அத்தியாவசிய பொருட்களின் விலை, அதிகரிக்கும் சாத்தியம்
எதிர்வரும் சில தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன.
மேலும் சமையல் எரிவாயு, இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
இலங்கை ரூபாவின் பெறுமானத்தை நிலையாகப் பேணத் தவறியமையே குறித்த விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, உலக வர்த்தக சந்தையில் எரிபொருட்களின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் இலங்கை ரூபாவின் நிலையான பெறுமானத்தைப் பேணத் தவறியதன் காரணமாக அந்த விலை வீழ்ச்சியை நுகர்வோர் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத்திட்டத்திற்கிணங்க சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு – செலவுத்திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகுறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அதன் பின்னர் குறித்த சில உணவுப் பொருட்களின் விலையில் அதிகரிப்பு ஏற்படவில்லை. இந்நிலையிலேயே எதிர்வரும் சில தினங்களில் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
இதேவேளை இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்ட போதிலும் மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படலாம் எனவும் தெரிய வருகிறது.

இது அநியாயம்.
ReplyDeleteதோல்வியடைந்த திருடர்களைக்கூட தேசியப்பட்டியல் கொடுத்து அமைச்சர்களாக்கினீர்கள். ஏதோ சாணக்கியம் புரிகின்றீர்கள் என்று பொறுத்துக் கொண்டோம். ஆனால் இந்த விலையேற்றம் அப்படியான ஒன்றல்ல.
யானை தனது தலையிலேயே மண்ணை வாரிப்போட்டுக்கொள்ளுமாமே.. அதுபோலத்தான் அமையப்போகின்றது.