"மஹிந்த தரப்பினர் காணும் கனவு, எந்தவொரு நாளிலும் பலிக்காது"
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கனவு பலிக்காது என ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று -08- நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் காணும் கனவு எந்தவொரு நாளிலும் பலிக்காது.
நிறைவேற்று அதிகாரம் மற்றும் நாடாளுமன்றின் அதிகாரம் ஆகியனவற்றைக் கொண்டு செய்யும் இந்தக் கூத்துக்களினால் குற்றச்செயல்கள், மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியாது.
இன்னும் சொற்ப நாட்களில் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொண்ட குற்றச் செயல்கள் பற்றிய உண்மைகள் அம்பலமாகும்.
சிறிய மக்கள் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை. குற்றம் இழைத்தவர்கள் தப்பிக்க வழியமைத்துக் கொண்டே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், குற்றவாளிகளுக்கு எதிராக வெற்றிகரமாக விசாரணைகள் நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணைகளிலிருந்து தப்பிக்க முடியும் என எவரேனும் கனவு கண்டால் அது பலிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment