Header Ads



சும்மா இருக்கும், புது மாப்பிள்ளைகள்

-மொஹமட் பாதுஷா-

தேர்தல் காலத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் அவதானிக்கப்பட்ட வேகத்தையும் வீராப்பையும், அவர்கள் வெற்றிபெற்ற பின்னர் காண முடியவில்லை. 'அதைச் செய்வோம், இதைச் செய்வோம்' என்று கீறல்விழுந்த இறுவட்டு மாதிரிச் சொன்னதையே திரும்பத்திரும்பப் பிரசார மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், இப்போது தமது வழக்கமான நிஜ அரசியல் வாழ்வுக்குத் திரும்பியிருக்கின்றார்கள்.

பரீட்சைக்காக இரவு பகலாக படிக்கின்ற பதின்ம வயது இளைஞர்கள் தம்முடைய எல்லாப் பொழுதுபோக்குகளையும் அப்படியே மூட்டைகட்டி வைத்துவிட்டு படிக்கின்ற வேலையை மட்டுமே செய்வார்கள். ஆனால், பரீட்சைமுடிந்து விட்டால், இத்தனை நாட்களாக பார்க்காமல் இருந்த திரைப்படங்களை நாட்கணக்காகப் பார்ப்பார்கள், மணிக் கணக்காக தூங்குவார்கள்;. அதுமாதிரித்தான் இருக்கின்றது இதுவும்.

ஒவ்வொரு தேர்தல் நடைபெற்ற பின்னரும் இவ்வாறான அனுபவம் ஒன்றை வாக்காளப் பெருமக்கள் பெற்றுக் கொள்கின்றார். அதுதான் இம்முறையும் நடந்து கொண்டிருக்கக் காண்கின்றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் கடைசித் தருணம் வரைக்கும் முன்னாள் ஜனாதிபதியை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலேயே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இருந்தார். தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்ற பின்னரும் இந்த நிலைப்பாடு தொடர்ந்தது. ஆனால், மக்களில் பெரும்பான்மையானோர் மாற்றம் ஒன்றை வேண்டி நின்றனர். முக்கியமாக கட்சியின் செயலாளர் ஹசனலி போன்ற ஓரிருவர் பொது வேட்பாளருக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். 'ஒருவேளை நீங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், நான் ஒரு முடிவெடுக்க வேண்டிய நிலை உருவாகும்' என்று தலைவருக்கு செயலாளர் சாடை மாடையாகச் சொல்லியுமிருந்தார். இது மட்டுமன்றி அம்பாறை மாவட்டத்துக் வந்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்; பதியுதீனை மக்கள் தோழில் தூக்கி வைத்து 'எங்கள் தலைவனே' என்று கொண்டாடினார்கள். இவ்வாறான காரண காரியங்களோடு - வேறு வழியின்றியே  ஹக்கீம், மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தார்.

அதேநேரம் அப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஹுனைஸ் பாருக், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தார். ஆனால், மஹிந்தவின் அரசாங்கத்தில் பசில் ராஜபக்ஷவின் ஆசிர்வாதத்தோடு 'எல்லாவற்றையும்' செய்து கொண்டிருந்த ரிஷாட் பதியுதீனுக்கு 'அவை' எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஐ.தே.க. பக்கம் வருவதையிட்டும் ஆரம்பத்தில் ஏதோவொன்று அவரைத் தடுத்தது. ஆனால், வன்னிப் பெருநிலப்பரப்பில் ஹுனைஸ் பாருக்கின் செல்வாக்கு அதிகரித்ததும், மக்களின் தீர்க்கமான நிலைப்பாடு வெளிப்பட்டதும்  மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், மைத்திரிக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்துக்கு இட்டுச் சென்றார். 

இது இவ்வாறிருக்க, கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருந்தார். இந்த நாட்டில் மக்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை, தாம் செய்த சேவைக்காகவும் தமது வேண்டுகோளுக்காகவும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க வேண்டியது மக்களின் கடமை என்று அவர் நியாயப்படுத்த முனைந்தார். ரணில் பிரதமராக இருந்தபோது பிரதிக் கல்வியமைச்சராக பதவிவகித்ததை அப்படியே மறைத்து விட்டு, 'ரணில் சாரதியாக இருக்கும் பஸ்ஸில் நான் கடைசி வரையும் ஏறமாட்டேன்' என்று மேடைகளில் முழங்கி வந்தார் அதாவுல்லா. மக்களை முட்டாள்களாக்கும் இந்த அறிவிப்பு போதாது என்று அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரையும் அவர் விமர்சித்தார்.

இவ்வாறான பின்புலத்தோடு நடைபெற்ற தேர்தலிலேயே மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். நல்லாட்சி மலர்ந்தது. காங்கிரஸ்களை பிரதிநிதித்துவம் செய்த அரசியல்வாதிகளும் ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளுமாக கணிசமானோர் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். அமைச்சரவை மீள் நியமனத்தின் போது இவர்களுள் ஒரு தொகுதியினருக்கு அமைச்சு, பிரதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகள் கிடைத்தன. ஆனால், ஆன பயன் ஒன்றுமில்லை. ஆறுமாத காலப்பகுதியில் பெயரளவான அமைச்சராக எம்.பி.யாக இருந்ததைத் தவிர அவர்கள் யாரும் எந்தப் பெரிய காரியத்தையும் சாதிக்கவில்லை. இது பற்றிக் கேட்டால் அவர்கள் சொன்ன பதில் 'இது ஆறுமாத அரசாங்கம் தானே, அதனால் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கின்றது' என்பதாகும்.

சரி, அந்த ஆறுமாதம் முடிந்தது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பொதுவாக முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லோரும் மேற்குறிப்பிட்ட (ஜனாதிபதித் தேர்தல் கால) நிலைப்பாட்டையே நாடாளுமன்றத் தேர்தலிலும் கடைப்பிடித்தனர். மீண்டும் பீரங்கிப் பேச்சுக்கள் பறந்தன. 'எமக்கு வாக்களித்தால் பலம் பொருந்திய சக்தியாக இருந்து எல்லா விடயங்களையும் கையாள்வோம்' என்று ஹக்கீமும் சொன்னார், ரிஷாட்டும் சொன்னார். இதற்கான ஆணையை மக்கள் வழங்கினர். நல்லாட்சி மீள உறுதிப்படுத்தப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் பலர் எம்.பிக்கள் ஆகினர். சிலருக்கு அமைச்சு, பிரதியமைச்சு பொறுப்புக்கள் கிடைத்திருக்கின்றன.

ஆயினும் பொதுவாக முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தலுக்குப் பின்னர் அடங்கிப் போய் இருக்கின்றனர் என்பது மக்களின் அவதானிப்பு. இணைப்பாளர்களை நியமிப்பது, பொதுசன தொடர்பு அதிகாரிகளை நியமிப்பதுடன் தங்களது கடமை முடிந்து விட்டது என்று சிலர் நினைக்கின்றனர். தேர்தல் காலத்தில் உலங்கு வானூர்திகளில் அடிக்கொரு தடவை வந்து சென்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் இப்போது அதே உத்வேகத்துடன் வடக்கிற்கோ கிழக்கிற்கோ வருவதில்லை. தேர்தல்காலத்தில் அவர்களுக்கு கிடைத்த நேரம், இப்போது அவர்களுக்கு கிடைப்பதில்லை. கேட்டால் தலைவர் பிஸியாக இருக்கின்றார் என்று அவருடைய 'வால்கள்' கூறுகின்றார்கள். பிஸி என்றால் எவ்வாறான

பிஸி என்று தெரியவில்லை. ஆனால் பெரும்பாலும் அது தமது கஜானாக்களை நிரப்புகின்ற, சுயநலம் சார்ந்த ஒரு பிஸியாகத்தான் இருக்கும் என்று நாம் சொன்னாலும் தலைவர்களின் தீவிர விசிறிகளுக்கு விளங்குவதில்லை. தேர்தல் மேடைகளில் எத்தனையோ வாக்குறுதிகளை இந்த அரசியல்வாதிகள் முன்வைத்தார்கள். புதிய நாடாளுமன்றத்தில் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொண்ட மாதிரித் தெரியவில்லை. அது இருக்கட்டும், ஹக்கீமுக்கோ சரி, ரிஷாட்;டுக்கோ சரி, வேறு எந்த முஸ்லிம் அரசியவாதிகளுக்கோ இந்த அரசாங்கத்தில் கிடைக்கப் பெற்றிருக்கின்ற அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகள் என்பது தனித்து அவர்களது திறமைக்காக வழங்கப்பட்டதல்ல.

அவரை ஆதரிக்கின்ற மக்களுக்காக அன்றேல் அடகு வைக்கப்பட்ட மக்களுக்காக வைக்கப்பட்டது. எனவே, தேர்தலுக்கு செலவு செய்த காசை உழைக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக அமைச்சுப் பதவியை பயன்படுத்தக் கூடாது. அப்படித்தான் நிறையப்பேர் செய்து கொண்டிருக்கின்றார்கள். அதற்கப்பால் மக்கள் சேவை பற்றிச் சிந்திப்பது, ஆடிக்கொரு தடவை கோடைக்கு ஒரு தடவையே.

