‘ஆத்திரத்தை அடக்கினாலும், மூத்திரத்தை அடக்க முடியாது’
உலக கைகழுவும் தினம், சகிப்பு தன்மை தினம், டாக்டர்கள் தினம், செவிலியர்கள் தினம் என ஆண்டுதோறும் பல்வேறு தினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த வரிசையில் உலக கழிப்பறை தினமும் கடைபிடிக்கப்படுகிறது என்பதை கேட்கும் போதே வியப்பாக இருக்கிறதா? ஆம்... சர்வதேச அளவில் கழிப்பறை பிரச்னை மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றால் ஆச்சரியம் கூடுகிறதா...
வாருங்கள் இந்த பிரச்னையை பற்றி பேசுவோம்.கழிப்பறை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 2001ம் ஆண்டு நவ.19ம் தேதி உருவாக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் என்ற அமைப்பு. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவ.19ம் தேதியே அனைத்து நாடுகளிலும் உலக கழிப்பறை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம். சுகாதாரம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கிராம மக்களிடையே பள்ளி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.
மக்கள் பங்களிப்புடன் மானியத்தில் வீடுகளில் கழிப்பறை கட்டி கொடுக்கப்படுகிறது. இருப்பினும் கிராமப்புறங்களில் வீடுகளில் கட்டப்பட்ட கழிப்பறை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும். மழையால் கூரை வீட்டை இழந்த ஒருவருக்கு தொகுப்பு வீடு திட்டத்தில் கழிப்பறையுடன் வீடு கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால், அவர் கழிப்பறையை சமையலறையாக மாற்றிவிட்டார். மற்றொருவர் கழிப்பறையை ஆட்டுக்குட்டிகள், கோழி அடைக்கும் கூடாரமாக மாற்றிவிட்டார்.
என்னதான் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டாலும் கிராமப்புறங்களில் இது எடுபடவில்லை என்றுதான் கூற வேண்டும். கிராமவாசிகளில் சிலர், ‘வீட்டிலுள்ள கழிப்பறைக்கு சென்றால் கூச்சமாக இருக்கிறது. ....... வரவே மாட்டேங்குது. பீடியை பற்ற வைத்து ‘குப்குப்’வென புகையை ஊதி, காலைப்பொழுதில் கண்மாய் கரையில் திறந்தவெளியில் முள்செடி மறைவில் அமர்ந்து மலம் கழிக்கும் போது கிடைக்கும் சுகமே தனி’ என்கின்றனர்.
இதில் கொடுமை என்னவென்றால் வீட்டில் கழிப்பறை இல்லாததால், இரவு நேரங்களில் கூட பெண்கள் சாலையோரங்களை திறந்தவெளி கழிப்பறையாக இன்றும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் விஷ ஜந்துகள் கடிக்கு ஆளாவதும், வாகனத்தில் அடிபட்டு பலியாவதும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. சில பெண்கள் பாலியல் தொந்தரவுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
பல கிராமங்களில் கட்டி கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியவில்லை.
அவசரத்திற்கு செல்வோர் சிறுநீர், மலம் கழித்துவிட்டு தண்ணீர் இல்லாததால் திரும்பி வந்துவிடுகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரம் பேண கட்டப்பட்ட கழிப்பறை, தொற்றுநோய் பரப்பும் கூடமாக பல இடங்களில் மாறியுள்ளது. பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பறைகளில் அடாவடி கட்டணம் வசூலிப்பதாலும் சிலர் இதனை பயன்படுத்த மறுத்து வருகின்றனர். ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி கழிப்பறைகள் தண்ணீர்இல்லாததால் நாற்றமெடுக்கின்றன.
கடந்த 2013ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, ஒரு நாளைக்கு சுமார் 1,000 குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணம் சுகாதாரமற்ற கழிப்பறையே காரணம் என கூறப்படுகிறது. தமிழகத்தில் 37,002 பள்ளிகள் உள்ளன. இதில் 7,837 பள்ளிகளில் முறையான கழிப்பறை வசதி கிடையாது. இதனால் மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் திறந்தவெளியை பயன்படுத்தும் அவலம் உள்ளது. இன்று வீதிக்கு வீதி உணவகங்கள், கடைகள் அதிகரித்துள்ளன. ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் இருக்காது. இதனால் வீட்டைவிட்டு புறப்படும் முன் எல்லாவற்றையும் ‘முடித்துக்கொண்டு’ புறப்பட வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
கிராமப்புறங்களில் ஒரு பழமொழி உண்டு. ‘ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது’ என்பார்கள். பல நேரங்களில் அவசரத்துக்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து, கிடைக்கும் சந்து, பொந்து, மின்கம்பத்தில் சிறுநீர் கழித்து செல்கின்றனர். உலக கழிப்பறை தினமான இன்று நாம் சுகாதாரத்தை பேண கழிப்பறையை பயன்படுத்துவதோடு, மற்றவர்களையும் பயன்படுத்த சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த தினத்தில் உறுதி ஏற்போம்

தோஹா கட்டாரில் ஒரு PUBLIC கழிப்பறை கூட இல்லை ரொம்ப துன்பபடுறோம்
ReplyDelete