"முஸ்லிம்கள் தரமான கல்வியை பெறுவதில், பாரிய தடைகளை எதிர்நோக்கியுள்ளார்கள்"
-அபூ ஷிபா-
“ மாறிவரும் அரசாங்கங்களால் கண்டி முஸ்லிம் ஆண்கள் பாடசாலை மறுக்கப் பட்டுவரும் அதே வேளை தரம் ஒன்று பாடசாலை அனுமதிகளில் எமது முஸ்லிம்களுக்கு காட்டப் படும் பாரபட்சங்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்து எமது உரிமைகளை பெற வேண்டி ஏற்பட்டாலும் அதற்கு நாம் பின்வான் வாங்கப் போவதில்லை.” என்று சித்தி லெப்பை கல்வி அபிவிருத்தி சங்கத் (SEDA) தலைவர் டாக்டர் சலாஹுத் தீன் தெரிவித்தார்.
கண்டி மத்திய பிரதேசத்தை பிரதிநிதித்துவப் படுத்துள் பன்னிரண்டு முஸ்லிம் இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து “செடா” வின் எதிர்கால திட்டங்கள் நடவடிக்கைகள் சம்பந்தாமாக விளக்கமளிக்கும் கூட்டமொன்றில் உரை நிகழ்த்தும் போதே டாக்டர் சலாஹுதீன் மேற்படி கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர் “
இன்று கண்டி முஸ்லிம் ஆண்கள் பாடசாலையொன்றின் தேவை பற்றி மிக நீண்ட காலமாக கருத்தாடாலொன்று எம்மத்தியில் இருந்து வருகின்றது. இதுவரை எந்தவொரு அரசாங்கமும் இதை பெற்றுத் தர முன்வரவில்லை, அதேவேளை தரம் ஒன்றில் எமது மாணவர்களை சேர்பதற்கு எந்தவொரு பாடசாலையும் முன்வருவதும் இல்லை. மாறாக நூற்றுக்கு மூன்று, நூற்றுக்கு ஒன்று மட்டுந்தான் சேர்க்க முடியும் என்று பல பொய்யான சுற்று நிருபங்கள் இருப்பதாக கூறி எம்மை தத்தளிக்க விட்டுள்ளார்கள். எமது பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரிய வளங்களை பெற்றுத் தராததனால் கணித விஞ்ஞான பெறுபேறுகளில் நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம்.
இன்று கண்டி மாநகரில் வாழும் முஸ்லிம்கள் தமது பிள்ளைகளுக்கான தரமான கல்வியை பெறுவதில் பல பாரிய தடைகளை எதிர்நோக்கியுள்ளார்கள். வடக்கில் தமிழ் சமூகம் ஆயுதம் ஏந்தியதற்கு பிரதான காரணமாக இருந்தது பல்கலைக் கழக அனுமதிகளில் காட்டப் பட்ட பாரபட்ச நிலைபாடுகளே ஆகவே எமது சமூகத்தின் அடிப்படை உரிமைகளான தேவையான இந்தக் கல்வித் தேவைகளை பெறுவதற்கு ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை நாம் முன்னெடுக்க இனிவரும் காலங்களில் நாம் முனைப்புடன் செயற்படவுள்ளோம், எமது கரங்களை பலப் படுத்த முன்வாருங்கள். இந்த சித்திலெப்பை கல்லூரியை நகரில் ஒரு தலைசிறந்த பாடசாலையாக மாற்றி எமது ஏழை சிறார்களின் எதிர்கால வாழ்க்கைக்கு ஒளியூட்டுவோம். என்றார்

Post a Comment