"அவன்ட் கார்ட்" மிரட்டும் அமைச்சர்கள், சமாளிக்கும் மைத்திரி, நழுவும் ரணில்
சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவின் கருத்துக்கு இரண்டு அமைச்சர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பில் அமைச்சர் மாரப்பன நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து, அமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர்களான ராஜித சேனாரட்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். அவன்ட் கார்ட் சம்பவம் தொடர்பிலான விடயங்களை மூடிமறைக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அவர்களே பிரதமர் அவர்களே இவ்வாறான விடயங்கள் இவ்வாறு நடைபெற்றால் நான் அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை அவன்ட் கார்ட் விவகாரத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவென்றால் நானும் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்க தயார் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அவன்ட் கார்ட் விவகாரத்தில் ஆளும் கட்சிக்குள் முரண்பாட்டு நிலைமை காணப்படுவதனால் நாமும் இப்போது எதிர்க்கட்சியை போன்று செயற்படத் தொடங்கியுள்ளோம் என அமைச்சர் ராஜித தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவன்ட் கார்ட் விவகாரம் குறித்து ஜனாதிபதி, அமைச்சர் மாரப்பனவிடம் விளக்கம் கோரியுள்ளார். இந்த விடயம் தொடர்பில் தனியாக பேசுவதற்கு அமைச்சரவைக் கூட்டமொன்றை நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
2
அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவன்ட்கார்ட் ஆயுதக் கப்பல் தொடர்பில் தவறிழைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சிலர் காலையில் ஒன்று சொல்கின்றார்கள். மாலையில் வேறும் ஒன்றை சொல்கின்றார்கள். எனினும், இந்தக் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாடாக கருதப்படக் கூடாது என ரவி கருணநயாக்க தெரிவித்துள்ளார்.
3
அவன்கார்ட் விவகாரத்தினூடாக பிரதிபலனை அனுபவித்தவர்கள் இந்த நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியிலும் இருக்கின்றனர் என பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். குற்றவாளிகளைக் கைதுசெய்வதில் தாமதம் ஏற்பட்டமை குறித்து அரசைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற வகையில் வெட்கப்படுகின்றேன் என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கடந்தகால ஊழல், மோசடிகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஊழல், மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்து சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும் என்றும், ஊழல் மோசடிகளை முடிவுக்குக்கொண்டுவர வேண்டும் என்றுதான் கடந்த ஜனவரி மாதம் 62 இலட்சம் மக்கள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு வாக்களித்தனர். ஆனால், குற்றமிழைத்தவர்களைக் கைதுசெய்வதில் இன்று தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்ற வகையில் இதையிட்டு நான் வெட்கப்படுகிறேன்.
அவன்கார்ட் விடயத்தில் அமைச்சர்கள், எம்.பிக்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலர்கள் ஆகியோர் பயன்பெற்றுள்ளனர். இந்த நாடாளுமன்றத்துக்குள்ளும், வெளியேயும் இவ்வாறு பயன்பெற்றவர்கள் இருக்கின்றனர் என்றார்.

Post a Comment