இலங்கையின் உள்ளக விசாரணைக்கு, முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் - SLMC
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேறிய அமெரிக்காவின் பிரேரணை தீர்மானத்தை அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். சர்வதேச உதவியை தட்டிக்கழிக்காது அரசாங்கம் ஏற்றுக்கொண்டமை நாட்டை பாதுகாக்க உதவியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார். இலங்கையில் நடைபெறவிருக்கும் விசாரணைக்கு இலங்கை முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்காவின் பிரேரணையை ஏகமனதாக அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்காவின் பிரேரணை எமது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அமெரிக்கா முன்வைத்த இந்த பிரேரணையை ஐக்கிய நாடுகள் சபையின் 47 நாடுகளும் ஏகமனதாக ஆதரித்துள்ளன. அதேபோல் எமது அரசாங்கமும் இந்த பிரேரணையை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதரவு தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வாறு அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் ஒரு தீர்மானம் வெளிவந்திருப்பது ஆரோக்கியமானதொரு விடயமாகும்.
கடந்த 2002ஆம் ஆண்டு இவ்வாறானதொரு வாய்ப்பு எமக்குக் கிடைத்தது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் சர்வதேச தலையீட்டுடன் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சுமுகமான முறையில் தீர்வுகான ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது எமது தரப்பினர் அந்த வாய்ப்பை தட்டிக்கழித்து செயற்பட்டதன் விளைவாக இலங்கையில் இனரீதியான ஒரு ஆயுத யுத்தம் பலமடைந்ததுடன் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களையும் நாம் இழக்க நேரிட்டது.
எனினும் இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு எமக்கு கிடைத்துள்ளது. அதுவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் அதேபோன்றதொரு தீர்வு கிடைத்துள்ளது. இம்முறை நாம் தட்டிக்கழிக்காது சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட தயாராகியிருப்பது நாட்டையும் மக்களையும் பாதுகாக்க நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அதை அரசாங்கமும் தமிழர் தரப்பும் தவறவிடமாட்டார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.
மேலும் இம்முறை ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த காலத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் மத ரீதியில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை சம்பவங்கள் தொடர்பில் ஐ.நா ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார். ஆகவே இலங்கையில் நடைபெறவிருக்கும் விசாரணைகளின் போது இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் இந்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டும்.
அதேபோல் நாட்டில் புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. அரசாங்கமும் சர்வதேசத்திடம் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆகவே இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் தவறவிடக்கூடாது. தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

Do we have accurate information with evidence about the incidents against our society which was made by LTTE ,Sinhalese extremist and other party? It is very essential
ReplyDelete