Header Ads



முஸ்லிம்களை சந்திக்க ஹூசைனுக்கு, நேரம் ஒதுக்கி கொடுக்காதது ஏன்..?

இலங்கை விஜயத்தின் போது ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹூசைன் அவர்களுக்கு யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனை வழிபட நேரத்தை ஒதுக்கிக் கொடுத்த அரசின் முக்கியஸ்தர்கள் வட மாகாணத்தின் இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் சமகால அவலம் பற்றி மனம் திறந்து பேச சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் போனது மிகுந்த துரதிஷ்டமாகும். 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட  ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் அரசியல், சிவில் சமூக பிரதிநிதிகள்,பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இச் சந்திப்புகளின் போது முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி தீர்க்கமான உரையாடல்கள் எதுவும் நடைபெறவில்லையென்பதே இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மூன்று தசாப்தங்கள் தாண்டி சொந்த மண்ணின்றி வாடுகிற வட மாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளும், துன்பியல் வாழ்க்கையும் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைனிடம் இவ்வரசினாலோ அல்லது அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகளினாலோ தெளிவான முறையிலோ, ஆரோக்கியமான வடிவங்களிலோ எத்தி வைக்கப்படாமை முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை பாரிய ஏமாற்றமாகும். 

நல்லூர் கந்தனை வழிபடுமளவுக்கு வேலைப்பளுக்களின்றி சுதந்திரமாக வருகை தந்திருந்த உலகத்தின் ஆளுமைமிக்க முஸ்லிம் மனித உரிமை ஆணையாளரிடம் இந்த நாட்டின் புரையோடிப் போயிருக்கிற முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட ஆர்வம் கொள்ளாமை அல்லது சந்திப்பை ஏற்படுத்த முனையாமை அல்லது ஏற்படுத்திக் கொடுக்காமையானது மிகுந்த வருத்தமளிக்கிறது. 

பழம் நழுவி பாலில் விழுந்த தருணம் அந்தப் பழத்தையும் பாலையும் அருந்தாமல் தரையில் சிந்த விட்டது போல் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் இலங்கை விஜயமானது முஸ்லிம்களைப் பொறுத்த வரை அணுவளவும் பிரயோசனமற்றதாகியிருக்கிறது. 

சகோதர தமிழ் சமூகம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் விஜயத்தை சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்தி தம் சமூகத்தின் நிலைவரங்களை முடிந்தளவு தெளிவுபடுத்தியதை அவதானிக்க கூடியதாக இருந்தது. தமிழ் சமூகத்திற்கு சிறந்த அரசியல் தீர்வும், நீதியும் கிடைக்க வேண்டுமென்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், அதேயளவு பிரச்சினைகளுடன் இருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் ஆரோக்கியமான அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டும். 

மேலும், எமது முஸ்லிம்களின் பிரச்சினைகள் சர்வதேசமயப்படுத்த சரியான தருணமாகவும் ஆணையாளரின் விஜயம் அமைந்தது. ஆனால், வாய்ப்புகள் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு முஸ்லிம்கள் இந்த நாட்டில் நிம்மதியாய் வாழ்கின்றார்கள் எனும் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

புலிகளாலும், ஒட்டுக் குழுக்களாலும், இனவாதிகளாலும் யாழ்ப்பாணத்தில்,அம்பாறையில்,சம்மாந்துறையில்,கல்முனையில்,காரைதீவில் மட்டக்களப்பில், காத்தான்குடியில், ஏறாவூரில் குருக்கள்மடத்தில்,மூதூரில், என நாட்டின் பல பாகத்திலும் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை இன்றளவும் யாரும் சரியாக கணித்திருக்கின்றார்களா? இம் மரணங்களுக்கான மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டிருக்கின்றதா..? என ஆராய்ந்தால் முடிவு பூஜ்யமாக இருக்கிறது. 

உயிர்களைப் பறி கொடுத்து, உடைமைகளை இழந்து,ஊனமாகி நாட்டின் பல பாகங்களில் நடைப்பிணங்களாக உலாவும் அப்பாவி முஸ்லிம்களின் கண்ணீருக்கு இதுவரை யாரால், என்ன தீர்வு வழங்க முடிந்திருக்கிறது? எனவே, முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் பேசுவதற்கான, நீதியைப் பெறுவதற்கான அளப்பரிய காலகட்டம் இதுவாகும். குறிப்பாக, ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்யத் அல் ஹூசைனின் விஜயத்தில் எமது முஸ்லிம் தலைவர்கள் இவற்றை தெளிவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு மிக்கவர்களாக இருந்திருக்க வேண்டும். 

எதிர்வரும் காலத்தில் இனவாதக் குழுக்களால் முஸ்லிம்கள் எதிர்நோக்கப் போகும் சிக்கல்கலை இவ்வாறான சந்திப்புகளின் ஊடாகவும், சர்வதேசங்களுக்கு எத்தி வைத்தல் ஊடாகவும் தவிர்த்துக் கொள்ள முடியும். வெள்ளம் வந்ததன் பின்னர் விழி பிதுங்கி நிற்பதை விட வெள்ளம் வருவதற்கு முதல் அணை கட்டுவதே முஸ்லிம் அரசியலைப் பொறுத்த வரை புத்திசாதுரியமான அணுகுமுறையாகும்.

அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
சமூக சிந்தனையாளர்,
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்.

1 comment:

  1. muslimgalin padippu kooda theriyazawara inda IN thalaiwar ? ? ? awarukku ariwu illaya neram koduppazatku ? windai ulagam. muslimgal anaiwarum ALLAH oruwanai mattume namba wendum ! awan kaariyam sadippazil mihaithawan !

    ReplyDelete

Powered by Blogger.