Header Ads



"முஸ்லிம் சக்திகளை ஒன்றுதிரட்ட, வேண்டியதன் அவசியம்" (வீடியோ)

தென்கிழக்கு பல்கலைகழக முஸ்லிம் மஜ்லிசின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் அரசியல்துறை விரிவுரையாளர் எம்.எம்.பாஸில் நிகழ்த்திய விஷேட உரை. 

இலங்கை தொடர்பாக தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் முஸ்லிம் தேசம் பற்றிய கருத்தாடலை நாம் மீண்டும் உரக்கச் சொல்வதற்கான அவசியத்தினை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் தேசம் பற்றிய பிரஞையினை உலகறியச் செய்த தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் மீண்டும் ஒருமுறை இந்நாட்டின் தனித் தேசிய இனமான முஸ்லிம்கள் பற்றியதொரு கவனஈர்ப்பு ஒன்று கூடலினை ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. 

முஸ்லிம் தேசமும் அதன் சுயநிர்ணயமும் குறித்த மிக நீண்ட கலந்துரையாடல்கள் அவசியப்பட்டுள்ள ஒரு சூழ்நிலையில் கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கிய சவால்கள், எதிர்காலத்தில் அவர்களை நோக்கி வரையப்படபோகின்ற தீர்வுகள் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கின்றது. அந்தவகையில் கடந்த காலங்களில் இந்நாட்டினை சிதைவடையச் செய்த கொடிய உள்நாட்டு யுத்தம் இலங்கையின் ஏனைய இனத்தேசியங்;களுக்கு ஏற்படுத்திய பாதிப்புகளுக்கு சற்றும் குறைவில்லாத அளவு முஸ்லிம் தேசியத்தினையும் பாதிக்கச் செய்துள்ளதனை நாம் அறிவோம். 

ஒரு புறம் தமிழ் தேசியத்தினுள் முஸ்லிம் தேசத்தினை சிறைபிடிக்கச் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. மறுபுறம் சிங்களப் பேரினவாதம் தமிழ் தேசியத்தினை சிதைப்பதற்கான ஒரு கருவியாக முஸ்லிம் தேசத்தினை உபயோகப்படுத்த முனைந்ததனையும் நாம் மறக்கவில்லை. அதிலும் குறிப்பாக வடக்கு கிழக்கின் உள்ளக சுயநிர்ணயத்தின் மேல் நிறுவப்பட்ட உறுதியான அரசொன்றினைக் கொண்டுநடத்துவதற்கு முஸ்லிம் தேசத்தின் பங்கு குறித்து தமிழ் தேசியவாதிகள் தெளிவான நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை.  தேசிய இனச்சிறுபான்மையினர் மற்றுமொரு சிறுபான்மை தேசிய இனத்தினை இனச்சுத்திகரிப்புச் செய்யும் கொடூரமும் இம்மண்ணில்தான் நடந்தேறியது. அதுவே இறுதியில் தமிழ் தேசிய ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்கு பங்களிப்புச் செய்தது என்ற உண்மையினையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. 

எனினும் இன்று இந்நாட்டின் முப்பதாண்டு கால கொடிய உள்நாட்டு யுத்தம் முடிவுற்றுள்ளது. ஆனாலும் முஸ்லிம் தேசத்தினை நசுக்குவதற்கான சிங்களத்தின் வேலைத் திட்டங்களுக்கு எந்தக் குறையுமில்லை. தமிழ் தேசியமும் அவ்வப்போது முஸ்லிம் தேசத்தினை மறந்து விடுகின்ற, மன்னிப்புக் கோருகின்ற நிகழ்வுகளும் நடந்த வண்ணமே உள்ளன.   

இத்தகைய புறச்சூழலில் யுத்தத்தின் முடிவு அனைவருக்கும் ஆறுதல் தருகின்ற ஒன்றாயினும் யுத்தம் முடிவுறுத்தப்பட்ட விதம் குறித்து ஏறாளமான கேள்விகள் உண்டு. அக்கேள்வி களுக்கான பதில்களைத் தேடுவதற்கான ஆக்கபூர்வமான சர்வதேச சூழலொன்றினை உருவாக்குவதில் தமிழ் தேசியத்தின் இராஜதந்திர மற்றும் அரசியல் வழிமுறைகள் ஓரளவுக்கேனும் வெற்றிகளைத் தந்துள்ளன. இதற்கமைவாகவே இலங்கையின் இன மோதல், அதனோடு இணைந்த உள்நாட்டு யுத்தம் தமிழர் பிரச்சினையாக சித்தரிக்கப்பட்டு இன்று அது சர்வதேச மட்டக் கவனஈர்ப்பினைப் பெற்றுள்ளதனையும் நாம் அவதானிக்க முடிகின்றது.

இங்கு நாம் ஐ.நா. தீர்மானம் குறித்த விரிவான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்வதற்கு அப்பால் அதன் விசாரணைக் காலப்பகுதி, அது முஸ்லிம் தேசத்தின் எதிர்காலம் தொடர்பில் எப்படியான எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடும் என்பது பற்றியே சிந்திக்கவேண்டியுள்ளது. குறிப்பாக இலங்கை வரலாற்றில் என்றுமில்லாதவாறான இனச்சுத்திகரிப்பு இந்நாட்டில் முஸ்லிம்களுக்கே இழைக்கப்பட்டது. இதன்படி 1990 ஒக்டோபரில் வட இலங்கையிலிருந்து முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டதனை நாம் அறிவோம்.  

மறுபுறும் குறித்த தீர்மானத்தின் கால வரையறை சிங்கள மற்றும் தமிழ் தேசிய கடும்போக்காளர்களால் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயமான பதில்களை வழங்குவதிலிருந்து தப்புவதற்கும் வாய்ப்புள்ளது.  எனவேதான் முஸ்லிம் தேசிய இனத்தினர் இது குறித்து விழிப்புப் பெறவேண்டிய தேவையுள்ளது. இந்நிலையிலிருந்து முஸ்லிம் சமூகத்தினை மீட்டெடுக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களிடம் உள்ளது. அதற்கான அழுத்தங்களையும் அதிர்வுகளையும் இன்றைய ஒன்றுகூடல் ஏற்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். 

ஐ.நா. தீர்மானத்தின்படி விசேட கலப்பு நீதிமன்றம் 2002 இற்கும் 2011 இற்கும் இடைப்பட்ட கால வன்முறை நிகழ்வுகளை விசாரணை செய்யவிருப்பதனால் முஸ்லிம் தனித்தேசிய இனத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அவ்விசாரணைகளிலிருந்து வெளித்தள்ளப்பட்டுவிடும் என்பதில் ஐயமில்லை. இவ்விசாரணைகள் இலங்கையின் இன மோதல் குறித்த அரசியல் தீர்வுக்கு முன்னோடியானது என்ற அடிப்படையில் எதிர்கால அரசியல் தீர்வில் அல்லது அதிகாரத்தினை பங்கிட்டுக் கொள்கின்ற செயன்முறையில் முஸ்லிம்கள் மீண்டுமொருமுறை ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும் என்ற யதார்த்தங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். 

எனவேதான் முஸ்லிம் தனித்தேசியத்தின் பலதரப்பட்ட சக்திகளை ஒன்றுதிரட்டி ஐ.நா. விசாரணைக்கான கால எல்லையினை நீடிப்பதற்கும் அதன் மூலம் முஸ்லிம்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கும் அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும். அதன் மூலமே இலங்கை இன மோதல் குறித்த எதிர்கால அரசியல் தீர்வில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கினை பெற்றுக் கொள்ள முடியும் என்று கூறி எனது உரையினை முடிக்கின்றேன். வீடியோ

2 comments:

  1. முஸ்லிம் இளைஞர்கள் அதிலும் பல்கலை கழகம் சென்ற மாணவர்களின் இந்த முயற்சியை நாம் வரவேற்பதோடு பெருமையும் அடைகிறோம். முஸ்லிம் சமூகத்தின் மூளையும் இதயமும் விழித்துக் கொண்டுதான் உள்ளது என்பதை நினைக்கும் போது மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

    முஸ்லிம் தேசியம் என்ற சொற்பதம் எதை குறிக்கின்றது என்பதை தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் சிறு விளக்கம் கொடுத்தாள் நன்றாக இருக்கும். அடுத்தது இலங்கையில் அந்த தேசியத்தின் வரையறை எல்லைகள் என்ன? என்பதையும் கூரினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  2. முஸ்லிம் இளைஞர்கள் அதிலும் பல்கலை கழகம் சென்ற மாணவர்களின் இந்த முயற்சியை நாம் வரவேற்பதோடு பெருமையும் அடைகிறோம். முஸ்லிம் சமூகத்தின் மூளையும் இதயமும் விழித்துக் கொண்டுதான் உள்ளது என்பதை நினைக்கும் போது மனதுக்கு ஆறுதலாக உள்ளது.

    முஸ்லிம் தேசியம் என்ற சொற்பதம் எதை குறிக்கின்றது என்பதை தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் சிறு விளக்கம் கொடுத்தாள் நன்றாக இருக்கும். அடுத்தது இலங்கையில் அந்த தேசியத்தின் வரையறை எல்லைகள் என்ன? என்பதையும் கூரினால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.