Header Ads



சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் அதிபராக லதீப், பதவி உயர்வு

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் மூலம் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேருக்குப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.

இவர்களில் இரண்டு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் என்போர் உள்ளடங்கியுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தின் பழிவாங்கல் போக்கு காரணமாக பொலிஸ் அத்தியட்சகர்கள் சீ.ஏ. பிரேமசாந்த மற்றும் எச். எச். சூலசிறி ஆகியோருக்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவி உயர்வுகள் வழங்கப்படாமல் இருந்தது.

இதுகுறித்து பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீட்டை அடுத்து தற்போது அவர்களுக்கான பதவி உயர்வுகள் பின் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சீ.ஏ. பிரேமசாந்தவின் பதவியுயர்வு 2012ம் ஆண்டின் ஜுலை மாதம் 07ம் திகதியிலிருந்து வழங்கப்பட்டு, அவர் மோசடித் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். எச்.எச். சூலசிறியின் பதவி உயர்வு 2014ம் ஆண்டின் ஜனவரி 14ம் திகதியில் இருந்து வழங்கப்பட்டு அவர் களுத்துறை பொலிஸ் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக இரண்டு பிரதிப்பொலிஸ் மா அதிபர்களுக்கும் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்.ஏ.டி.எஸ். குணவர்த்தன மற்றும் பொலிஸ் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லதீப் ஆகியோர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் அதிபர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பதவி உயர்வு ஆணைகளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று வழங்கியுள்ளார்.

No comments

Powered by Blogger.