Header Ads



முஸ்லிம் கூட்டமைப்புக்கு, பூரண அதரவு வழங்குவேன் - றிசாத் உறுதி

(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)

முஸ்லிம் அரசியல் தலைமைகளை உள்ளடக்கி நிறுவப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்புக்கு, பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராகவிருப்பதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

இதுதொடர்பில் றிசாத் பதியுதீன் கூறியதாவது,

முஸ்லிம் ஊடகவியலாளர் சிலர் இணைந்து, முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்கி, அதனூடாக இலங்கை முஸ்லிம்களின் நலனை பாதுகாக்கவும், முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எனது பூரண ஒத்துழைப்பை நல்குவேன் என உறுதியளிக்கிறேன்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபடுவதன் மூலமே பலவற்றை சாதிக்கமுடியும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. 

இன்று தமிழ் மற்றும் மலையக சமூகங்கள் ஒன்றுபட்டுள்ளன. அவற்றிடையே அரசியல் பணியாற்றும் மாறுபட்ட கொள்கை கோட்பாடுடையவர்களும் இணைந்துள்ளனர். 

சர்வதேசத்தின் கவனத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அண்மையில் இலங்கை வந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் கூட மலையக சமூகத்தின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டு சுட்டிக்காட்டியிருந்தார். அண்மையில் இலங்கைக்கு வந்த இந்திய வெளிவவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜும் மலையக சமூகத்தின் நலன்கள் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஒற்றுமையை வலியுறுத்தும் புனித இஸ்லாத்தைச் சேர்ந்த நாம் அரசியல் வேறுபாடுகளை மறந்து, நமது முஸ்லிம் சமூகத்திற்காக ஏன் ஒன்றுபட முடியாது...?

அந்தவகையில் சகல அரசியல் பேதங்களையும் மறந்து, முஸ்லிம் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவும், அதற்கு எனது பூரண ஒத்துழைப்புகளை நல்கவும் நான் தயாராகவுள்ளேன் என்றும் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.

பிற்குறிப்பு - முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் முஸ்லிம் கூட்டமைப்பின் இணைந்து செயற்பட பூரண விருப்பம் வெளியிட்டுள்ளார். இன்ஷா அல்லாஹ் அவருடைய கருத்துக்களையும் மிகவிரைவில் எதிர்பாருங்கள்..!

No comments

Powered by Blogger.