Header Ads



ஆக்கிரமிப்பு ரமல்லாவில் பலஸ்தீன கர்ப்பிணி பெண், சகோதரர் கொலை - இஸ்ரேல் அடாவடி

ஆக்கிரமிப்பு மேற்குக் கரையில் ரமல்லாஹ் நகருக்கு அருகில் கத்திக் குத்து தாக்குதலுக்கு முயன்றதாக பலஸ்தீன கர்ப்பிணி பெண் ஒருவரும் அவரது சகோதரரும் இஸ்ரேல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

23 வயது மராம் சலேஹ் ஹஸன் அபூ இஸ்மைல் மற்றும் அவரது இளைய சகோதரரான 16 வயது இப்ராஹிம் ஆகியோரே கலண்டியா சோதனைச்சாவடியில் வைத்து கடந்த புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இருவரும் ஆயுதங்களுடன் எல்லை காவலர்களை தாக்குவதற்கு நெருங்கி வந்தததை அடுத்தே அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இஸ்ரேல் பொலிஸார் விளக்கியுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பலஸ்தீன இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டதோடு இஸ்ரேல் படையினர் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் ஆக்கிரமிப்பு பலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் அத்துமீறல்களுக்கு எதிரான வன்முறைகள் வலுத்துள்ளன. இந்த காலப்பிரிவில் இஸ்ரேல் படையினர் மற்றும் சட்டவிரோத யூத குடியேறிகளினால் குறைந்தது 209 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்றதாக கூறி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர்களாவர். இந்த காலப்பகுதியில் பலஸ்தீனர்களின் தாக்குதலுக்கு இலக்காகி 29 இஸ்ரேலியர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த சகோதரர்கள் தாக்குதல் நடத்த முன்னேறி வந்தபோது அவர்களை நிற்குமாறு பல தடவைகள் உத்தரவிட்டதாகவும் அப்போது குறித்த பெண் பாதுகாப்பு அதிகாரிகள் மீது கத்தியால் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் விளக்கியுள்ளது.

இதன்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து சிறுவன் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் படையினர் பெண்ணின் மீது 15 க்கும் அதிகமான தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சம்பவத்தை பார்த்தவர்கள் பலஸ்தீன ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்ட பெண்ணை அவரது சகோதரர் நெருங்கியபோதே இஸ்ரேல் படையினர் சிறுவன் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்கள் விபரித்துள்ளனர்.

கொல்லப்படும்போது மராம் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்ததாக குடுப்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் எந்த ஒரு இஸ்ரேலியருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும் இராணுவ சோதனைச் சாவடியில் இந்த சகோதரர்கள் எந்தவொரு அச்சுறுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்று அங்கிருந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த இருவரும் ஜெரூசலத்திற்கு செல்லும் வழியில் அவர்கள் பாதை ஓரமாகச் செல்லாமல் வாகனங்களுக்கு இடையில் நடந்து கொண்டிருந்தபோது இஸ்ரேல் இராணுவத்தினர் ஹிப்ரூ மொழியில் அவர்களை நோக்கி கூச்சல் இடுவது புரியாமல் தடுமாறியதாக அங்கிருந்த ஒருவர் பலஸ்தீனின் மஆன் செய்தி நிறுவனத்திற்கு விபரித்துள்ளார்.

அப்போது இப்ராஹிம் தனது சகோதரியின் கையை பற்றிக் கொண்டு அங்கிருந்து விலகிச்செல்ல முயற்சித்தபோதே இஸ்ரேல் படையினர் பெண்ணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அவர் கீழே விழுந்தபோது உதவி செய்யச் சென்ற சகோதரர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் இருந்த பலஸ்தீன ஓட்டுநர் முஹமது அஹமது குறிப்பிடும்போது, “மராமுக்கு 20 மீற்றர் தூரத்தில் சீமந்து தடுப்புச் சுவர் ஒன்றுக்கு பின்னால் இருந்த இஸ்ரேல் வீரரே சூடு நடத்தினார். அப்போது மராம் அல்லது அவரது சகோதரர் அச்சுறுத்தலாக நடந்துகொள்ளவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. We can not accept this Israel animal behaviour. The Israel is only animal living country in this world. There is no human.
    What a big violence on woman and child. What are women and child base INGOs are going to do? Are they sleeping? ALLAH will publish them all

    ReplyDelete

Powered by Blogger.