பாராளுமன்றத்தில் இன்று, பேசப்பட்ட விடயங்கள்..!
ஜெனீவா பிரேரணை தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தை அடுத்த வாரம் வழங்கவிருப்பதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (09) நாடாளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
பல்வேறு தரப்பினர் ஜெனீவா பிரேரணை குறித்த விவாதத்தை கோருகின்றனர்.
இதன் பொருட்டு அடுத்தவாரம் நாடாளுமன்றம் கூடும் போது ஒத்திவைக்கப்பட்ட விவாதத்துக்கு இடமளிக்கப்படும்.
அதேநேரம் பரணகம மற்றும் உதலகம அறிக்கைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு முன்வைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்றமை தொடர்பில் ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார்.
இதன்படி இடம்பெற்ற விவாதத்தில் கருத்து வெளியிட்ட அவர், இலங்கைக்கு சொந்தமான சொத்துக்களை, தமிழக மீனவர்கள் அத்துமீறி சூறையாடிச் செல்வதாக குற்றம் சுமத்தினார்.
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்ற தமிழக மீனவர்கள் குடிவரவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும், அரசியல் நோக்கத்துக்காக அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இலங்கையில் இருந்து யாரேனும் இந்தியா விஜயம் செய்யும் செய்யும் போது, வேறு ஒப்பந்தங்களுக்காக மீனவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.
இந்த ஒத்திவைப்பு பிரேரணை வழிமொழிந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இழுவை படகுகளை முற்றாக தடை செய்வதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தற்போது இழுவை படகை கொண்டு மீன்பிடிப்பதற்கான தடை இருக்கின்றன.
எனினும் இழுவைப் படகினை முற்றாக தடை செய்ய வேண்டும்.
அவ்வாறு செய்தால் மாத்திரமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று அவர் கூறினார்.
அதேநேரம், கடந்த அரசாங்க காலத்தில் இலங்கையில் இருந்த சில அமைச்சர்களே இழுவைப் படகுகளின் உரிமையாளர்களாக இருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.
இதனை அடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா, தமிழக மீனவர்களின் வருகையில் வடமாகாண மீனவர்களுக்கு நாளாந்தம் 60 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இந்திய மற்றும் இலங்கை கடற்படையினரும், கடலோரப் படையினரும் இணைந்து கூட்டுக் கண்காணிப்பில் ஈடுபடுவதன் ஊடாக, தமிழக மீனவர்களின் இலங்கை பிரவேசம் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய முடியும் என்று, எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த விடயத்தில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்காக இந்தியா மற்றும் தமிழக அரசாங்கங்களுடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தாம் வலியுறுத்துவதாக இரா. சம்பந்தன் கூறினார்.
அதேநேரம், இந்த விவாதத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார உரையாற்றும் போது, 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற போது தமிழக மீனவர்கள் வடமாகாண கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த நிலையில்,மனோபாவ அடிப்படையில் அவர்கள் இதற்கு பழக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் சட்டங்களின் ஊடாக இதனை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
எனினும், இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரையில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் செயற்படவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

Post a Comment