Header Ads



ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம்களுக்கு, ஒரு கொடூரமான நிகழ்வு..!

-முகமட் ஷ}ரிப் அசீஸ்-

உள்ளக இடப்பெயர்வு என்பது ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் ஐ.டி.பிக்களுக்கு ஒரு கொடூரமான நிகழ்வு. ஐ.டி.பி முகாம்களிலுள்ள வாழ்க்கை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மற்றும் வயதானவர்களது நல்லொழுக்கத்துக்கு தீங்கு விளைவித்ததுடன், உடல், உள்ளம், சமூக, பொருளாதார மற்றும் கல்வி ரீதியாகவும் அவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம் ஐ.டி.பிக்கள் தற்போது முகம் கொடுக்க வேண்டியுள்ள சவால்களில் பெரும்பாலானவை பொருளாதார, அரசியல்,மற்றும் கலாச்சார கஷ்டங்களாகவே உள்ளன. புத்தளத்தின் வட மேற்கு கரையோரப் பகுதிகளில் 40,000 முஸ்லிம் ஐ.டி.பிக்கள் வாழ்கிறார்கள். இந்த முஸ்லிம் ஐ.டி.பிக்களின் வரவுடன் இந்தப் பிரதேசத்தின் சனத்தொகை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அவர்கள் முதலில் இங்கு வந்தபொழுது. இந்தப் பிரதேசம் நாட்டிலேயே மிகவும் குறைவான அபிவிருத்தி அடைந்த பிரதேசங்களில் ஒன்றாகவே இருந்தது மற்றும் இந்த ஐ.டி.பிக்களுக்கு பொருளாதார வாய்ப்பை வழங்கத்தக்க ஒரு நிலையில் இருக்கவில்லை. 90 விகிதமான இடம்பெயர்ந்தவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் உலக உணவுத் திட்டம் என்பன வழங்கும் உலர் உணவுப் பங்கீட்டுப் பொருட்களிலேயே தங்கியிருந்தார்கள். அத்தகைய வளம் குறைந்த ஒரு பிரதேசத்தில் இந்த ஐ.டி.பிக்களுக்கு தங்கள் சொந்தக் கால்களில் பிடித்து நிற்க முடியாத ஒரு நிலை இருந்தது. அதற்கு மேலாக முஸ்லிம் ஐ.டி.பிக்களின் வருகை மேலும் சில முரண்பாடுகளையும் மற்றும் பதட்டமான சூழ்நிலையையும் உள்ளுர்வாசிகள் மற்றும் முஸ்லிம் ஐ.டி.பிக்கள் இடையே உருவாக்கியிருந்தது.

அகதிகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஐ.டி.பிக்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களாகவே உள்ளார்கள். ஸ்ரீலங்காவை பொறுத்தவரை முஸ்லிம் ஐ.டி.பிக்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப் பட்டவர்களாகவும் மேலும் தமிழ் மற்றும் சிங்கள ஐ.டி.பிக்களுடன் ஒப்பிடுகையில் பல வழிகளிலும் பாதிக்கப் பட்டவர்களாகவே உள்ளார்கள். முதலாவதாக கட்டாய வெளியேற்றத்தை பொறுத்தவரை, தமிழ் அல்லது சிங்கள இனத்தை சேர்ந்த எந்த ஒரு இனக் குழுவினரும் இவர்களைப் போல 24 மணித்தியாலங்களில் எல்.ரீ.ரீ.ஈ யினால் கட்டாயமாக வெளியேற்றப் படவில்லை. மேலும் அவர்களது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உட்பட முழுச் சொத்துக்களும் துப்பாக்கி முனையில் எல்.ரீ.ரீ.ஈயினால் பலவந்தமாக பறிக்கப்பட்டது அல்லது கொள்ளையிடப் பட்டது. வேறு எந்த ஒரு இனக்குழுவிற்கும் இப்படியான நிலை ஒருபோதும் ஏற்படவில்லை. இந்த கட்டாய வெளியேற்றத்தினால் வடக்கில் உள்ள முஸ்லிம்கள் அந்த நேரமான 1990 ன் மதிப்பில் கிட்டத்தட்ட 100,000 மில்லியன் ரூபாக்களை இழந்திருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது. இன்றுவரை இந்த இழப்புக்களுக்கான இழப்பீடோ அல்லது திருப்பிச் செலுத்துகையோ வழங்கப் படவில்லை. ஸ்ரீலங்காவில் இந்த இடம்பெயர்ந்தவர்கள் எந்த அளவிற்கு பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.

