டிரம்ப்புக்கு அமெரிக்க உளவுத் துறை தகவல்கள்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட தொழிலதிபர் டொனால்ட் டிரம்ப் வாய்ப்பு பெறவுள்ள நிலையில், அவருக்கு அமெரிக்க உளவுத் துறையின் சிறப்பு அறிவுறுத்தல் தகவல்கள் அளிக்கப்படக் கூடும் என்று தெரிகிறது.
அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளின் சார்பில் அதிபர் தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுபவர்களுக்கு நாட்டின் உளவுத் துறையின் முக்கிய உளவுத் தகவல்கள் குறித்த அறிவுறுத்தல் நடைபெறுவது வழக்கம்.
தேசிய உளவுத் தகவல் இயக்ககத்தின் ஆணையர் இதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்வார்.
இது தொடர்பாக அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி சார்பிலான அதிபர் தேர்தல் வேட்பாளர்களுக்கு, உரிய நேரத்தில் முக்கிய உளவுத் தகவல்கள் பற்றிய அறிவுறுத்தல் வழங்கப்படும் என்று தேசிய உளவுத் தகவல் இயக்கக ஆணையர் ஜேம்ஸ் கிளாப்பர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய பதவிக்கான போட்டியில் ஈடுபட உள்ள இருவருக்கும் முக்கிய உளவுத் துறை விவரங்களை அளிக்கும் பொறுப்பை அந்த இயக்ககத்தின் அனுபவம் மிக்க மூத்த அதிகாரிக்கு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
அதிபர் தேர்தல் வேட்பாளர்களின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உளவுத் தகவல்கள் குறித்த அறிவுறுத்தல் அவர்களுக்கு வழங்கப்படும் என்று ஜோஷ் எர்னஸ்ட் கூறினார்.
குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை மாதம் 18-21 தேதிகளில் நடைபெறவுள்ளது. அப்போது அதிபர் தேர்தல் வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படும்.
அந்தக் கட்சியின் விதிமுறைகளுக்கேற்ப போதிய சிறப்பு பிரதிநிதிகளின் ஆதரவோடு அதிகாரப்பூர்வ வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் பெயர் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 25-28 தேதிகளில் நடைபெறவுள்ளது. அதன் முடிவில், அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.

Post a Comment