விருப்பு வாக்கு வேட்டை, இருவரை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை
2000ஆம் ஆண்டில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட இரு அபேட்சகர்களுக்கு இடையில் ஏற்பட்ட விருப்பு வாக்கு பிரச்சினையின் போது வென்னப்புவ கிரிமெட்டியான சந்தியில் வைத்து இருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவருக்கு சிலாபம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
வென்னப்புவ கிரிமெட்டியான பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவருக்கே இவ்வாறு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரவீந்திர ரணராஜா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். கடந்த 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாத தினம் ஒன்றில் வென்னப்புவ கிரிமெட்டியான சந்தியில் வைத்து மில்டன் நிசாந்த (வயது 30) மற்றும் சனத் பிரியந்த (வயது 27) ஆகிய இருவரைக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபர் 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பொது ஜன ஐக்கிய முன்னணியில் போட்டியிட்ட அபேட்சகர் ஒருவருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளமை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட சாட்சியங்களின் மூலம் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் அதே கட்சியில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த தேர்தலில் தான் ஆதரவளிக்கும் அபேட்சகருக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிரிமெட்டியான சந்தியில் பிரசார காரியாலயம் ஒன்று நடத்திச் செல்லப்பட்டுள்ளது. இந்த காரியாலயத்தில் கொலை செய்யப்பட்ட இருவரும் மேலும் சிலருடன் சம்பம் இடம்பெற்ற தினத்தில் இருந்த போது அந்த காரியாலயத்திற்குச் சற்று தொலைவில் ஜீப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இதனை அவதானித்த குறித்த காரியாலயத்தில் இருந்த கொலை செய்யப்பட்ட இருவர் உட்பட ஏனையோர் அவ்விடத்திற்குச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் அச்சந்தியில் நின்றிருந்த போது மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் முகத்தை மறைத்துக் கொண்டு அவ்விடத்திற்கு மற்றொருவருடன் வந்துள்ள குற்றம் சுமத்தப்பட்ட நபர் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரத்த வெள்ளத்தில் கிடந்த இருவரும் உடனடியாக தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அங்கு மில்டன் நிசாந்த என்பவர் உயிரிழந்துள்ளார். மற்றையவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னர் ஒரு வருட காலம் தலைமறைவாகியிருந்த குற்றம் சுமத்தப்பட்ட வர் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.சாட்சியங்களின் பிரகாரம் கொலைக் குற்றம் ஊர்ஜிதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

What a loser. The politician to whom he worked for is enjoying his life i think. Good lesson to all pakkalis of politicians.
ReplyDeleteVery good dissision
ReplyDelete