Header Ads



நடுவானில் பிரசவம் - விமானத்தின் பெயரையே சூட்டிய தாயார்


நடுவானில் பறந்துக் கொண்டு இருந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்ததால் அந்த விமான நிறுவனத்தின் பெயரையே தாயார் குழந்தைக்கு சூட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த Jetstar flight 3K583 என்ற பயணிகள் விமானம் கடந்த 22ம் திகதி சிங்கப்பூரில் இருந்து மியான்மர் நாட்டிற்கு புறப்பட்டுள்ளது.

பயணிகளில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணம் செய்துள்ளார். விமானம் புறப்பட்ட சிலநிமிடங்களில் அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அதிர்ஷ்டவசமாக விமானத்தில் 3 மருத்துவர்களும் இருந்துள்ளனர். மருத்துவர்கள் மற்றும் விமான குழுவினரின் உதவியுடன் கர்ப்பிணி பெண்ணிற்கு சுகபிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

விமானத்தில் பயணம் செய்த அத்தனை பயணிகளும் தாயாருக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும், நடுவானில் விமானத்திலேயே குழந்தை பிறந்ததால், தாயார் விமான நிறுவனத்தின் பெயரை சேர்ந்து Saw Jet Star என தனது பிள்ளைக்கு பெயர் சூட்டியுள்ளார்.

இந்த சம்பவம் 22ம் திகதி நடந்திருந்தாலும், இந்த தகவலை ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் நேற்று முன் தினம்தான் வெளியிட்டது.

இதுமட்டுமில்லாமல், தனது விமானத்தில் குழந்தை பிறந்துள்ளதால் 750 டொலர்(1,09,578 இலங்கை ரூபாய்) மதிப்பில் குழந்தைக்கு தேவையான பொருட்களை அன்பளிப்பாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் குழந்தை பிறந்தால் எந்த நாட்டு குடியுரிமையை பெறுவது?

நடுவானில் பறந்துக்கொண்டு இருக்கும் விமானத்தில் அல்லது நடுக்கடலில் மிதந்துக்கொண்டு இருக்கும் கப்பலில் கர்ப்பிணி பெண்ணிற்கு குழந்தை பிறந்தால், அந்தகுழந்தை எந்த நாட்டு குடியுரிமையை பெறும் என்ற கேள்விக்கான பதில் இதுவரை தெளிவாக கூறப்படவில்லை.

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதிமுறையை பின்பற்றி வருகிறது.

1944-ம்ஆண்டு நாடற்ற மற்றும் குறைப்பு உடன்படிக்கை சட்டத்தின் படி, விமானம் அல்லது கப்பலில் குழந்தை பிறந்தால், விமானமும் கப்பலும் எந்த நாட்டிற்கு சொந்தமானதோ அந்த நாட்டின் குடியுரிமையை பெறும் என கூறப்பட்டது.

ஆனால், ஒரு சில நாடுகளில் ’தாயார் எந்த நாட்டை சேர்ந்தவரோ அந்தநாட்டின் குடியுரிமையை ’மட்டுமே வழங்கி வருகிறது.

இதற்குமாறாக, அமெரிக்கா எல்லைக்குட்பட்ட கடலில் அல்லது வான்வெளிபகுதியில் குழந்தை பிறந்தால், அந்தகுழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும்.

ஆனால், பிரித்தானியாவில் இந்த விதிமுறை பொருந்தாது. இவ்வாறு குடியுரிமை வழங்குவது குறித்து ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதிமுறையை பின்பற்றி வருவதால், இதுபோன்று பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குவதில் இன்றளவும் குழப்பம் நீடித்து வருகிறது.

விமானத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்?

இதுவரை எண்ணற்ற குழந்தைகள் பறக்கும் விமானங்களில் பிறந்துள்ளன. இதுபோன்ற குழந்தைகளுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளையும் வழங்கி வருகின்றன.

இந்த சலுகைகளில் ஒன்று ‘வாழ்நாள் முழுவதும் இலவசமாக விமானங்களில் பயணம் செய்வது’ ஆகும்.

அதாவது, குறிப்பிட்ட அந்த விமான நிறுவனத்தை சேர்ந்த விமானங்களில் மட்டும் இலவசமாக பயணம் செய்யலாம்.

ஆனால், இந்த இலவச சேவையை அனைத்து விமான நிறுவனங்களும் வழங்குவது இல்லை.


No comments

Powered by Blogger.