ரணிலின் ஜப்பான் விஜயம், சீனாவுக்கு சொல்லபட்ட செய்தி..!
-ஹரிகரன்-
கடந்த ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர், இலங்கையின் வெளிவிவகாரக் கொள்கையில் நிகழ்ந்துள்ள பெரியதொரு மாற்றத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானியப் பயணம் எடுத்துக் காட்டியிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இருந்து, ஒரு வழக்கம் இருந்து வந்தது, ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், முதல் பயணத்தை இந்தியாவுக்கு மேற்கொள்வது அதையடுத்து சீனாவுக்குச் செல்வது இது தான் அந்த வழக்கம்.
மஹிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்த பின்னர், இலங்கையில் சீனாவின் செல்வாக்கு மிகையாகியிருந்தது. போர்க்காலத்தில் பாதுகாப்புத் தேவைகளுக்கும், போருக்குப் பிந்திய காலத்தில் அபிவிருத்தி மற்றும், உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும் சீனாவின் தயவிலேயே இலங்கை தங்கியிருந்தது. மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னர், கடந்த ஜனவரி மாதம், அதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முதலில் புதுடில்லிக்கும் அடுத்து பீஜிங்கிற்கும் பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவரும் மஹிந்த ராஜபக்ஷவின் பாரம்பரியத்தையே பின்பற்றினார். ஆனால், கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க, வழக்கம்போலவே முதலாவதாக கடந்த மாதம் புதுடில்லிக்குப் பயணத்தை மேற்கொண்டார்.
ஆனால், அவரது இரண்டாவது பயணம் சீனாவுக்கு இடம்பெறவில்லை. அதற்குப் பதிலாக ஜப்பானுக்கே பயணம் மேற்கொண்டார். இது, சீனாவிடம் இருந்து தற்போதைய அரசாங்கம் வெகுவாக விலகி நிற்கிறது என்பதற்கான அடையாளம். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் உள்ளிட்ட சீனாவின் சில அபிவிருத்தித் திட்டங்களை இலங்கை அரசாங்கம், மீளாய்வு என்ற பெயரில் இடைநிறுத்தியது. அது சீனாவுக்கு எரிச்சலூட்டியதென்றாலும், இலங்கையுடன் அதிகளவில் முரண்பட விரும்பவில்லை.
புதிய அரசாங்கம், அனைத்து நாடுகளுடனும், சமமான அளவில் உறவுகளைப் பேண விரும்புவதாக அறிவித்திருந்தாலும், சீனாவிடம் இருந்து விலகிச் செல்லும், மேற்குலகின் பால் நெருங்கிச் செல்லும் வெளிவிவகாரக் கொள்கையையே தற்போதைய அரசாங்கம் கடைப்பிடித்து வருகிறது என்பதே உண்மை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஜப்பானியப் பயணத்தையிட்டு, சீனா கட்டாயம் சினம் கொள்ளக் கூடும். ஏனென்றால், அது அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
இந்தியாவை அடுத்து, தமது நாட்டுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பது மட்டும் தான் சீனாவின் கவலைக்குரிய விடயம் அல்ல. அதற்கும் அப்பால் ஜப்பானுடன் இணைந்து கடல்சார் கண்காணிப்புத் திறனைப் பெருக்கிக் கொள்ளும் உடன்பாடு ஒன்றில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கையெழுத்திட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருக்கும் வரையில், இந்தியப் பெருங்கடலில் கோலோச்சிய சீனா, இப்போது தனக்கு எதிராக அணி சேரும் நாடுகளைக் கண்டு அச்சம் கொள்ளாமல் இருக்க முடியாது. ஏற்கனவே, சீனாவுடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாவுடன், அமெரிக்கா கைகோர்த்துக் கொண்டுள்ளது.
அதையடுத்து, இந்தியாவுடன் ஜப்பான் கைகோர்த்துக் கொண்டது. தொடர்ந்து அவுஸ்திரேலியாவும் இணைந்து கொண்டது. சீனா அடிப்படையில் வெறுக்கும் நாடுகளில் ஒன்று ஜப்பான். இரண்டு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலப் பகைமை இருந்து வருகிறது. இப்போதும், இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பல தீவுகளுக்காக உரிமைப் போர் நடக்கிறது.
ஜப்பானின் பொருளாதார வளர்ச்சியை சீனா எப்போதுமே தனக்கான அச்சுறுத்தலாகவே பார்த்து வந்திருக்கிறது. இத்தகைய கட்டத்தில், ஜப்பானின் தற்போதைய பிரதமர் சின்ஷோ அபே நாட்டின் நெடுங்கால சட்டதிட்டங்களை மாற்றியமைத்து வருகிறார். அதில் முக்கியமானது, வெளிநாடுகளுக்குச் சென்று போரிட ஜப்பானியப் படைகளுக்கு இருந்து வந்த தடை நீக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தளங்களை அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் அழிவுகளைச் சந்தித்த ஜப்பான், வெளிநாடுகளின் மீது படையெடுக்கவோ படைகளை நிறுத்தவோ தடைகளை விதிக்கும் வகையில் அரசியலமைப்பை ஏற்படுத்தியது. ஆனால், இப்போது ஜப்பான், அந்த விதிமுறைகளை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது. சீனாவுக்கு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எந்தளவுக்கு முக்கியமோ, அதுபோலவே ஜப்பானுக்கும் முக்கியம் தான். ஜப்பானைப் பொறுத்தவரையில் இயற்கையான மூலவளங்கள் அதனிடம் கிடையாது. அது பிற நாடுகளின் கனிம வளங்களை இறக்குமதி செய்து பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு. அந்த வகையில் ஜப்பானுக்கு பாதுகாப்பான கடல் பாதை என்பது அவசியம். அதில் தடங்கல்கள் ஏற்பட்டால் ஜப்பானின் பொருளாதாரம் முடங்கி விடும்.
