கள் நீங்கள் இப்படி நடந்து கொள்ளும் போது. இந்த விவகாரங்களை வெளியில் கொண்டு போய் ஊடகங்களுக்கு எத்திவைக்க ஆட்கள் இங்கே இருக்கின்றார்கள்.
இது விடயத்தில் உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் நிறையவே சந்தேகங்கள் குழப்பங்கள் இருக்கின்றன. இதனை சட்டத்தைக் கொண்டே நாங்கள் அணுகுவோம் அவ்வரில்லாமல் இங்கு இதனைப் பேசி நாங்கள் பிரச்சினையை உண்டு பண்ணினால் கள்வர்களுக்கு அனுதாபம் ஏற்பட இடம் ஏற்படும் என்று சுட்டடிக்காட்டி இருக்கின்றார் ஜனாதிபதி மைத்தரி. என்றாலும் கிளர்ச்சிக்கார அமைச்சர்கள் இந்த ஜனாதிபதியின் சமாதானத்திற்கு எவ்வளவு தூரம் அஙகீகாரம் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. எனவே நல்லாட்சிக்குள் ஒரு கிளர்ச்சிக்குழு கடந்த கால சம்பவங்கள் விடயத்தில் அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டு வருக்கின்றது.
இந்தக் கிளர்ச்சிகார அமைச்சர்கள் அமைச்சரவைக்கு எழுத்து மூல அறிவிப்பைக் கொடுத்திருக்கின்றார்கள் அதில் ஆறு முக்கிய விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
01.நாம் பதவிக்கு வந்ததும் மஹிந்த அரசாங்கத்தின் ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற் கொள்வோம் என்று கூறி இருந்தோம்.
02.அந்தக் காலத்தில் நடந்த ஊழல்களை நாம் நிரூபிப்போம் என்றும் மக்களுக்கு வாக்குறுதியைக் கொடுத்திருந்தோம்.
03.இன்று ஊழல் பேர்வளிகள் அரசாங்கம் பலிவாங்கள் நடவடிக்கைகளை மேற் கொள்கின்றது என்று மக்களுக்கு விசமத்தனமான கதைகளைப் பரப்பி வருகின்றார்கள். இதனை மக்கள் நம்புகின்ற நிலையும் இருந்து வருகின்றது.
04.ஊழல் குற்றச்சாட்டுக்கள் என்பது ஒரு அரசியல் உபாயம் மட்டுமே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் இன்று ஏற்பட்டு வருகின்றது.
05.நாம் அமைத்துள்ள இந்த விசாரணைப் பிரிவு சின்னச் சின்ன விடயங்களில் அக்கரை செலுத்துகின்றார்களே அல்லாமல் பாரிய ஊழல் விடயத்திலும் பெரும் புள்ளிகள் விடயத்திலும் இவர்கள் பார்வை விழாமல் இருக்கின்றது. இது அப்பாவிகளை நெருக்கி முக்கிய புள்ளிகளைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் போல் அமைந்திருக்கின்றது.
06.இந்த நிலமை இப்படித் தொடந்து கொண்டு செல்லுமானால் ஊழல்களை அம்பலப்படுத்தியவர்களும் அதற்காக குரல் கொடுத்தவர்களும் சமூகத்தின் மத்தியில் கோமாளிகளாக நிற்க வேண்டி நிலை வரும் என்று அவர்கள் தங்களது முறைப்பாட்டில் சொல்லி இருக்கின்றார்கள்.

Post a Comment