Header Ads



பிக்குமார் சட்டத்திற்கு, அப்பாற்பட்டவர்களா..?

சிங்களத்தில் ராவய 

-தமிழில் - ஹேனேகெதர பழீல்-                 

மஹிந்த ராஜபக்ஷவின் கூற்றுப்படி தற்போது நாற்பத்தியெட்டு பௌத்த பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்கமுவ நாலக தேரர் அவர்களின் கருத்துப்படி வெள்ளையர்களின் காலத்தில் கூட இவ்வாறான அளவு பிக்குமார்கள் கைது செய்யப்படவில்லை. அரசாங்கம் புத்த சாசனத்திற்கு எதிராக மேற்கொள்ளும் சூழ்ச்சியொன்றின் பிரதிபலன் காரணமாகவே இவ்வாறு பிக்குகள் கைது செய்யப்படுகின்றனர் என்ற கருத்தை சமூகத்திற்கு ஊட்டுவதற்கே இவர்கள் இதன் ஊடாக முயற்சிக்கின்றனர்

அரசாங்கம் இக்குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்க வேண்டும். இந்நிலையில் அரசாங்கம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குமாரின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை வெளியிட்டு, அப்பட்டியலில் உள்ளவர்கள் கைது செய்யப்பட்ட திகதிகளைக் குறிப்பிடுவதுடன், அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதைத் தெளிவபடுத்த வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் இந்தளவு பிக்குமார் கைது செய்யப்பட்டுள்ளனரா, அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாட்டு மக்கள் அறிந்து கொள்வர்.

புத்த சாசனத்திற்கு எதிரான சூழ்ச்சியின் பெறுபேறு என்று இவர்கள் கூறுவது உண்மையாயின், பௌத்த மதத்தை சிறப்பாகப் பின்பற்றி அதனை அலங்கரித்து, அதற்கேற்ற முறையில் தமது வாழ்வை அமைத்துக் கொண்ட பிக்குமார்களே கைது செய்யப்பட வேண்டும். ஆனால், கைது செய்யப்பட்டுள்ளவர்கள், கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள் அவ்வாறு கௌரவமான பிக்குமார்களா? அல்லது பிக்கு என்ற வடிவம் மாத்திரமா? சாசனத்தை அலங்கரித்தமையினால் தான் அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? அல்லது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்டின் பொதுச் சட்டத்தை மீறியமையினால் கைது செய்யப்பட்டார்களா?

நாம் அறிந்த சில உதாரணங்களைப் பார்ப்போம்.

உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். யானைக் குட்டியொன்றைத் திருடியமை தொடர்பான குற்றச்சாட்டு காரணமாக அவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அது குறித்து அவர் பொலிசாருக்கு வழங்கிய ஆரம்ப வாக்குமூலங்களில் அந்த யானைக் குட்டி யானைகளைக் கடத்தி விற்பனை செய்யும் ஒருவரிடமிருந்து தமக்குக் கிடைத்ததாக கூறியிருந்தார். பின்பு, யானைக் குட்டியை யாரோ ஒருவர் தனது பன்சலை அருகில் மறதியாக விட்டுச் சென்றிருந்தார் என்று கூறினார். இந்த இரண்டு கூற்றுக்களில் இருந்தும் தம்மாலோக தேரர் அவர்களின் பொய்யான முகம் தெளிவாக வெளிப்படுகிறது. யானைக் குட்டிகளைக் கடத்தி விற்பனை செய்வது நாட்டின் பொதுச் சொத்து தொடர்பான சட்டத்திற்கு முரணான கிரிமினல் குற்றமாகும். அவ்வாறான குற்றம் தொடர்பான சந்தேக நபர் ஒருவர் ஏன் கைது செய்யப்படக் கூடாது? பௌத்த பிக்கு என்ற அந்தஸ்து அவ்வாறான குற்றங்களை மறைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தற்காப்புக் கருவியா?   

கலகொடஅத்தே ஞானசார தேரர் ஹோமாகம நீதிமன்றத்தினுள் நுழைந்து நீதிமன்ற செயற்பாடுகளுக்கு ஊறுவிழைவிக்கும் வகையில் முறைகேடாக நடந்து கொண்டமையினால் தான் கைது செய்யப்பட்டார். அதன் பின்பு இன்னும் சில பிக்குமார் அந்த நீதிமன்றத்தின் முன்பாக கீழ்தரமாக நடந்து கொண்டு குழப்பம் விளைவித்தமையினாலேயே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு பிக்குமார் ஒழுக்கமுறை தொடர்பானதல்ல. நாட்டின் பொதுச்சட்டத்தை மீறியமை தொடர்பாகவாகும். அதற்கு மேலதிகமாக கைது செய்யப்பட்டுள்ள அல்லது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிக்குமார் ஒன்றில் பாதாள உலக நபர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள். அல்லது பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அல்லது வேறு சட்டங்களை மீறிய பிக்கு சந்தேக நபர்கள் ஆவர்.