இந்தியப் பெருங்கடல் வழியாகவே ஜப்பானுக்கு எண்ணெயும், கனிம வளங்களும் எடுத்துச் செல்லப்படுவதால், இதில் சீனாவின் தலையீடுகளை கட்டுப்படுத்த அல்லது சீனாவின் செல்வாக்கு ஓங்குவதை தடுக்க ஜப்பான் விரும்புகிறது. அதனால் தான், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுடன் இணைந்து தனது கடற்பலத்தை பெருக்கி வருகிறது. ஜப்பானுக்கு இன்னொரு வகையில் ஆதரவளிக்கும் நாடு அமெரிக்கா.
இந்த நாடுகளின் கூட்டு, இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டும், கூட்டு கடற்பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. வெளிநாடுகளில் தளம் அமைக்கவும், வெளிநாடுகளுக்கு படைகளை அனுப்பவும் இருந்து வந்த கட்டுப்பாட்டை ஜப்பான் நீக்கியுள்ளதானது சீனாவை சினங்கொள்ள வைத்திருக்கிறது. இதற்கு சீனா வெளிப்படையாகவே அதிருப்தியும் தெரிவித்திருக்கிறது.
இலங்கையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், ஏற்பட்டுள்ள சூழலை ஜப்பான் சரியாக கையாளத் தொடங்கியிருக்கிறது. சீனாவிடம் இருந்து இலங்கை எதனைப் பெற்றுக் கொண்டதோ, அதனை தானாகவே வழங்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும் அபிவிருத்திக்கும் இனி ஜப்பானிய நிதி உதவிகள் அதிகம் கிடைக்கும். ஜப்பானிய முதலீட்டாளர்கள், அதிகளவில் இலங்கையில் கால் பதிக்கின்ற நிலை உருவாகும். அவற்றுடன், இலங்கையின் கடல் கண்காணிப்பு திறனை வலுப்படுத்துவதற்கும் ஜப்பான் உதவப் போகிறது.
இதுபற்றித் தான் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பானிய பயணத்தின் போது முக்கியமாக ஆராயப்பட்டது. ஐந்து நாட்கள் ஜப்பானில் தங்கியிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜப்பானியப் பிரதமர் சின்ஷோ அபே, இரண்டு தடவைகள் சந்தித்துப் பேசியிருந்தார். அதைவிட, இதற்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் மட்டும், இதுவரை உரையாற்றியுள்ள, ஜப்பானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுகின்ற வாய்ப்பும், ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது.
ரணில் விக்ரமசிங்கவின் இந்தப் பயணத்துக்கு ஜப்பான் அதிகளவு முக்கியத்துவத்தை அளித்திருந்தது. காரணம், இது சீனாவுக்கு எதிராக வகுக்கப்படும் ஒரு முக்கியமான மூலோபாயத் திட்டத்தில், இலங்கையையும் பங்காளியாக்குவதற்கானது. உலகில் சில விடயங்களை அமெரிக்கா நேரடியாகவே கையாள்கிறது, சிலவற்றை நோர்வே போன்ற நாடுகளின் ஊடாக நகர்த்துகிறது. இன்னும் சிலவற்றுக்கு ஜப்பானையும் பயன்படுத்துகிறது. இலங்கையில், அமெரிக்காவின் நிதியுதவிகள் அதிகரிக்கப்பட்டாலும், சீனாவைப் போல அதனால் அள்ளி வழங்க முடியாது. ஆனால், அதற்கு ஜப்பானைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதற்காகவும், கடல்சார் கண்காணிப்பு ஒத்துழைப்பில் இலங்கையுடன் கூட்டுச் சேர்வதற்கும் ஜப்பானைப் பயன்படுத்திக் கொள்வதில் மேற்குலகம் முனைப்புக் காட்டுகிறது. இப்போது, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், சீனாவின் தலையீடுகள் பெரிதும் சிக்கலடைந்திருக்கின்றன என்று கூறலாம். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா என்று வலுமிக்க சக்திகள், ஒன்றுபட்டு நிற்கின்றன. இவை தம்முடன் இலங்கையையும் இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளன. இந்தநிலையில், சீனாவுக்கு பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதும் சரி, இந்தியப் பெருங்கடலில் அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதும் சரி, இலகுவான காரியமாக இருக்காது.
இதற்கு முக்கிய காரணம், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள, இலங்கைத் தீவு இப்போது சீனாவின் கையில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கியிருக்கிறது. இதனை சீனா உணர்ந்து கொண்டுள்ளதால் தான், ஜப்பான் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க கொழும்பில் வந்திறங்கிய கையோடு, சீனாவின் விசேட தூதுவராக, அந்த நாட்டு உதவி வெளிவிவகார அமைச்சர், லியூ சென்மின் இலங்கை வந்திருந்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஜப்பானியப் பயணம், சீனாவை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை, அவரது இந்த அவசர பயணம் எடுத்துக் காட்டியிருக்கிறது. அதேவேளை, இலங்கை அரசாங்கம் சீனாவின் கைக்குள் இருந்தவரைக்கும் மேற்குலக நாடுகளால் சாதிக்க முடியாதவற்றை இப்போது அவர்களால் சாதிக்க முடிகிறது என்றால் இலங்கைத் தீவின் கேந்திர முக்கியத்துவம் எத்தகையது என்பதை புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமான விடயமல்ல.

Post a Comment