இரண்டாவதாக 1990 ல் இந்த உள்ளக இடம்பெயர்வு நடத்தப்பட்ட விதம் மிகவும் மிகவும் கொடூரமானது. இவர்களுக்கான எதுவிதமான போக்குவரத்து ஏற்பாடும்  ஒன்றில் எல்.ரீ.ரீ.ஈ யினாலோ அல்லது தனது சொந்த மக்களை பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டிய ஸ்ரீலங்கா அரசாங்கத்தாலோ வழங்கப் படவில்லை எனத் தெரிவிக்கப் படுகிறது. அநேக மக்கள் வில்பத்து காட்டுப் பகுதியூடாக 100 கி.மீ தூரம்வரை நடந்து புத்தளத்தை அடைந்த அதேவேளை வேறு சிலர் சிறிய படகுகள் மரத்துண்டுகள், குழாய்கள், பைபர்கிளாஸ் என்பனவற்றை பயன்படுத்தி அபாயகரமான வழியாக கடலைக் கடந்தார்கள். இது மிக மிக கொடூரமான ஒன்று, உலகத்திலுள்ள வேறு யாருக்கும் இப்படியான ஒரு நிலை வரவே கூடாது என நான் விரும்புகிறேன். இடப் பெயர்ச்சிக்கு ஆளான ஒரு பெண் குறிப்பிடும்போது, தான் கடலைக் கடந்த வேளையில் தனது இரண்டு வயது மகளை இழந்து விட்டதாக, மற்றொரு ஐ.டி.பி தான் வில்பத்து காட்டினைக் கடந்து வந்து கொண்டிருந்தபோது தனது மகன் காட்டு மிருகங்களினால் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தார் ( புத்தளத்தில் முஸ்லிம் ஐ.டி.பிக்கள் உடனான நேர்காணல் 2014).

மூன்றாவதாக விருந்தினர்களான முஸ்லிம் ஐ.டி.பிக்களுக்கும் மற்றும் புரவலர்களான புத்தளத்தில் உள்ள உள்ளுர் வாசிகளுக்கும் இடையிலான மோதல். உண்மையில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் ஐ.டி.பிக்கள் புத்தளத்துக்கு வந்த வேளையில் அங்கு பெருமளவு முரண்பாடுகள், தப்பெண்ணங்கள் மற்றும் நம்பிக்கையீனங்கள் என்பன இந்த இரு குழுக்களிடையேயும் பல்வேறு விடயங்களில் ஏற்பட்டன. இரு பகுதியினரும் தங்கள் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தங்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சிறிது காலம் பிடித்தது. சில முஸ்லிம் ஐ.டி.பிக்கள் தாங்கள் உள்ளுர் சமூகத்தினரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் தவறாக நடத்தப்பட்டதாகவும் மற்றும் ஓரங்கட்டப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்கள். உள்ளுர் சமூகத்தினரது கருத்து என்னவென்றால் தங்கள் உள்ளுர் வளங்களுக்கு இந்த முஸ்லிம் ஐ.டி.பிக்கள் போட்டியாளராக வந்துவிட்டார்கள் என்றிருந்த அதேவேளை முஸ்லிம் ஐ.டி.பிக்களின் கருத்து புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளுர் பிரதேசத்தில் வேலை தேடுவதை தவிர தங்களுக்கு வேறு தெரிவு எதுவுமில்லை என்பதாக இருந்தது. உண்மையில் கடந்த காலங்களில் இந்த இரு பகுதியினருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்ட பல சம்பவங்கள் அறிவிக்கப் பட்டிருந்தன. எனினும் பின்னர் இரண்டு குழுக்களுமே சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துடன் ஒரே சமூகமாக வாழத் தொடங்கின. தற்சமயம் இந்த இரண்டு குழுக்களிடையேயும் மோதல்கள் எதுவும் நடப்பதில்லை இறுதியாக, உள்ளக இடப்பெயர்வு மற்றும் நீணட காலம் ஐ.டி.பி முகாம்களில் வசிப்பது என்பது மூவின மக்களுக்குமே பொதுவானது என்ற போதிலும், 25 வருடங்களாக ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமோ அல்லது சர்வதேச சமூகத்திடம் இருந்தோ எதுவித நீடித்த தீர்வும் கிடைக்காமல் ஐ.டி.பி முகாம்களில் வாழ்பவர்கள் இந்த முஸ்லிம் ஐ.டி.பிக்கள்தான்.

இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்களின் பாதுகாப்பு

உள்ளக இடப்பெயர்வுக்கு  ஆளானவர்களின் பாதுகாப்பை பொறுத்தமட்டில் இந்த ஐ.டி.பிக்களை பாதுகாக்கும் பிரதான பொறுப்பு உள்நாட்டு அரசாங்கத்துக்கே உரியது. உள்நாட்டு அரசாங்கத்திடம் ஐ.டி.பிக்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்கான வேண்டுகோள் விடுப்பதற்கும் மற்றும் தங்களுக்கான பாதுகாப்பை பெறுவதற்குமான உரிமை உள்ளது. அப்படியான வேண்டுகோள்களை விடுப்பதற்காக அவர்களை துன்புறுத்த முடியாது. தான் வழக்கமாக வாழ்ந்திருந்த வீட்டில் இருந்து எதேச்சதிகாரமான முறையில் இடப் பெயர்ச்சிக்கு ஆளான ஒவ்வொரு மனிதப் பிறவிiiயும் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை உள்ளது. எனினும் எல்லா அரசாங்கங்களும் இந்தப் பொறுப்பை ஒரேமாதிரியாகப் பூர்த்தி செய்வதில்லை அல்லது தனது சொந்த ஐ.டி.பிக்களுக்கு சமமான பாதுகாப்பை வழங்கவதில்லை. பல அரசாங்கங்கள் தங்கள் பாதுகாப்பு ஆட்சியினை அலட்சியப் படுத்துகின்றன, சில வேண்டுமென்றே தங்கள் மக்களை கட்டாய இடப்பெயர்வு, பட்டினி,கூட்டுக் கொலைகள் மற்றும் ஏனைய ஆபத்தான மனித உரிமை மீறல்களுக்கு இலக்காக்குகின்றன, அதேவேளை வேறு சிலவற்றுக்கு சொந்தமாக தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் ஆற்றல் இல்லாமல் உள்ளன. இவ்வாறான சூழ்நிலைகளில் அரசாங்கங்கள் தங்கள் சொந்த ஐ.டி.பி க்களை பாதுகாக்க விரும்பாமல் அல்லது இயலாமல் உள்ளன, அப்போது அந்த ஐ.டி.பி க்களை பாதுகாக்கும் பொறுப்பு சர்வதேச சமூகத்தை சென்றடைகிறது. ஸ்ரீலங்காவில் அரசாங்கம் ஐ.டி.பி க்களை பாதுகாக்கும் பொறுப்பினை தானே ஏற்றுக்கொண்டு 300,000 தமிழ் ஐ.டி.பிக்களை வடக்கில் மீளக் குடியமர்த்தியது மற்றும் அநேக சிங்கள ஐ.டி.பிக்களை ஸ்ரீலங்காவின் வட மத்திய மாகாணத்தில் குடியமர்த்தி உள்ளது. எனினும் முஸ்லிம் ஐ.டி.பிக்களை மீளக் குடியேற்றுவதற்கு அதிக கவனம் செலத்தப்படவில்லை. எனினும் மோதல் முடிவடைந்து ஆறு வருடங்களாகிவிட்ட போதிலும், ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகிய இரண்டுமே முஸ்லிம் ஐ.டி.பிக்களை மீளக் குடியமர்த்தும் விடயத்திலோ அல்லது இன்னும் அதற்கான ஒரு நீடித்த தீர்வைக் காணும் விடயத்திலோ அதிக கவனம் செலுத்தவில்லை.

மீளக் குடியமர்த்தலில் உள்ள சவால்கள் 

வடக்கு முஸ்லிம் ஐ.டி.பிக்களின் மீள்குடியேற்றம் இன்னமும் தீர்க்கப் படாமலேயே உள்ளது. தற்போதைய நிலைக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. நான்கு பிரதான சவால்கள் அவர்கள் மீள்குடியேற்றத்துக்கு தடையாக உள்ளன. முதலாவதாக அவர்களது மீள்குடியேற்றத்துக்கு தேவையான கணிசமான திட்டங்கள் எதுவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் இல்லை. இரண்டாவதாக வட மாகாண முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளின் முக்கியமான பகுதிகள் மோதலின்போது எல்.ரீ.ரீ.ஈ யினால் கையகப்படுத்தப்பட்டு தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. மூன்றாவதாக வீடமைப்பு உதவிகள் திறனற்ற நிலையில் உள்ளன, இந்திய அரசாங்கம் 50,000 வீடுகளை ஐ.டி.பிக்களுக்காக ஒதுக்கியுள்ளது, ஆனால் இதில் எத்தனை வீடுகள் முஸ்லிம் ஐ.டி.பிகளுக்கு வழங்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இறுதியாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தாலோ அல்லது சர்வதேச நிறுவனங்களாலோ நிருவகிக்கப்படும் மோதலின் பின்னான மீள்குடியேற்றத் திட்டங்களின் பயனாளிகளாக முஸ்லிம் ஐ.டி.பிக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் முயற்சிகள் மிகவும் குறைவாக உள்ளன. உண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் மற்றும் சர்வதேச அமைப்புகள் என்பன தமிழ் ஐ.டி.பிக்களை மீள் குடியேற்றம் செய்வதிலேயே அதிக கவனம் செலுத்துகின்றன. தமிழ் ஐ.டி.பிக்களை மீள் குடியேற்றுவது, முஸ்லிம் சிறுபான்மையினரை மீள்குடியேற்றுவதைக் காட்டிலும் அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது ஏனென்றால் அது சிங்கள மற்றும் தமிழ் இனக் குழுக்களிடையே உள்ள முறுகலைத் தணிப்பதற்கு பெரிதும் உதவும் என அரசாங்கம் கருதுகிறது, தமிழ் இனக் குழுக்கள்தான் யுத்தத்தின் மையமாக இருந்தன. இதற்குச் சமாந்தரமாக சர்வதேச அமைப்புகளும் மற்றும் நிதி வழங்குனர்களும் தமிழ் ஐ.டி.பிக்களை மீளக் குடியேற்றும்படி அழுத்தம் கொடுத்து வருகின்றன. இவைகளுக்கு அப்பால் முஸ்லிம் ஐ.டி.பிக்களை குடியேற்றும் விடயத்தில் இன்னும் சில சவால்களும் உள்ளன. 2012ல் புத்தளத்திலிருந்த  முஸ்லிம் ஐ.டி.பிக்கள் குழுவொன்று சுயமாகவே மன்னாருக்குச் சென்று தங்களது முந்தைய வீடுகளில் மீளவும் குடியேறியது. எனினும் அதை வில்பத்து காட்டுக்குள் அத்துமீறியதாக கருதப்பட்டு அவர்களது மீள்குடியேற்ற நடவடிக்கை தற்காலிகமாக தடுக்கப்பட்டது.

(கலாநிதி. முகமட் ஷ}ரிப் அசீஸ் - கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கை பீட விரிவுரையாளர் ஆவார்) தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்
 

No comments

Powered by Blogger.