மஹிந்தவை அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டம் தொடருகிறது..?
தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்தி இதன் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்காக முன்னாள் ஜனாதிபதிக்கு நெருங்கியவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் வர்த்தகர்களும் தொடர்புபட்டுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களை கண்டுக்கொள்வதில்லை என்று சமூகத்தில் நம்பிக்கையையேற்படுத்துவதற்காக இனவாத அமைப்புகள் சிலவற்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
இதற்காக நல்லாட்சிக்கு எதிராக திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதோடு சில வர்த்தகர்கள் இதற்கு பணம் செலவிடுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய அரசாங்கம் சர்வதேசத்துடன் ஏற்படுத்தியுள்ள உறவினை காட்டிகொடுப்பென காட்டுவதற்கும் சிறுபான்மையினருக்கு அதிக சலுகை வழங்குவதாக மக்களுக்கு சுட்டிக்காட்டி நல்லாட்சியை அழிப்பதே குறித்த சிலரின் எதிர்பார்ப்பாகும்.
இதற்காக வடக்கு மாகாணத்தில் உட்பட அலுவலகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை இலக்கு வைத்தே இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதி நேரத்தில் இந்த திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்காக நல்லாட்சியில் அமைச்சு பதவி பெற்றுக் கொண்டுள்ள சுதந்திர கட்சி முக்கியஸ்தர்கள் சிலரும் நல்லாட்சியில் இருந்து விலகி ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரையில் நல்லாட்சி அரசாங்கத்தில் அமைச்சர்களுக்கு இடையில் காணப்படுகின்ற விமர்சனங்கள் தொடர்பில் மக்களின் அவதானத்தை திருப்பி அரசாங்கத்தின் மீது தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களும் செயற்படுத்தப்படுவதாக இரகசிய தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment