புத்தளம் ஆதார வைத்தியசாலையை கவனிப்பார்களா..?
-எஸ்.ஆர்.எம்.எம். முஹ்ஸி-
புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் துரிதமாக கொண்டு வரப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த நகரமான புத்தளம் நகரில் உள்ள இவ்வைத்தியசாலையின் மூலம் சுமார் 4 இலட்சம் பேர் மருத்துவ சேவைகள் மூலம் நன்மை அடைந்து வருகின்ற போதிலும் பௌதீக வளங்கள், மனித வளங்கள் என்ற ரீதியில் தொடர்ந்தும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே இது கவனிக்கப்பட்டு வருகின்றது.
புத்தளம், ஆனமடு தொகுதிகளில் உள்ள மக்களுக்கும், கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக புத்தளம் தொகுதியில் வாழும் இடம்பெயர்ந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு முதலான மாவட்ட மக்களுக்கும், இராணுவ முகாம், கடற்படை முகாம், வான் படை முகாம் ஆகியவற்றுக்கும் உள்ள ஒரேயொரு ஆதார வைத்தியசாலை இதுவாகும்.
26 ஏக்கர் விஸ்தீரணம் உடைய இவ்வைத்திய சாலைக்கு தினமும் 600 இற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளர்ப் பிரிவில் சிகிச்சைப் பெறுவதற்கு வருகின்றனர். ஆனால் அங்கு மூன்று வைத்தியர்கள் மாத்திரமே உள்ளனர். கர்ப்பிணித் தாய்மார்களுக்கு படுக்கைகள் இல்லை, ஆய்வு கூட வசதிகள் இன்னும் நவீனமயப்படுத்தப்பட வேண்டியுள்ளது. சிறுவர் வாட், மகளிர் வார்ட், ஆண்கள் வார்ட் விபத்துப் பிரிவு, கண் சிகிச்சைப் பிரிவு,அவசர சிகிச்சைப் பிரிவு என்பன மேலும் பன்மடங்கு அபிவிருத்தியை வேண்டி நிற்கின்றது. பிரேத அறை நவீனமயப்படுத்தபட்டு, குளிரூட்டி வசதிகள் செய்யப்பட வேண்டும்.வைத்தியர், தாதியர்,ஊழியர்கள் இன்னும் அதிகம் தேவை.
சுருங்கக் கூறின் தேவைகளின் மொத்த வடிவமாக புத்தளம் ஆதார வைத்தியசாலை திகழ்கிறது. சுகதார அமைச்சர், பிரதியமைச்சர், மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் வேதனைத் தருகிறது. எனவே இவற்றுக்கான உடன் தீர்வு இந்த வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் துரிதமாக கொண்டு வரப்பட்டு அபிவிருத்து செய்யப்பட வேண்டும் என்று நாம் வினயமாக வேண்டுகிறோம். இது தொடர்பில் அண்மையில் பாராளுமணர் உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி தலைமையில் இடம் பெற்ற புத்தளம் ஆதார வைத்திய சாலை அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடலின் போதும் வலியுறுத்தினோம்.

Post a Comment