சிறிலங்கா - சீனா 7 உடன்பாடுகள், ரணிலின் பயணமும் வெற்றி, இழப்பீடு குறித்து மௌனம்
முடங்கியுள்ள கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் சீனாவும் சிறிலங்காவும், உறுதியுடன் இருப்பதாக, சீனாவின் மூத்த இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நேற்று சீன – சிறிலங்கா பிரதமர்களுக்கு இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான திணைக்களத்தின் தலைவர் சியாவோ கியான், ஊடகங்களைச் சந்தித்தார்.
அப்போது கருத்து வெளியிட்ட அவர், இந்தத் திட்டப் பணிகளை விரைவாகவும், விரிவாகவும் முன்னெடுப்பதற்கு இரு தலைவர்களும் இணங்கியுள்ளனர்.
திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பாக, சிறிலங்கா தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், நாங்கள் மேலதிக தொழில்நுட்ப விவகாரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. இது முக்கியமான ஒரு திட்டம். இந்த திட்டத்தை வலுவாக முன்கொண்டு செல்வதில் இரு நாடுகளும் பலமான விருப்பை கொண்டுள்ளன.
கூடிய விரைவில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்று சீனாவின் தரப்பில் நாங்கள் நம்புகிறோம். நீண்டகாலம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்தார். எனினும், இழப்பீட்டு விவகாரம் தொடர்பாக அவர் எதையும் தெரிவிக்கவில்லை.
சீன நிறுவனங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாக சிறிலங்கா உத்தரவாதம் அளித்திருப்பதாகவே அவர் குறிப்பிட்டிருந்தார். அம்பாந்தோட்டையில் சிறப்பு பொருளாதார வலயத்தை அமைப்பது குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த திட்டத்துக்கு சீனா முன்னுரிமை கொடுக்கும் என்றும், சுதந்திர வர்த்தக உடன்பாடு பற்றிய பேச்சுக்கள் விரைவுபடுத்தப்படும் என்றும், சியாவோ கியான் குறிப்பிட்டார்.
2
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்றுள்ள நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் நேற்று ஏழு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
சிறிலங்கா பிரதமருக்கும், சீனப் பிரதமருக்கும் இடையில் நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து, அவர்களின் முன்னிலையில் இந்த உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்டன.
கைதிகளை ஒப்படைப்பது தொடர்பான இரு தரப்பு உடன்பாடு
சீன வர்த்தக அமைச்சுக்கும், சிறிலங்காவின் மூலோபாய அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்பாடு
இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு
நடமாடும் சிறுநீரகப் பரிசோதனை திட்ட உடன்பாடு
சீன அபிவிருத்தி வங்கிக்கும், சிறிலங்கா மத்திய வங்கிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி குறித்த உடன்பாடு
இரண்டு நாடுகளின் தேசிய விஞ்ஞான நிறுவகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஆகியனவே கையெழுத்திடப்பட்டுள்ளன.
sri lanka -china sign
எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான உடன்பாடுகள் ஏதும் செய்து கொள்ளப்படவில்லை.

Post a Comment