நாட்டின் சட்டத்தை எவரும் மீற முடியாது. அவ்வாறு மீறுபவர்களின் அந்தஸ்தை நோக்காமல் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். பிக்கு அந்தஸ்து என்ற போர்வையில் அவ்வாறான குற்றங்களிலிருந்து தப்பிக்க முடியாது. நாட்டின் குறித்ததோர் சட்டத்தை மீறுபவர்களைக் கைது செய்ய வேண்டும் என்று சட்டம் கூறும் எனின், அவர் பிக்கு அந்தஸ்தோ அல்லது வேறு எந்த அந்தஸ்தில் காணப்பட்டாலும் அதனைக் கருத்திற் கொள்ளாது அவர் கைது செய்யப்பட வேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது புத்த சாசனத்திற்கே பயனளிக்கும். அதன் மூலம் காவியுடையினைப் போர்த்திக் கொண்டு புத்த சாசனத்தை இழிவுபடுத்துபவர்கள் சமூகத்தின் முன்னிலையில் தோலுரிக்கப்படுகின்றனர்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சட்டத்தை மீறுபவர்கள் மிகுந்த அந்தஸ்தையும், மதிப்பையும் பெற்றிருந்தனர். உடுவே தம்மாலோக தேரர் திருட்டு யானையொன்றைத் தன்வசம் வைத்திருக்கும் குற்றத்தை இழைத்துக் கொண்டே மஹிந்த ராஜஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் வெல்ல வைப்பதற்காக இராணுவத்தினரின் அனுசரணையில் தர்ம போதனை நிகழ்ச்சிகளை நாடுபூராகவும் நடாத்திச் சென்றார். 

யானைக் கடத்தல் வியாபாரம் தொடர்பாகப் பிரபல்யம் பெற்ற பன்னிப்பிட்டி தெவ்ரம் வெஹெரவின் அனைத்து நிகழ்வுகளிலும் ஒரு பக்தராக மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டார். தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிராக குரோதத்தை விதைக்கும் வகையில் மக்களைத் தூண்டி, மக்களின் தனிப்பட உடைமைகளினுள் அத்துமீறி நுழைந்தவாறு நாடு முழுவதும் ஓடித் திரிந்த கலகொடஅத்தே ஞானசார தேரர் அக்காலத்தில் அரசாங்கத்தினால் மரியாதைக்குரியவராக கண்ணியப்படுத்தப்பட்டார். கோடாபய ராஜபக்ஷவின் உதவியும் ஒத்தாசையும் அவர்களுக்குக் கிடைத்தது. ராவணா பலய போன்ற அடிப்படைவாதக் குழுக்களின் பிரதான பிக்குமார்களுக்கு பொறியியற் கூட்டுத்தாபனத்தின் வாகனங்கள் அதற்குப் பொறுப்பாயிருந்த விமல் வீரவங்சவின் உத்தரவுப்படி வழங்கப்பட்டன. 

இவ்வளவு காலமும் நித்திரையில் ஆழ்ந்திருந்த நாட்டின் சட்ட இயந்திரம் தற்போது மிகவும் மெதுவாகவாயினும் செயற்பாட்டுக்கு வர ஆரம்பித்துள்ளது. சட்டத்தின் பிடியில் தாம் சிக்கும் நிலை ஏற்படும்போது தான் இக்குற்றவாளிகளுக்கு பௌத்த மதத்திற்கெதிரான சூழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 

இக்குற்றவாளிகளின் அந்தஸ்தைக் கருத்திற் கொள்ளாமல், அவர்கள் பிக்குமாரா இல்லையா என்று பாராமல் சட்டத்தைச் சமமான முறையில் அமுல்படுத்துவதற்காகவே கடந்த ஜனவரி 08 ஆந் திகதி மக்களின் ஆணை கிடைக்கப் பெற்றது என்பதே இங்கு முக்கியமானது.

1 comment:

  1. Bhikkus are super humans in this country.They are exempted from punishment.They enjoy impunity because of their saffron coloured robes.

    ReplyDelete

Powered by Blogger.