துருக்கி குண்டு வெடிப்பில், மரண எண்ணிக்கை 95 ஆக உயர்வு - 3 நாள் துக்கம்

துருக்கி குண்டு வெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.
துருக்கியில் ஆட்சியாளர்களுக்கும் ‘குர்ஷித்’ அமைப்பினருக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதனால் குர்ஷித் அமைப்பினர் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்டு உயிரிழப்பு நிகழ்த்துகின்றனர். எனவே நாட்டில் அமைதி நிலவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமைதிப் பேரணி தலைநகர் அங்காராவில் நேற்று நடந்தது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் தள்ளுமுள்ளு மற்றும் சலசலப்பு ஏற்பட்டது. இதை பயன்படுத்திய தற்கொலை படை தீவிரவாதிகள் 2 பேர் கூட்டத்துக்குள் ஊடுருவி தங்கள் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர்.
இதில் பலர் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டனர். பலர், கை, கால்களை இழந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். அதை தொடர்ந்து அப்பகுதியே போர்களம் போன்று காட்சியளித்தது. பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த தற்கொலை படை தாக்குதலில் நேற்று மாலை நிலவரப்படி 86 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 9 பேர் பலியானதையடுத்து பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இத்தாக்குதலில் 246 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 48 பேரின் நிலைமை மோசமாக உள்ளது. எனவே பலி எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
இந்த தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்கொலை தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் துருக்கியில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
Post a Comment