கல்யாணம் முடித்த புதுமாப்பிள்ளைக்கு கல்யாணக் கோலம் மாறுவதற்குக் கொஞ்சக் காலம் எடுப்பது போல, அரசியல் புதுமாப்பிள்ளைகளுக்கும் இன்னும் வெற்றிக் களிப்பு முடிந்த மாதிரித் தெரியவில்லை. அமைச்சு கிடைத்த மறுகணமே மக்களுக்கான சேவை தொடங்கியிருக்க வேண்டும். இச்சேவை இரண்டு வகையானது. ஒன்று, அந்த பதவிக்காக கட்டாயம் ஆற்ற பிரமாணக்குறிப்பின் படியான சேவைகள், இரண்டாவது, தமக்கு வாக்களித்த மக்களுக்காக செய்ய வேண்டிய கைமாறு சேவைகள். மக்களை மதித்து, மனச்சாட்சியுடன் இவை இரண்டையும் சமாந்திரமாக செய்கின்ற அரசியல்வாதிகளே அரசியலில் நீடித்து நிலைத்திருந்திருக்கின்றனர். மற்றவர்கள் எல்லோரும், இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றனர் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

பொதுவாக முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையே ஒரு பண்பு இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் தேசிய தலைவராக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மர்ஹூம் அஷ்ர‡பை போல தம்மையும் மக்கள் தலையில் வைத்து கொண்டாட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். ஆயினும் அஷ்ர‡பை போல செய்ய வேண்டியதை மக்களுக்குச் செய்தால் எல்லா மதிப்பும் மரியாதையும் தானாக நடக்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. காங்கிரஸ் தலைவர்களான ஹக்கீம், ரிஷாட், அதாவுல்லா போன்றோர் என்ன நினைக்கின்றார்கள் என்றால் - இந்தச் சமூகத்தை நாமே வழிநடாத்திக் கொண்டு செல்கின்றோம் என்று. ஆனால் நிஜத்தில், முஸ்லிம் சமூகம் தன்பாட்டில் போய் கொண்டிருக்கின்றது.அரசியல்வாதிகள்தான் மக்களின் முதுகளில் ஏறி சவாரி செய்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைய ஆட்சியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருப்பதாலும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருப்பதாலும் நாம் நினைக்கின்ற எல்லாமே நடந்து விடும் என்று முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பது போல் தெரிகின்றது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமான ஒரு கருதுகோளாகும். முன்னைய ஆட்சியில் யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பது தெளிவாக தெரிந்தது. நாட்டில் நமக்கெதிராக என்ன சதித்திட்டம் தீட்டப்பட்டாலும் வெளிப்படையாக தெரியும் நிலையிருந்தது. ஆனால் நல்லாட்சி என்று சொல்லப்படுகின்ற இன்றைய ஆட்சிக் கட்டமைப்பு சற்றே மயக்கமானது. எந்த புற்றுக்குள் எந்தவடிவத்தில் எந்தப்பாம்பு இருக்கின்றது என்பது வெளியில் தெரியாது. எனவே, எல்லாம் இனிதே நடக்குமென யாரும் நம்பிக் கொண்டிருக்க முடியாது.

இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை இருக்கின்றது? அவர்களது அபிலாஷை என்ன என்பது குறித்த சரியான விளக்கமோ, அதற்கான ஆதரங்களோ தேசிய தலைவர்கள் என்று தமக்குத்தாமே பெயரிட்டுக் கொண்டவர்களிடம் முழுமையாக இல்லை. எனவே முஸ்லிம்களின் பிரதான பிரச்சினைகள் குறித்த தெளிவைப் பெற்றுக் கொள்வது மட்டுமன்றி அதற்கான ஆதாரங்கள், சரியான புள்ளிவிவரங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். தமக்கு அதைச் செய்ய முடியவில்லை என்றால், அதைச் செய்வதற்கு ஆளுமையுள்ள அதிகாரிகளை தம்முடன் வைத்திருக்க வேண்டும்.

இந்தப் நாடாளுமன்றத்தின் நான்கு அல்லது ஐந்து வருடங்கள் என்பது மிக விரைவாக ஓடிவிடும். எனவே, புதுமாப்பிள்ளை கோலத்தை கலைத்து, மக்கள் சேவையில் உடனடியாக களமிறங்கி செயற்பட்டால் மாத்திரமே பல மாதங்களுக்குப் பின்னர் அதைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். வரவு-செலவுத் திட்டத்தில் வீதி அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் சென்று விடும் என்பதற்காக டிசெம்பர் மாத மழைக்காலத்தில் அவசர அவசரமாக போடப்படுகின்ற வீதிகள் போல, கடைசிக் கட்டத்தில் மக்கள் சேவைகளை மேற்கொள்ள முற்படுவதால் நீண்டகால நன்மைகள் கிடைக்காது. சேவை செய்ய வேண்டுமென நினைக்கும் அரசியல்வாதிக்கு, அமைச்சுப் பதவிதான் வேண்டும் என்பதில்லை. (த.மிரர்)

2 comments:

  1. As Long as there are people who are ready to be cheated there will be always cheaters who are ready to cheat , Don't blame the Politicions , There are professional Cheaters and the Religion,Ethnicity and comunity all are only slogans.

    ReplyDelete
  2. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை இவர்கள் ஜெயித்துக்கொண்டுதான் இருப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.