துருக்கிக்கு இலங்கையிலிருந்து வாழ்த்து..!
துருக்கி, நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் தேர்தல் வெற்றி குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி வாழ்த்து.
துருக்கியில் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (ஏகேபி) 50% வாக்குகளைப் பெற்று 550 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 317 ஆசனங்களைக் கைப்பற்றி தனியே ஆட்சி அமைக்கக்கூடிய அமோக வெற்றியைப் பெற்றுகொண்டுள்ளது.
இந்த தேர்தல் வெற்றி குறித்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் தலைவர் பேராசிரியர் அஹ்மட் தாவுத்ஒக்லு அவர்களுக்கு வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பி வைத்துள்ளது. இவ்வாழ்த்துச் செய்தியில்,
2015 நவம்பர் முதலாம் திகதி நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி பெற்றுக்கொண்ட மகத்தான தேர்தல் வெற்றி குறித்து உங்களுக்கும் உங்கள் கட்சித் தலைவர்களுக்கும் அங்கத்தவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களை இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்வதில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
உங்களது கட்சி பெற்றுக் கொண்ட இந்த மகத்தான வெற்றி ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக மாற்றங்களையும் சீர்திருத்தங்களையும் ஏற்படுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து நீங்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதைப் போன்று இது ஏகேபி கட்சியின் வெற்றி மாத்திரமல்ல, குறிப்பாக துருக்கிய மக்கள் அனைவரதும் வெற்றியாகும். மேலும் உலகளாவிய ரீதியில் நீதிக்காகவும் சமாதானத்திற்காகவும் உழைத்துக் கொண்டிருக்கும் அனைவரினதும் வெற்றியாகும்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை அடித்தளமாகக் கொண்டு தேசிய நலனை முன்னிறுத்தி செயற்படும் ஒரு அரசியல்க் கட்சி. மத்திய அரசு, மாகாண அரசு மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டங்களில் நல்லாட்சியின் அடிப்படைகளையும் பெறுமானங்களையும் பின்பற்றி நடைமுறைப்படுத்துவனூடாக எமது தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற இலக்கோடு செயற்படுகிறது.
உங்களது அனுபவங்களும் அடைவுகளும் நிச்சியமாக எமக்கும் பயனுள்ளதாகவே அமையும். ஏனெனில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மக்களின் அரசியல்க் கலாச்சாரம், நடத்தை, அரசியல்ப் பங்கேற்பு மற்றும் அபிவிருத்தி போன்றவற்றில் விழுமியங்கள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படும் ஒரு கட்சியாகும்.
மேலும் நீங்கள் பெற்றுக் கொண்டுள்ள இந்த மகத்தான வெற்றியினூடாக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து ஐரோப்பாவின் வெற்றியடைந்த நாடாக துருக்கியை கட்டியெழுப்பக் கூடிய ஸ்திரமான ஒரு ஆட்சியை அமைக்கக்கூடிய வாய்ப்பினை மீண்டும் நீங்கள் பெற்றுக் கொண்டுள்ளீர்கள் என்றே நாங்கள் நம்புகிறோம்.
துருக்கியினதும் இலங்கையினதும் பரஸ்பர நலன்களை முன்னிறுத்தி எமது உறவினை மேலும் வலுப்படுத்தி செயற்பட நாம் எதிர்பார்க்கிறோம். உங்களது சகல முன்னெடுப்புகளும் வெற்றி பெற வாழ்த்துகிறோம். எனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment