Header Ads



ஜூம்ஆ பள்ளிவாயல் வீதியின் இன்றைய நிலை..!

மட்டக்களப்பு கல்குடாத்தேர்தல் தொகுதியின் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக, கோறளைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட முஸ்லிம்கள் கணிசமாக வாழக்கூடிய கிராமம் தான் செம்மண்ணோடையாகும். இந்தக்கிராமம்  கல்விசார் துறைகளில் பல்வேறு இளம் இளைஞர்களையும் யுவதிகளையும் உருவாக்கி கல்குடா மண்ணுக்கு பெருமை சேர்த்துத்தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதே. இந்த செம்மண்ணோடைக் கிராமத்தின்  குபா ஜூம்ஆப்பள்ளிவாயல் வீதியின் இன்றைய நிலையே இதுவாகும். 

இவ்வீதியை செம்மண்ணோடை  அல்-ஹம்றா வித்தியாலயத்திற்குச் செல்கின்ற மாணவ, மாணவிகளும் அத்துடன், இப்பிரதேசத்தை அண்டியுள்ள இரு வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள், தொழில் புரிவோர்கள் மற்றும் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள இரு பெரும் ஜும்ஆப் பள்ளிவாயல்களுக்குச் சொல்வோர்கள் எனப்பலரும் பல்வேறு தேவைகளுக்கு பல்வேறு அசெளகரியங்களுக்கு மத்தியில் உபயோகித்து வருகிறார்கள். மிக நீண்ட காலமாகச் சேதமடைந்து கவனிப்பாரற்றுக் காணப்படும் இவ்வீதிப்பிரச்சினைக்கு எந்தவித தீர்வையும் எவராலும் இதுவரை பெற்றுக் கொடுக்கவில்லை முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. 

எமதூரில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், தொண்டு நிறுனங்கள் பலவும் இருந்த போதிலும், அவர்களால் கூட இவ்வீதிப்பிரச்சினைக்குத்  எந்தவித மாற்றுத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட வில்லை என்பதை நாமறிந்ததே. உண்மையில் ஒரு ஊர் சார்ந்த பொது நல வேலைகள் என்று வரும் போது அதை ஒரு தனி மனிதனாலோ தனி நிறுவனம் ஒன்றால் மாத்திரமோ செய்ய முடியாது என்பது  வெளிப்படையான உண்மையே. மாறாக, அதை அரசாங்கத்தின் நிதியிலிருந்து செய்ய வேண்டுமென்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், எமதூரில் எவ்வளவு படித்த மட்டங்கள், பிரமுகர்கள் இருந்தும் இப்பிரச்சினையை உரிய இடங்களுக்கு எடுத்துச் சென்று தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளதையே  நான் இங்கு கவலையுடன்  சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கல்குடாத்தொகுதியில் ஒரு பின் தங்கிய கிராமமாக இது இருந்தாலும் கூட, இது நாளா பக்கமும் மக்கள் பரந்து வாழக்கூடிய கிராமமாகும். 

ஆகவே தான் மனத்தன்மைக்குள் நின்று நாம் சிந்திக்க வேண்டும். எமது சகோதர, சகோதரிகள் திடீர் விபத்துள்ளாகி ஒரு அவசர சிகிச்சைக்காக அல்லது பிரசவத்திற்காக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதென்றால், சீரற்றுக் காணப்படும் இவ்வீதியால் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டுயுள்ளது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்….? உண்மையில், இது இந்த ஊரில் வாழக்கூடிய சகல தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கையையும் பாதிக்கும் விடயமாக நீண்ட காலந்தொட்டு இருந்து வருகின்றது. எனவே தான், இது விடயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்களும் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் அவர்களும், ஏனைய  உயரதிகாரிகளும்  கவனஞ்செலுத்தி இவ்வீதியை வடிகானுடன் கூடிய வீதியாக செப்பண்ணிட்டு தந்துதவுமாறு இப்பிரதேச பிரஜை என்ற வகையில் பனிவன்புடன் கேட்டு்க் கொள்கிறேன்

எம்.என்.எம்.யாசீர் 

No comments

Powered by Blogger.